Published:Updated:

மனிதன் இயற்கையின் எதிரி எனச் சொல்வது தவறா?! இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க!

மனிதன் இயற்கையின் எதிரி எனச் சொல்வது தவறா?! இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க!
மனிதன் இயற்கையின் எதிரி எனச் சொல்வது தவறா?! இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க!

இயற்கையோடு ஒத்திசைந்து வாழ வேண்டிய மனித இனத்தை இயற்கைக்கு எதிரானது எனச் சொல்வது சரியா எனச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதன் எந்தளவுக்குச் சுயநலத்தோடு இயற்கையைச் சூறையாடுகிறான் என்பதை இந்தக் கட்டுரையில் உணர்வீர்கள்.

காடுகளின் வளர்ச்சியும் செழுமையும் அதன் காட்டுயிர் மற்றும் தாவர வளங்களின் சமநிலையைப் பொறுத்தே கணக்கிடப்படும். அதில் மிக முக்கியமானது தாவர வளம். அது இருந்தால்தானே காட்டுயிர்கள் செழிப்பாக வாழமுடியும். அத்தகைய தாவர வளம் நிறைந்த இந்தியக் காடுகள் அதை இழந்துகொண்டிருக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, காடுகளை அழித்துவிட்டு உருவாக்கப்படும் பண மரப் பயிரிடுதல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் அழிக்கப்படும் பகுதிகளுக்கு ஈடாக உருவாக்கப்படும் வனங்களில் எந்த வகைத் தாவரங்கள் பயிரிடப்பட வேண்டுமென்ற ஆய்வின்றிச் செயல்படுதல். இரண்டாவது, ஆக்கிரமிப்புத் தாவரங்கள். முதலாவது காரணத்தாலேயே ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருமளவில் பெருகுகின்றன.

குறிப்பிட்ட நிலத்திற்குச் சொந்தமில்லாத வேற்றுநிலத் தாவரங்களைப் பயிரிட்டு வளர்ப்பதன் மூலம் அவை வளர்ச்சியில் பெருகி அப்பகுதியின் சூழலையே முற்றிலும் அழித்துவிடுகின்றன. அதனால், நிலத்திற்குரிய தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அழிவைச் சந்திக்கின்றன. இதனால் அந்த வனத்தின் வளர்ச்சியே சீரழிகின்றது. இதில் செயற்கைக் காடுகளின் பங்கு மிக முக்கியமானது. வளர்ச்சிக்காக அழிக்கப்படும் காடுகளுக்கு ஈடாக உருவாக்கப்படும் வனப்பகுதிகளில் அயல் தாவரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக அந்தக் காடுகளின் மூலமும் லாபம் பார்க்கும் வகையில் பணப் பயிரிடுதல்களே காடுகளாகக் காட்டப்படுகின்றன. இவை, இயல் தாவரங்களின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றன. அந்த வீழ்ச்சி, காட்டுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழிடச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, லன்டானா போன்ற அயல்நாட்டுத் தாவரங்களின் வளர்ச்சி மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் மான் வகைகளுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. புலிகள் வேட்டையாட முயலும்போது அந்தப் புதர்செடிகளில் சிக்கிக் கொள்வதும், மான்களும் சில சமயங்களில் தப்பிக்க முடியாமல் புதர்களில் சிக்கிக் கொள்வதும் இயல்பான வேட்டைகளில் இடையூறுகளை விளைவிக்கின்றன. 

