Published:Updated:

``அந்த கீச் கீச்தான் எங்களுக்கு அலாரமே!’’ சிட்டுகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி

``அந்த கீச் கீச்தான் எங்களுக்கு அலாரமே!’’ சிட்டுகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி
``அந்த கீச் கீச்தான் எங்களுக்கு அலாரமே!’’ சிட்டுகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி

``இப்போ, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளும் இருபதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளும் வர ஆரம்பிச்சிருக்கு. காலையிலும் மாலையிலும் அதிமகான சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு வரும்.’’

80-களில் பிறந்தவர்களுக்குத் தெரியும். கிராமமோ, நகரமோ தங்களது வீடுகளில் `கீச் கீச்’ என்ற ஒலியுடன் பறந்து வரும் சிட்டுக்குருவிகளை பார்க்காமல் அவர்களது பொழுதுகள் விடிந்ததும் இல்லை; முடிந்ததும் இல்லை. வீடுகளில் மாட்டி வைத்திருக்கும் போட்டோக்களுக்கு பின்னே, சாமி மாடம், நிலைப்படிகள் என்று கிடைத்த இடத்தையெல்லாம், சிட்டுக்குருவிகள் ஆக்கிரமித்துக் கூடுகட்டி, வாடகை கொடுக்காமல் வாழும். காலை, மாலைப் பொழுதுகளில் அதன் கீச் கீச் ஒலி ஏற்படுத்தும் ஏகாந்தத்தை, வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆனால், அவையெல்லாம் வெறும் கனவாகப் போய்விட்டது இப்போது. நகரங்களில் மட்டுமல்ல, குக்கிராமங்களில்கூட இப்போது சிட்டுக்குருவிகள் குறைந்துவிட்டன. அவற்றுக்கு எமனாகிப்போனது மனித இனம். அதிகமாக விவசாயத்தில் நாம் பூச்சி மருந்துகளைப் பயன்படுத்துவது, வயல்வெளிகளை வீட்டுமனையாக்குவது என எல்லாம் சேர்ந்து மொத்தமாகச் சிட்டுக்குருவி இனம் அருகிப்போனதற்குக் காரணமாகிவிட்டது. 

இந்நிலையில், ``சிட்டுக்குருவிகள் எங்களுக்குப் பிள்ளைகள் மாதிரி. பானைகள் வச்சு, எங்க வீட்டுக்குத் தினமும் 50-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வந்துபோகச் செய்திருக்கிறோம். அவற்றின் கீச் கீச் ஒலிதான் எங்களுக்கு அலாரம்’’ என்று சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் பட்சிராஜனாக மாறி இருக்கிறார்கள் கரூரைச் சேர்ந்த தம்பதியர். கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதிதான் சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் அந்தத் தம்பதி. இருவரும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். தங்கள் வீட்டுப் பால்கனியில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பானைகளில் கம்புகளை வைத்துக் கொண்டிருந்த இவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

``விதை பரப்புதல், மகரந்தச் சேர்க்கைக்கு வழிபண்ணுதல், உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்குவகித்தல், இயற்கை சமநிலைக்கு ஒத்துழைத்தல் என்று இந்தச் சின்னஞ்சிறிய உயிரினமான சிட்டுக்குருவிகள் செய்யும் உதவிகள் அளவில்லாதவை. ஆனால், நமது வளர்ச்சி மோகம் அவை அழிவதற்குக் காரணமாயிட்டு. நானும் என் மனைவியும் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறோம். பொதுவாக, எங்க இரண்டு பேருக்குமே இயற்கை மீது அலாதி ஆர்வம். எங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வைத்து, மலை காடுகளைவிட்டு வயல்வெளிகளுக்கு வரும் யானைகளைத் தடுக்க வழி, அதிகமாகப் பெருகிவிட்ட மயில்களைக் கட்டுப்படுத்த என்ன வழி என்று பல்வேறு சூழலியல் சார்ந்த ஆய்வுகளைச் செய்ய வைத்திருக்கிறோம். இந்த நிலையில்தான், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, எங்க வீட்டு சமையலறையில் உள்ள காற்றை வெளியேற்றும் ஃபேன் உள்ள துவாரத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது

அதைப் பார்த்ததும், நானும் என் மனைவியும் குழந்தைகள்போல குதூகலமாயிட்டோம். அதுக்கு, தண்ணி, உணவெல்லாம் கொடுத்தோம். அதனால், அந்தக் குருவி கீச் கீச் ஒலியுடன் எங்க வீட்டுக்குள், வீட்டைச் சுத்தின்னு உலா வந்துச்சு. உடனே, நானும் என் மனைவியும் சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு பண்ணினோம். அவை வசிப்பதற்கு ஏதுவான பானைகளால் செய்யப்பட்ட கூடுகளை வாங்கிவந்து, வீட்டு பால்கனி, மொட்டைமாடின்னு பல இடங்களில் வைத்தோம். 50-க்கும் மேற்பட்ட பானைகளை வைத்தோம். அதோடு, பானைகளில் கம்பு, தினைன்னு உணவையும் வைத்தோம். வீட்டைச் சுத்தி அங்கங்கே சிறுசிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தோம். ஆரம்பத்துல, குருவிகள் வரலை. ஆனால், போகப்போக ஒவ்வொரு சிட்டுக்குருவியா எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சது. இப்போ, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளும், இருபதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளும் வர ஆரம்பிச்சிருக்கு. காலையிலும் மாலையிலும் அதிகமான சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு வரும். 

எங்க வீட்டுக்கு பக்கத்துல மஞ்சள்கொன்றை மரம் ஒன்று இருக்கு. அதுலயும் சிட்டுக்குருவிகள் இப்போ அதிக எண்ணிக்கையில் வந்து அமருதுங்க. இந்தச் சிட்டுக்குருவிகள்தாம் எங்களுக்கு பிள்ளைகள் மாதிரி. தினமும் அதிகாலையில் எங்க வீட்டைச் சுத்தி இந்தச் சிட்டுக்குருவிகள் எழுப்பும் கீச் கீச் ஒலிதான் எங்களை அலாரமா இருந்து எழுப்பும். சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு அதிகம் வருவதால், பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் ஆர்வமுடன் வந்து பார்ப்பாங்க. எங்க பகுதி முழுக்க தினமும் 200-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பறக்குதுங்க. எங்க பகுதி மக்களுக்கு சிட்டுக்குருவிகளை வளர்ப்பது பற்றிய துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பறவைகள் இயற்கைச் சூழலியலுக்கு அவ்வளவு நன்மைகள் செய்பவை. ஆனால், பறவை இனங்களை ஒவ்வொன்றாக நாம் அழித்து வருகிறோம். அதனால், நாம் ஒவ்வொருவரும் பறவைகளை வளர்த்தெடுக்க ஏதாவது ஒருவழியில் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், பல இயற்கைச் சீர்கேடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்து முடித்தார்கள். 

அங்கே நாம் இடையிடையே கேட்ட சிட்டுக்குருவிகளின் கீச் கீச் ஒலி, நம் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டு இன்பம் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு