Published:Updated:

``காடு என்பது பொழுதுபோக்கு நிலம் அல்ல!" - ரவீந்திரன் நடராஜன்

"மனித அத்துமீறல் அனைத்து உயிர்களுக்குமே ஆபத்துதான். உயிரினங்களின் வாழ்விடத்திலிருந்தே மனிதன் தன் அத்துமீறலைத் தொடங்கிவிடுகிறான். உயிரினங்கள் அழிவது என்பது ஒன்றன்பின் ஒன்றாக நடக்ககூடியவைதான். அதில் மனிதனும் இருக்கிறான் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கவேண்டும்."

``காடு என்பது பொழுதுபோக்கு நிலம் அல்ல!" - ரவீந்திரன் நடராஜன்
``காடு என்பது பொழுதுபோக்கு நிலம் அல்ல!" - ரவீந்திரன் நடராஜன்

வ்வொரு நாட்டிற்கும் காடுகள்தாம் நுரையீரல் என்பார்கள். மனிதர்கள் என்ன செய்கிறோமோ அதன் பிரதிபலிப்பைக் காடுகள் கொடுத்துவிடுகின்றன. அப்படிப்பட்ட காடுகளின் தற்போதைய நிலைமை? இந்தியாவில் மொத்தக் காடுகளின் பரப்பு 6,30,000 சதுர கிலோமீட்டர். நம் நாட்டில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதக் காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். காடுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை பற்றி பறவையியல் ஆய்வாளர் ரவீந்திரன் நடராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

``வன உயிர்கள் பாதுகாப்பு கடந்த காலத்தில் இருந்ததைவிட தற்போது முன்னேற்றமடைந்துள்ளதாகக் கருதுகிறீர்களா? காட்டுயிர்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு இருக்கிறது?"

``வன உயிர்களின் பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் வெளிப்படைத்தன்மைக்கு வந்திருக்கிறது. இதனால் வன ஆர்வலர்கள் வனத்திற்குள் சென்று வருவதற்கு அதிகமான அளவு முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோக டிஜிட்டல் யுகம் என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தால் செய்திகள் அதிவிரைவாகப் பரவுவது நல்ல விஷயம். வன உயிர்கள் பற்றிய செய்தியையும்  ஆவணப்படுத்தலையும் சமூக வலைதளங்களின் வழியாகவும் வன ஆர்வலர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு என்பது இந்தச் சமுதாயத்தில் 4 முதல் 6 சதவிகிதம் மக்களுக்கு மட்டும்தான் சரியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதே என் கருத்து. மற்றவர்கள், வனவிலங்கு பற்றிய செய்தியை ஊடகத்தின் வாயிலாக மட்டும்தான் தெரிந்துகொள்கிறார்கள். ஊடகத்தின் கடமை இந்த இடத்தில் மிகவும் முக்கியமானது. விழிப்புணர்வு ஏற்படுவதன் முதல்படி உண்மைச் செய்தியை வெளிக்கொணர்வதே ஆகும்."

``மனிதர்களின் அத்துமீறல்களால் பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தான நிலையில் தற்போதுள்ள உயிரினங்கள் பற்றிச் சில வார்த்தைகள்…?"

``மனித அத்துமீறல் அனைத்து உயிர்களுக்குமே ஆபத்துதான். உயிரினங்களின் வாழ்விடத்திலிருந்தே மனிதன் தன் அத்துமீறலைத் தொடங்கிவிடுகிறான். காடுகளில் மரம் வெட்டுதல், சுற்றுலாத் தலமாக மாற்றுவது, வனவிலங்குகளைத் துன்புறுத்தல், காட்டுக்குள் சாலைகள் அமைத்தல் போன்ற காரியங்கள் வனம் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. அதே சமயத்தில் ஆறுகளையொட்டி அமைந்துள்ள சமதளக் காடுகளைப் பொறுத்தவரை அங்கிருக்கும் தொழிற்சாலைக் கழிவுகள், நச்சுப்புகை போன்ற மாசுபாடுகளால் நாம் பல காடுகளை இழந்து வருகிறோம். எடுத்துக்காட்டாகக் கடலோரமாக இருக்கிற அணு உலைகளால் ஏற்படும் கழிவுகள், உப்பளங்கள், இறால் பண்ணைகள் என்பவை மனிதனின் உச்சகட்ட வளர்ச்சி என்றாலும் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்தைத் தருகின்றன. மனிதன் பணம் என்ற நோக்கில் செல்வதால்தான் இயற்கையை இழந்து நிற்கிறோம். உயிரினங்கள் அழிவது என்பது ஒன்றன்பின் ஒன்றாக நடக்கக்கூடியவைதான். அதில் மனிதனும் இருக்கிறான் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கவேண்டும்."