காட்டுத்தீ ஏற்படும்போது ஆக்கிரமிப்புத் தாவரங்கள் நன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்து விரைவாக நெருப்பைப் பரவச் செய்கின்றன. இதனால், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது வனத்துறைக்குச் சிரமமாகின்றது. காடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இத்தகைய அயல் தாவரங்களால் உணவு கிடைக்காமல் ஊருக்குள் மேய்ந்துகொண்டிருக்கும் காட்டு மாடுகளையும், மான் வகைகளையும் மலைகளையொட்டிய கிராமங்களில் நம்மால் அடிக்கடி பார்க்கமுடியும். இது புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடி விலங்குகளையும் விரைவில் ஊருக்குள் ஈர்க்கின்றன. ஊருக்குள் வரும்போது, காட்டுயிர்களைவிட எளிமையாக வேட்டையாட முடிந்த கால்நடைகள்மீது அவற்றின் கவனம் திரும்புவதில் ஆச்சர்யமேதுமில்லை. மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஆக்கிரமிப்புத் தாவரங்களும் ஒன்று.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பெருவாரியான யூகலிப்டஸ் போன்ற மரங்கள் புல்வெளிக் காடுகள் மற்றும் சோலைக் காடுகளின் இயல்பையே மாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால், நீலகிரியில் மட்டுமே காணப்படும் வரையாடுகளின் வாழிடங்கள் அழிந்துகொண்டிருப்பது ஓர் ஆபத்தான நிகழ்கால உதாரணம். காட்டுக்குள் உணவு கிடைக்காமல் கொடைக்கானலின் நகர்ப்பகுதிக்குள் காட்டு மாடுகள் உலவிக் கொண்டும் உணவு தேடிக்கொண்டுமிருப்பது விளைவுகளை மேன்மேலும் மோசமாக்குகின்றன. 

40 வருடங்களுக்குமுன் இந்தியாவில் அதிகமாக இருந்த அடர்த்தியான வெப்பமண்டல மழைக்காடுகள் குறைந்து திறந்தவெளிக் காடுகள் அதிகமாகிவிட்டன. 1987 முதல் இந்திய வன அளவை நிறுவனம் இந்தியக் காடுகளை அளந்துவருகிறது. அவர்களின் காடு என்ற வரையறைக்குள் வரும் நிலப்பகுதிகள் உண்மையில் காடுதானா என்ற கேள்வி எழுகிறது. இந்திய வன அளவை நிறுவனத்தின்படி ஒரு ஹெக்டேருக்குக் குறைந்தது 10% மரங்கள் இருந்தாலே அது காடாகத்தான் கணக்கிலெடுக்கப்படுகிறது. ஆகவேதான் இவர்களின் பதிவுகளில் அடர்த்தியான காடுகளைவிடத் திறந்தவெளிக் காடுகளின் அளவு அதிகமாக உள்ளது. தற்போதிருக்கும் அடர்த்தியான காடுகள் வகையறாவிற்குள் வனப்பகுதியின் எல்லைகளிலும் அதைச் சுற்றியும் வியாபாரரீதியாக வளர்க்கப்படும் பல ஆயிரம் ஹெக்டேர் பணமரங்களையும் சேர்த்துவிடுகிறார்கள். பண மரங்களை அதிகமாக வளர்ப்பதால் அவையும் அடர்த்தியாகவே காணப்படும். இருப்பினும் அவற்றால் சூழலுக்குப் பயனேதுமிருப்பதில்லை. சூழலுக்குப் பயனளிக்காத இந்தக் காடுகள் எப்படி உருவாகின்றன?

காடு பல வகை உயிரினங்கள் வாழும் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த பகுதி. அதை அளவிடும்போது அதில் வாழும் உயிரினங்களின் பன்மையையும் அளவிட வேண்டியது அவசியம். ஆனால், வன அளவை நிறுவனம் மரங்களைத் தவிர வேறெதையும் தனது கணக்கெடுப்பில் கண்டுகொள்வதில்லை. மரக்கூட்டம் வளர்ந்து நிற்கும் பகுதிகளில் இயற்கையாகவே விலங்குகளின் வரத்து அதிகமாகி அவற்றின் வாழிடமும் அமையத் தொடங்கும். மரக் கூட்டம் வளர்ந்திருந்தும் அங்கு உயிரினங்களின் வாழிடம் அமையவில்லையெனில் அப்பகுதியில் வளர்க்கப்பட்ட மரங்கள் பல்லுயிர்ச் சூழலைச் செழிக்க வைப்பதற்குத் தகுந்தவையன்று. அத்தகைய மரக் கூட்டங்களைக் காடாக நாம் நினைத்துக் கொண்டாலும் இயற்கை அதைக் கண்டுகொள்வதில்லை. அதனால் சூழலுக்கும் எவ்விதப் பயனுமிருக்கப் போவதில்லை. இத்தகைய காடுகளை இயற்கை உருவாக்குவதில்லை. அவை செயற்கையாக உருவாக்கப்பட்ட காடுகள். ஒரு பகுதியிலிருக்கும் வனப்பகுதியை அழித்துப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் அதற்குப் பரிகாரமாக வேறொரு நிலத்தில் மரங்களை வளர்த்து இத்தகைய செயற்கைக் காடுகளை உருவாக்குகிறார்கள்.

