Published:Updated:

அயர்லாந்துக்கு மிக அருகில்... யாருமில்லா ஒரு தீவு விற்பனைக்கு!

தீவு குறித்த விளம்பரத்தில், ``அங்கிருக்கும் தேவாலயத்திற்குத் தெற்கே மிகப்பெரிய கிரானைட் உருண்டை உள்ளது. பார்ப்பதற்கு உலகம் போன்ற தோற்றத்தை அது கொடுக்கும். அந்தப் பாறை ஒரு சாபக்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அயர்லாந்துக்கு மிக அருகில்... யாருமில்லா ஒரு தீவு விற்பனைக்கு!
அயர்லாந்துக்கு மிக அருகில்... யாருமில்லா ஒரு தீவு விற்பனைக்கு!

னித வாடையே வீசாத நிலப்பகுதி. அதுவும் கடலுக்கு நடுவே உள்ள ஒரு தீவு. அது உங்களுக்குச் சொந்தமாக இருந்தால்...

அயர்லாந்தைச் சேர்ந்த பிரபலமான கவிஞர் அவர். ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் அவருக்குச் சொந்தமாக இருந்த தீவு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ஆர்டோலியன் என்ற அந்தத் தீவு அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு சிறு தீவுகளில் ஒன்று. 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தத் தீவு உங்களுக்குச் சொந்தமாக வேண்டுமென்றும் ஆசைப்படுகிறீர்களா! அதற்குமுன் அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆர்டோலியன் தீவு, கி.மு.1000 வரை மனிதர்கள் குடியிருந்த அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது. அதன்பிறகு ஏழாம் நூற்றாண்டில் அது சுமார் ஐம்பது முதல் எழுபது துறவிகளின் புகலிடமாக இருந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய ஒரு தேவாலயமும் ஒரு பலிபீடமும் இன்னமும் சிதைந்த நிலையில் அங்கிருக்கின்றன. அங்கு அந்தத் துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்களைத் தவிர அதன்பிறகு யாரும் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கவில்லை.

ஆர்டோலியன் தீவில் ஒரு மிகப்பெரிய பாறாங்கல் அதன் ஓரங்களில் செதுக்கப்பட்டிருக்கின்றது. அதைச் `சாபக்கல்'லாகத் துறவிகள் பயன்படுத்தியிருக்கலாம். இத்தகைய ஏற்பாடுகள் மூலமாக வைக்கிங் போன்ற அதிரடி எதிரிகளை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராஜ தந்திரிகள் கொஞ்சம் நிறுத்திவைக்க முடிந்தது. எட்டாம் நூற்றாண்டு இறுதிவரை அவர்களிடமிருந்து தப்பிக்க, தீவுகளைச் சூறையாடிக் கொண்டிருந்த கூட்டங்களிடமிருந்து இந்தத் தீவைக் காப்பாற்ற இது பயன்பட்டது. 

தீவு குறித்த விளம்பரத்தில் மேலும், ``தேவாலயத்திற்குத் தெற்கே மிகப்பெரிய கிரானைட் உருண்டை உள்ளது. பார்ப்பதற்கு உலகம் போன்ற தோற்றத்தை அது கொடுக்கும். மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கும் அந்தப் பாறை சிறப்பானதோர் உருளைப் பாறை" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்ற உருளைப் பாறைகளைப் பல்வேறு தீவுகளில் பயன்படுத்தியுள்ளனர். ஸ்லீகோவிலிருக்கும் இனிஷ்முர்ரே (Inishmurray), கோ.கோர்க்கில் அமைந்துள்ள பால்லிவோர்னி(Ballyvourney), ஸ்காட்லாந்திலிருக்கும் ஆர்ரன் (Arran) போன்ற பகுதிகளில் இதுமாதிரியான பாறைகள் உள்ளன. அவை சாபக்கற்களாகப் பயன்பட்டதற்கான தொல்லெச்ச ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்தத் தீவு 1969-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை அயர்லாந்தின் புகழ்பெற்ற கவிஞர் ரிச்சர்ட் மர்ஃபிக்குச் சொந்தமாக இருந்தது. இதுபோன்ற அமைதியான தனிமையான தீவைச் சொந்தமாக்கிக் கொண்டதற்குக் காரணமும் இருந்தது. அதை அவரே தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார்,

``இந்தத் தனித்துவமான தனிமையில் ரசிக்கவேண்டிய அழகான தீவை வாங்குவதில் நான் பேரார்வம் கொண்டிருந்தேன்.  தேனீக்கூடுகளுக்கு மத்தியில் துறவிகள் வாழ்ந்த புனிதமான இந்த நிலத்தை அதன் இயல்புநிலை மாறாமல் பாதுகாக்க எனக்கு இதைச் சொந்தமாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை"

