Election bannerElection banner
Published:Updated:

``மழைக்குக் காத்திருக்க வேண்டாம்... காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம்!’’ - துர்கா தாஸ்

``மழைக்குக் காத்திருக்க வேண்டாம்... காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம்!’’ - துர்கா தாஸ்
``மழைக்குக் காத்திருக்க வேண்டாம்... காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம்!’’ - துர்கா தாஸ்

என்னதான் தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டிருந்தாலும், அதை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப்போகிறோம்! அதிகமான நீர் பஞ்சத்தைச் சந்திப்பது ஏழைகள்தானே. அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த விடைதான் நீரோ (Nero).

கடவுள் என்றால் என்ன? எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கடவுள் என்கிறார்கள். அப்படியொரு கடவுள் உண்மையிலேயே உண்டா! ஆம், உலகமெங்கும் ஓரிடம்கூட விடாமல் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தக் கடவுள்தான் தண்ணீர்.

நீங்கள் திறந்துவிடும் குழாயிலோ, நதியிலோ, அணையிலோ, குட்டையிலோ மட்டும் தண்ணீர் இருப்பதில்லை. நிலத்தடியிலிருந்து விண்ணில் மிதக்கும் மேகங்கள்வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் தண்ணீர். அந்தத் தண்ணீரின்றி யாராலும் பிழைத்திருக்கவே முடியாது. இன்று அந்தக் கடவுள் அழிந்துகொண்டிருக்கிறது. நம்மைக் காக்க வேண்டிய கடவுளைக் காக்க நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆம், தண்ணீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துவருகிறது. தண்ணீர் பிரச்னை பல அரசியல் சிக்கல்களுக்கு ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில், நிலத்தைத் தோண்டாமல், பாறைகளைக் குடையாமல், ஆற்றைத் திசை திருப்பாமல், அணை கட்டாமல் நம் தண்ணீர் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒரு தொழில்நுட்பம் கிடைத்தால்! நிலத்தடி நீர் குறைந்துகொண்டே வரும் இந்தக் காலகட்டத்தில் அதைச் சுரண்ட வேண்டிய அவசியமே இல்லாத சூழல் ஏற்பட்டால்!

தண்ணீர் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதென்று முன்னர் சொன்னதன் உள்ளார்ந்த அர்த்தம், அது காற்றிலும் நிறைந்திருக்கிறது என்பதுதான். அந்தக் காற்றிலிருந்து நம் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடிந்தால்! நிச்சயமாக முடியும். அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தீர்த்தா (TEERTHA) என்ற ஸ்டார்ட் அப்.

நிலத்தடி நீர் ஆர்சனிக், ஃப்ளூரைட், கந்தகம் போன்ற வேதிமங்களால் மாசடைந்து வருகின்றன. தேசியளவில் 45 சதவிகிதம் மக்கள்தான் முழுநேர தண்ணீர் விநியோகம் பெற்றுள்ளார்கள். அரசு ஆவணங்களில் பதிவாகியிருப்பனவற்றில் 140 நதிகளின் நீர் பயன்படுத்த உகந்ததாகத் தற்போது இல்லை. காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் மழையும் நிலையானதாக இருக்கப்போவதில்லை. இப்படியொரு சூழ்நிலையில், மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படக் கூடாதென்றால் அதற்கு ஆக்கபூர்வமான சூழலியல் ஒத்திசைவோடு கூடியதோர் அறிவியல் கண்டுபிடிப்பு தேவையாயிருக்கிறது. 

தண்ணீர் எப்போதும் சூரிய ஒளியின் உதவியோடு ஆவியாகிக் காற்றில் கலந்து மேகத்தில் சேகரிக்கப்படுகின்றது. அதன் பின்னர், அந்த மேகங்களிலிருந்து சில காலநிலைச் செயல்முறையால் மழையாகப் பெய்து மீண்டும் நிலத்துக்கு வருகின்றது. இப்படியாகச் சுழற்சி முறையில் தண்ணீர் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், நிகழ்காலத்தில் அந்தச் சுழற்சி மிகத் தாமதமாக, சில சமயங்களில் நடக்காமலேகூடப் போகிறது. இதைத் தவிர்க்க, ``தண்ணீர் ஆவியாகிக் காற்றில் கலந்த உடனே அதை நாம் எடுத்துக்கொண்டால் என்ன? ஆவியாகி மேகத்தில் சேகரிக்கப்பட்டு மழையாகப் பெய்யும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்? அதற்குமுன் நாமே நம் இயந்திரத்துக்குள் மழையை வரவழைக்கலாமே!’’ என்கிறார், தீர்த்தாவைத் தோற்றுவித்த துர்கா தாஸ்.

நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 30 லிட்டர்களிலிருந்து அதிகபட்சமாக 500 லிட்டர்கள்வரை இந்தத் தீர்த்தா (TEERTHA) இயந்திரங்கள் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்றன. இதுவரை 9 நகரங்களில் தீர்த்தா இயந்திரங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காற்றிலிருக்கும் ஈரப்பதத்தில் தண்ணீர் மூலக்கூறுகள் உறைந்திருக்கும். அந்த மூலக்கூறுகளைப் பிடித்து தண்ணீரைப் பிரித்தெடுக்கிறது தீர்த்தா இயந்திரம். இந்த இயந்திரம் குறித்து விவரமாகத் தெரிந்துகொள்ள அதன் நிறுவனரான துர்கா தாஸை சந்தித்தபோது,

``கங்கைச் சமவெளியின் தண்ணீர் முழுவதும் ஆர்சனிக்கால் மாசடைந்திருக்கிறது. எத்தனையோ கிராமங்கள் பற்றாக்குறையால் தவிக்கின்றன. ஒடிசாவிலிருக்கும் ரௌலி என்ற கிராமத்தில் ரயில்வே நிலையத்துக்காக ஓர் இயந்திரம் அமைத்தோம். அங்கிருந்த ஒரு சிலருக்காக அமைத்துக்கொடுத்த இயந்திரம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்த்துவைத்தது. இப்போது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டட நிர்மாணதாரர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கோடிக்கும் அதிகமாகக் கட்டடங்களை விற்கிறார்கள். அதோடு 70,000 ரூபாய்க்கு, வாழ்வாதாரமான நீரை விநியோகிக்கும் ஓர் இயந்திரத்தையும் சேர்த்துக் கொடுங்களென்று கேட்டிருக்கிறோம்.

இதற்குச் செலவாகும் ஆற்றலும் மிகக் குறைவுதான். சாதாரணமாக ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய 0.35 கிலோவாட் மின்சாரமே போதுமானது. இதைச் சூரிய மின் தகடுகள் பொருத்தியும் நம்மால் செய்துகொள்ள முடியும். என்னதான் தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டிருந்தாலும், அதை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப்போகிறோம்! அதிகமான நீர் பஞ்சத்தைச் சந்திப்பது ஏழைகள்தானே. அவர்கள் என்ன செய்வார்கள்?

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த விடைதான் நீரோ (Nero). கிரேக்க மொழியில் தண்ணீர் என்று பொருள். பஞ்சுபோன்ற ஈரமுறிஞ்சிகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக எளிமையாகக் குறைந்த செலவில் இதைத் தயாரித்துள்ளோம். இதற்கான உரிமம் கேட்டுப் பதிவு செய்துள்ளோம். பரிசோதனை ஓட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அது முடிந்ததும், அடுத்த மாதத்தில் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,000 குடும்பங்களுக்கு இதைப் பொருத்திக் கொடுப்போம். இதன் விலையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். இருப்பினும், இதன் விலை சராசரி மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு இதைக் கொண்டுசேர்க்க அரசாங்கமும் எங்களோடு இணைந்து இதில் பங்கு பெற்று முயற்சி செய்தால் இன்னும் எளிமையாகச் சாத்தியப்படும். இந்தக் கண்டுபிடிப்பு யாருக்கு உண்மையிலேயே தேவையோ அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம்’’ என்று கூறினார்.

காற்றிலிருக்கும் ஈரப்பதத்திலிருந்து தண்ணீர் மூலக்கூறுகளைப் பிரித்தெடுக்கும்போது காற்றின் தன்மை மாறுபடலாம். உலகம் முழுவதும் இதுபோன்ற தொழில்நுட்பங்களில் காற்று வறண்டுபோவதும், வெப்பத்தை அதிகப்படுத்துவதும் பிரச்னையாக இருந்துவருகிறது. இதனால், சுற்றுப்புறத்தில் கிடைக்கும் குளிர்ச்சியும் நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்க வேண்டிய ஈரப்பதத்தின் அளவும் மாறுபடலாம். இவற்றால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்பதையும், காற்றிலிருந்து எவ்வளவு ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது மீதம் எந்த அளவில் அந்த ஈரப்பதம் காற்றிலிருக்கிறது, சராசரியாக எவ்வளவு ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கணக்கு வைக்க முடிந்தால் இத்தொழில்நுட்பம் முழுமையடையும். நிலத்தைக் குடைந்து நீரெடுக்க வேண்டிய தேவை இதில் இல்லை. நீருக்காகச் செய்யப்படும் பெரும்பாலான சுரண்டல்கள் இதன்மூலம் குறையும். இருந்தாலும், எதிர்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகளும் அந்த அளவுக்குத் தகுதியானதாகவும் இருக்கும் இந்தத் தொழில்நுட்பம் இதுபோன்ற ஒருசில நடைமுறைச் சிக்கல்களையும் களைந்துவிட்டால் அதிக மக்கள் பயன்படுத்தினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் இசைவான இயந்திரமாக நிலைத்துநிற்கும்.

ரயில்வே நிலையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என்று இதுவரை சுமார் 2,800 இடங்களில் தீர்த்தா அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீரோவும் பல கிராமங்களில் அமைக்கப்படவுள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சூழலியல் ஒத்திசைவோடு தீர்த்து வைத்துச் சுத்தமான குடிநீரைக் கொடுக்கும் வகையிலிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம். ஆம், துர்கா தாஸ் சொல்வதுபோல் மழை பெய்யவேண்டுமென்று நாம் காத்திருக்கத் தேவையில்லை. குடிநீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குத் தேவையான அளவில் அந்த இயந்திரத்துக்குள் நாமே மழையை உருவாக்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு