Published:Updated:

பஞ்சவர்ண கிளி மட்டுமல்ல; குரங்கும் இருக்கு பாஸ்!

பஞ்சவர்ண கிளி மட்டுமல்ல; குரங்கும் இருக்கு பாஸ்!
பஞ்சவர்ண கிளி மட்டுமல்ல; குரங்கும் இருக்கு பாஸ்!

செங்கால் குரங்கினங்கள் அதிகப்படியான அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. இதற்கு சர்வதேசச் சந்தையில் இருக்கும் அதிகப்படியான 'டிமாண்ட்'தான் இதற்குக் காரணம்.

ல நிறங்கள், பல வண்ணங்கள் கொண்ட அழகிய உயிரினங்களுக்கு வாழ்நாள் கொஞ்சம் குறைவுதான் என்பது இயற்கையின் எழுதப்படாத விதி. அதை எழுதிக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களாகிய நாம்தான். சிலர் செய்யும் தவறுகளால் ஒரு இனத்தின் மொத்த இனமுமே அழிவில் சிக்கிவிடுகின்றன. அவ்வாறு சிக்கிய விலங்குகளில் செங்கால் குரங்கும் (Red-Shanked Douc Langur) ஒன்று. பார்க்க அழகான முகம், வயிற்றின் நிறம் மற்றும் மேல் தோள்பட்டை சாம்பல், முன் கைகள் வெள்ளை, முன்னங்கால் இரண்டும் கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களுடனும், பின்னங்கால்கள் இரண்டும் சிவப்பு நிறமுடனும், முகம் பழுப்பு கலந்த செம்மை நிறத்துடனும், வால் பளபளப்பான வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவ்வளவு நிறத்தை வைத்து இருக்கும் குரங்குகள் "மூத்த பாலூட்டிகளின் ராணி" எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு அழகிய குரங்குகளைப் பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்குமே தனிக் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. 

செங்கால் குரங்குகளில் பெண் குரங்குகளைவிட, ஆண் குரங்குகள் அதிகமான எடையும், உயரமும் கொண்டவை. ஆண் குரங்குகள் 8.8 கிலோ எடை, 59 செ.மீ உயரத்துடனும், பெண் குரங்குகள் 6.6 கிலோ எடை, 56 செ.மீ உயரத்துடனும் காணப்படும். இது உலகின் பழைமையான குரங்கு வகைகளில் ஒன்று. இதன் வால்கள் மட்டும் 75 செ.மீ நீளம் இருக்கிறது. இவை வியட்நாமின் வடக்குப் பகுதி, வடகிழக்கு கம்போடியா மற்றும் லாஸ் (loas) ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. வியட்நாமில் வசிக்கும் குரங்குகளைவிட லாஸில் வசிக்கும் குரங்குகள் வலிமையானவையாக இருக்கின்றன. வியட்நாம் மொழியில் 'ஊக் ங்கு சாக் (Vooc Ngu Sac) என்று அழைக்கப்படுகிறது. தமிழில் 'பஞ்சவர்ண அழகான குரங்கு' என அர்த்தம். 

இவை மிதவெப்ப மண்டலம் மற்றும் பசுமையான வெப்ப மண்டலக் காடுகள், கலப்பு மூங்கில் காடுகளில் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றன. அதிக சுண்ணாம்புச் சத்து உடைய மண்ணில் வாழும் தன்மை கொண்டவை. இவை பெரும்பான்மையாக அடர்த்தியான மரங்களின் வழியாக தங்களின் பாதைகளை அமைத்துப் பயணிக்கும் தன்மை கொண்டவை. மேலும், பழங்கள், பூக்கள், மொட்டுகள் மற்றும் மரத்தின் பட்டைகள் எனப் பலவற்றையும் உணவாக எடுத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டவை. சில நேரங்களில் மென்மையான இலைகளையும் உண்ணும். அதேபோல உணவு உண்ணும்போது தங்களுக்குள் சண்டையிடாமல், பகிர்ந்து உண்ணும். இவை கூட்டமாக வசிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் ஒரு ஆண் குரங்கு, பல பெண் குரங்குகளுடன் சேர்ந்து வசிக்கும். இவை பெரிய குழுக்களாக வசிக்கும் தன்மை கொண்டது. ஒரு குழுவில் 50 குரங்குகள் வரை சேர்ந்து வாழும். தங்கள் வாழ்நாளை பெரும்பாலும் மரங்களில் மட்டுமே செலவழிக்கும் தன்மை கொண்டது. தரையில் மிக அரிதாகவே காணப்படும். தண்ணீர் குடிக்க மட்டும்தான் தரையில் இறங்கும். தான் உறங்குவதற்கு கனமான கிளைகளையும், அடர்ந்த இலைகளையும் கொண்ட அடர்ந்த மரங்களைத்தான் தேர்வு செய்யும்.

PC - www.baodanang.vn

ஆழமான பள்ளத்தாக்குகளில் இவை அதிகமாக வசிக்கின்றன. இரவுக்கு முன் தங்களுடைய இருப்பிடத்தைத் தேர்வு செய்துவிட்டால், விடியும் வரை அங்கிருந்து வெளியே வராது. கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இவை வசிக்காது. மற்ற குரங்குகளைப் போல இவற்றின் வால்களைப் பயன்படுத்தி மரங்களில் தொங்க முடியாது. மற்ற குரங்குகள் தங்கள் வாலைப் பயன்படுத்தி தங்களை மரங்களில் நிலை நிறுத்திக் கொள்ளும். இவை, தன்னுடைய தோள்பட்டை, உடலால் தன்னை மரங்களில் நிலைநிறுத்திக் கொள்கிறது. இவை தனது முக பாவனைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குள் தொடர்பு கொள்கின்றன.

பிப்ரவரி முதல் ஜூன் வரை இவற்றின் இனப்பெருக்கக் காலம். கர்ப்பமான பின்னர் சுமார் 210 நாட்களுக்குப் பிறகுதான் குட்டிகள் பிறக்கும். பிறந்த குட்டிகள் ஆரம்பத்தில் சாம்பல் நிறம் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. குட்டிகள் வளர்ந்து 10 மாதங்கள் கழித்த பின்னர் வண்ண நிறங்களுக்கு மாற ஆரம்பிக்கின்றன. மேலும், தனித்து விடப்பட்ட குட்டிகளுக்கும், பெண் குரங்குகள் பால் கொடுத்து பாசத்துடன் பராமரித்துக் கொள்ளும். இந்தக் குரங்குகளின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகள். 

இவை பெரும்பான்மையான அளவில் வேட்டையாடப்படுகின்றன. சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் விலை போகிறது. இந்த குரங்கள் பாரம்பர்ய மருத்துவத்திற்காகப் பயன்படுத்த கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 2007-ம் ஆண்டு வியட்நாமும், அதன் பின்னர் லாஸூம் செங்கால் குரங்குகளை அழிவின் பட்டியலில் இருப்பதாக அறிவித்தது. இதை வேட்டையாடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனாலும், இந்த இனங்கள் அதிகப்படியான அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. சர்வதேச சந்தையில் இருக்கும் அதிகப்படியான டிமாண்ட்தான் இதற்குக் காரணம். இது போக காடுகள் அழிப்பும், இவை வசிக்கும் காடுகள் விவசாய நிலங்கள் ஆனதும் மற்றொரு காரணம். வியட்நாமில் போர் நடக்கும்போது பெரும்பாலான காடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அவற்றிலும் அதிகமான இழப்பைச் சந்தித்தன, இந்த குரங்குகள். இதனைக் காக்க தனியார் அமைப்புகளும், பல அரசு அமைப்புகளும் உலக அளவில் விழிப்புஉணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

அடுத்த கட்டுரைக்கு