மர்ஃபி ஆர்டோலியன் தீவைத் தன் நிரந்தரமான வீடாகக் கருதவுமில்லை, அவர் அங்கு அப்படி வாழவுமில்லை. அங்கிருந்த இயற்கையான சூழலின்மீது அவருக்குத் தனி ஆர்வமிருந்தது. அங்குச் சென்ற போதெல்லாம் அங்கிருந்த சிதிலமடைந்த நினைவுச் சின்னங்களை அவர் பார்க்கத் தவறியதில்லை. அந்தத் தீவைப் பற்றி அவர் எழுதிய கவிதையில்,

அபிரகப் பாறைகளுக்கு மேலே
ஏரி, உருண்ட பாறை, தேவாலயம்
இடிந்துகிடந்த கட்டுமான துண்டுகள்
அனைத்து ஆழ்ந்த அமைதியை,
பாறைகளும் புற்களும் தந்த முத்தங்களில்
இயல்பான வாழ்வை,
அங்கிருந்த பூக்களோடு சேர்த்து 
எனக்கும் மலரச் செய்தது.

மர்ஃபி இந்தத் தீவு அதன் இயல்புநிலை மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் ஆர்டோலியன் தீவை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற ஆசைப்பட்டார். அதற்காகவே 1980-களில் அயர்லாந்து அரசாங்கத்திற்குப் பரிசளித்தார். ஆனால், மிகவும் மந்தமாக அக்கறையின்றி இந்தத் தீவு பராமரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்துத் தாங்கமுடியாமல் மீண்டும் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, தனக்கு மிகவும் நம்பகமான நண்பர் ஒருவருக்கு அதை விற்றார். அவர்தான் இன்றுவரை அந்த நிலத்தின் இயல்பு மாறாமல் பராமரித்து வருகிறார். அந்தத் தீவு மனிதத் தலையீடுகளே இல்லாமல்தான் நீண்டகாலமாக இருக்கிறது. அதேபோல், மற்ற உயிரினங்களும் அங்கில்லை என்று சொல்லமுடியாது. விலங்குகள் எதுவும் அங்கு வாழவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான பறவையினங்கள் ஆர்டோலியன் தீவுக்கு வந்து செல்கின்றன. அங்கும் வாழ்கின்றன. அவற்றின் வாழ்வுக்குத் துணைபுரியும் வகையில் இரண்டு நன்னீர் ஏரிகளும் அங்கிருக்கின்றன. 

ஆர்டோலியனில் பறவைகளுக்கான வாழிடம் மிகச் சிறப்பாக உள்ளது. கல்ஸ் (Gulls), ஃபல்மார்ஸ் (Fulmars), மான்க்ஸ் ஷியர்வாட்டர்ஸ் (Manx Shearwayers), பெட்ரெல்ஸ் (Petrels) போன்ற பல்வகைப் பறவைகள் அந்தத் தீவைச் சார்ந்து வாழ்ந்துவருகின்றன. அதிகமான கடல் பறவைகளுக்குத் தேவைப்படும் வாழ்வாதாரமும் நீராதாரமும் அங்குக் கிடைக்கின்றன. இதுபோக வசந்த காலத்தில் வட அமெரிக்காவைச் சேர்ந்த வலசை வரும் வேட்டையாடிப் பறவையான பொறி வல்லூறு (Peregrine Falcon) அந்தத் தீவில் ஒவ்வோர் ஆண்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. பார்னக்கில் (Barnacle geese) என்ற ஒருவகை வாத்து இனம் இலையுதிர் காலத்தில் ஐரோப்பாவுக்கும் அங்கிருந்து குளிர்காலத்தில் அந்தத் தீவுக்கும் வருகின்றன.

ஆர்டோலியன் தீவில் மின்சாரமோ ஓடுகின்ற நீர்நிலையோ எதுவுமில்லை. ஆனால், நவீனகாலக் கட்டடமொன்று மழைநீர் சேகரிப்புச் செயல்முறைகளோடு கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தை அந்தச் சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுபாடும் ஏற்படுத்தாத வகையில் மாற்றியமைக்க வாங்கப்போகும் நபருக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது. 1.4 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்த ஆர்டோலியன் தீவு தற்போது உலகம் முழுவதுமுள்ள நில விற்பனைச் சந்தைகளில் விளம்பரத்துக்கு விடப்பட்டுள்ளது. இயற்கையை அதன் இயல்பிலேயே தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அந்தத் தீவு இத்தனை ஆண்டுகளாக அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான கவிஞர் ரிச்சர்ட் மர்ஃபியின் லட்சியம் இந்த விற்பனையால் மேலும் பாதுகாக்கப்படுமா இல்லை, நுகர்வுப் பசியுடைய தாராளவாத உலகத்தில் வாழும் ஏதோவொரு பண முதலையிடம் சிக்கிக் காசாக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.