``காடுகளை அதிகரிப்பதற்கு மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதுமா! அதையும் தாண்டி இன்றைய இளைஞர்கள் செய்யவேண்டியது என்ன?"

``மனிதர்களாகிய நாம் எந்தவித காரியத்தையும் காடுகளுக்குள் செய்யாமலிருந்தாலே போதும். காட்டுப் பகுதிகளில் இருக்கும் மரங்களை வெட்டி அவற்றைப் பாழ் நிலமாக மாற்றாதீர்கள். சில காலங்களாக நாம் பாரம்பர்ய மரங்களை இழந்து வருகிறோம். பசுமை படர்ந்த அனைத்து இடங்களும் காடுகள் அல்ல. அதில் சில பசுமை போர்த்தப்பட்ட பசும்பாலைவனங்கள். நீங்கள் உண்மையாகவே வனத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்று நினைத்தால் பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு நம் நிலத்தைச் சேர்ந்த பூர்வீக மரங்களை நட்டு வளருங்கள். 1000 மரங்களை நட்டோம் என்றால் குறைந்தது அதில் 200 மரங்களாவது உயிர் பிடித்துவிடும். அதற்கான செயல் திட்டங்களை வழிவகுத்தால் சிறிதளவு காடுகளைக் காப்பாற்ற இயலும்."

``இயற்கை விழிப்புணர்வு பற்றி 1500 ஆசிரியர்கள் 10,000 மாணவர்கள் என்ற உங்கள் இலக்கிற்குக் காரணம்?"

``ஆண்டுதோறும் 10,000 மாணவர்களையும் 1500 ஆசிரியர்களையும் சந்தித்து இயற்கை மீதான கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்த 10,000 மாணவர்களில் 500 மாணவர்களாவது இயற்கை பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சிதான். 1500 ஆசிரியர்களில் 100 முதல் 200 வரையிலான ஆசிரியர்கள் நான் சொன்ன கருத்துகளை அடுத்துவரும் மாணவர்களிடம் கூறினாலே போதும் எனக்கு வெற்றிதான். இந்த எண்ணிக்கை என்பது ஒரு சங்கிலியாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக மாணவர்களிடையே இயற்கை பற்றிய விழிப்புணர்வு, பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சி போன்றவற்றைப் பற்றிச் சொல்லி வருகிறேன். எந்தச் செயலையும் நான் நாளைக்கே பயன் தரும் என்ற நம்பிக்கையில் செய்யவில்லை. எப்படியும் நான் போடும் விதை ஒரு நாள் முளைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது."

ஓவியம்: விக்னேஷ் குமார்.சு

``சமீபத்தில் மதுரையைச் சுற்றியுள்ள ஏரிகளில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் அவற்றில் வாழ்ந்த பல பறவைகளின் கூடுகள் அழிந்தன. அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தின் இத்தகைய அறிவியலற்ற செயற்பாடுகளைக் களைவது எப்படி?"

``நீர்நிலைகள் பாதுகாப்பு எல்லாம் பொதுப்பணித்துறையிடம் இருக்கிறது. அந்த நீர்நிலை சார்ந்து இருக்கக் கூடிய நீர்வாழ் பறவைகள், நீர் நாய்கள், வனச்சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட விலங்குகளாகவும் இருக்கும். அதைப் பற்றிய தகவல் எல்லாம் வனத்துறையிடமே இருக்கும். அடுத்து அங்கிருக்கும் மக்கள், அவர்களுக்கு அங்கு வாழும் பல்லுயுர்ச்சூழல் பற்றிய புரிதல் இருக்கவேண்டும். அந்தப் புரிதலை ஏற்படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு மூவரிடத்திலும் இல்லை. வனத்துறைக்கு இங்க இருக்கிற பல்லுயிர் பற்றிய அறிவு இல்லை. பொதுப்பணித்துறையில் நீர் மேலாண்மை என்பது மிக மிக மோசமான நிலையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. மக்களும் விவசாயத்தின் மீதான பார்வையை மாற்றிக்கொண்டு லாபம் என்ற நோக்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதனால் குளங்களும்  கண்மாய்களும் அவற்றின் வழித்தடத்தை இழந்து தவிக்கின்றன. இப்போது அரசாங்கமே குளங்களையும், ஏரிகளையும் ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டுகிறது. இத்துறை வல்லுநர்களுக்கு அடித்தள மக்களுடன் எப்படி இணைந்து பணியாற்றுவது என்ற அறிவுகூட இல்லை. அடுத்தது வனத்துறை, இந்தத் துறையால் அரசுக்கு வருவாய் ஈட்டிதர முடியாது. பொருளாதாரத்தை ஈட்டித் தராத துறைக்கு எதற்காக அதிகச் சம்பளத்தைக் கொடுத்து வேலையில் வைத்திருக்கிறோம் என்ற கண்ணோட்டத்துடன்தான் இந்த அரசாங்கம் வனத்துறையைப் பார்க்கிறது. இப்படிப்பட்ட பரிதாப நிலையில்தான் நம் காடுகளும், பல்லுயிரி வளங்களும் இருக்கின்றன. இனியும் பாதுகாக்கப்படாமல் இருந்தால் வேட்டையாடி கைகளிலும், பெரிய கார்ப்பரேட் கைகளிலும் சிக்கி மாட்டிக்கொள்வோம்."

``காடுகள் தினத்தில் வருங்கால மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் யாது?"

``காடுகள்தான் நம் உலகத்தின் நுரையீரல். அப்படிப்பட்ட இடத்தைக் காற்று மாசுபாடு என்ற நோய் தாக்கினால் எப்படியிருக்கும். இதை ஈடுகட்ட ஒரே மருந்து காடுகள் வளப்படுவது மட்டுமே. ஆனால், காடுகளின் வழியே சாலை அமைத்தல், சுற்றுலா தலங்கள், பணப்பயிர் பயிரிடுதல் போன்ற காரியங்களால் நாம் பாதி வளத்தை இழந்துவிட்டோம். வருங்கால மாணவர்களுக்குக் காடுகளின் மீதான பார்வையை மாற்ற வேண்டும். அது பொழுதுபோக்கு நிலம் அல்ல. அவை கூட்டாகச் சேர்ந்த பல்லுயிரியத் தளமாகும். அதனிடமிருந்து அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிறோம். நம் தேவைக்கு ஏற்றப்படி அவற்றை அழித்து வருகிறோம். நம் தேவையையும் பேராசையையும் எப்பொழுது குறைத்துக் கொள்கிறோமோ அப்போதுதான் அந்த வளத்தைக் காப்பற்ற இயலும்."

``காட்டுத்தீ இன்று பரவலாகப் பரவி வருகிறது. இதற்குக் காரணம் கால நிலை மாற்றமா அல்லது மனிதத் தலையீடுகளா?"

``நமது பகுதிகளில் காலநிலை மாற்றத்தாலோ அல்லது இயற்கை மாற்றத்தாலோ காட்டுத்தீ பரவுவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. இதற்கு முழுக்க முழுக்கக் காடுகள் மீது ஏற்பட்டிருக்கும் மனிதனின் ஆளுமையும் அலட்சியமும்தான் காரணம். முன்னொரு காலத்தில் மேய்ச்சல் தளங்களில் கோடைக்கு முன்னரே புதிதாக வளரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளுக்காகக் காடுகளில் சிறிய பரப்பில் தீ வைப்பார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் காடுகளின் வளம் சுருங்கிக்கொண்டே வர வரக் காட்டுத்தீயால் பல்லுயிர் வளங்கள் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது. சுற்றுலா தளங்களில் மனிதர்களால் ஏற்படும் வன்முறைச் சம்பவத்தாலும் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது. சாலைப்பகுதியையொட்டியுள்ள காடுகள் மனிதர்களின் செயலால் (புகைபிடிப்பது, கேளிக்கை விளையாட்டுகள்) பெரும் சேதமடைகின்றன. "

``நீங்கள் பயணித்த முதல் காடு அதில் ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி ஓரிரு வார்த்தைகள்?"

``என்னிடத்தில் காடு என்ற விதை போட்ட இடம் தேக்கடி. சிறுவயதில் அப்பாவுடன் சென்றிருந்தேன். அங்கிருக்கும் காட்டு யானைகளையும் மான்களையும் அந்த வயதிலேயே நேசித்திருந்ததால் அந்த இடம் என் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. இன்றும் காட்டு யானைகள் கூட்டமாக ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குத் தண்ணீரில் நீந்திச் செல்லும். அந்தச் சமயத்தில் குட்டிகள் எல்லாம் கரையேற முயற்சி செய்யும். அதைப் பார்க்கும் பெரிய யானைகள் அவற்றை அழகாக முட்டித் தூக்கி விடும். அந்த நிகழ்வை ஒரு மழைச்சாரலுக்கு நடுவில் பார்த்த அந்தத் தருணம் இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. பெரிய புற்களுக்கு நடுவில் சாம்பார் மான் தன் தலையைக் கம்பீரமாகத் தூக்கிக் காட்டும் நிகழ்வு இருக்கிறதே, அதைக் காண்பதற்கே ஒரு பிறவி எடுத்து வரவேண்டும். காடுகள் என்ற பயணத்தை சிறு வயதிலேயே என் தந்தை ஆரம்பித்து வைத்துவிட்டார். அவரின் நிழலிருந்து நான் தொடர்ந்துவருகிறேன்."