காடுகளை அழித்துவிட்டுச் செயற்கைக் காடுகளை உருவாக்குவதோடு காடுகளை அழிப்பதால் அவற்றின் தொடர்ச்சி வெட்டப்பட்டுத் துண்டாக்கப்படுகின்றன. உதாரணமாக NH 72, NH 74 போன்ற சாலைகள் ராஜாஜி தேசியப் பூங்காவை ஊடுருவிச் செல்கின்றன. அதனால் அதில் வசிக்கும் விலங்குகளால் அப்பூங்காவின் வனப்பகுதியை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போகின்றது. மனிதர்கள் பயன்படுத்தும் சாலையைக் கடந்து செல்லவேண்டிய நிலைக்கு விலங்குகள் தள்ளப்படும்போது பல சமயங்களில் நெடுஞ்சாலை வாகனங்களில் அடிபட்டுப் பரிதாபமாக இறந்துவிடுகின்றன. 

செயற்கைக் காடுகள் குறித்துத் தாவரவியல் ஆராய்ச்சியாளர் திரு.கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசினோம்.

``தீவிரமாகச் செயல்பட்டு முறையான ஆய்வுகளோடு செயற்கைக் காடுகளை வளர்த்தால் சிறிதளவாவது இயற்கைக் காடுகளின் தன்மையை மீட்டெடுக்கலாம். அதற்குச் சில காரணிகளை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். அழிக்கப்படும் காடு அமைந்திருக்கும் நிலவியல் தன்மைக்கு ஏற்றவாறான நிலத்தையே தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அழிக்கவிருக்கும் தாவர வகைகளை மீட்டெடுக்க முடியும். அழிக்கப்படும் காட்டில் வளரும் தாவர வகைகளையே மீட்டுருவாக்கம் செய்யப்படும் பகுதியிலும் வளர்க்கவேண்டும். அதில் நம்மால் செய்ய முடியாத விஷயங்களும் உண்டு. இயற்கைக் காடுகளில் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வயதுடையது. ஒவ்வொரு வயதுடைய மரமும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கும். அதன் தன்மைக்கேற்றவாறு தன் பங்கினைச் செய்துகொண்டிருக்கும். ஆனால், செயற்கைக் காட்டில் அனைத்து மரக்கன்றுகளும் ஒரே சமயத்தில் நடப்பட்டு வளர்க்கப்படுவதால் அந்த நன்மை கிடைப்பதில்லை. கடைசியாக அழிக்கப்படும் காடுகளில் வாழும் உயிரினங்களை மீட்டெடுத்து அவை மீட்டுருவாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இல்லையேல் அதே உயிரினங்களை அதே எண்ணிக்கையில் புதிய பகுதியில் மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும். இவையனைத்தையும் செய்தால்தான் வனம் அதன் சொல்லுக்கேற்ற அகராதியோடு முழுமையடையும். ஆனால், இவற்றில் சிலவற்றை முழுமையாகச் செய்வதுகூட நடைமுறைச் சாத்தியமற்றது அல்லது நடைமுறையில் மிக மிகக் கடினமானது. விலங்குகளின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் வெவ்வேறு காடுகளிலிருக்கும் அவற்றின் இனத்தோடு உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் விலங்குகளின் மரபணுப் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. அது அவற்றின் இனத்தையே அழியும் நிலைக்குத் தள்ள வாய்ப்புகளுண்டு."

1980-ம் ஆண்டு தேசிய வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, தவிர்க்கமுடியாத தேவைகளன்றி வேறு எதற்காகவும் பல்லுயிரியச் சூழல் நிறைந்த காடுகளை அழிக்கக்கூடாது. அப்படி அழிக்கப்படும் காடுகளுக்குச் சமமாக அதை அழிப்பவர்கள் வேறு ஏதேனும் பகுதியில் அதே அளவு காட்டினை உருவாக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் தவிர்க்கமுடியாத என்ற வார்த்தையை அனைத்து வகைத் திட்டங்களுக்கும் தொழிற்சாலைகளின் தொடக்கத்திற்கும் மேற்கோள் காட்டிக் காட்டை அழித்துவிடுகிறார்கள். அதற்கு மாற்றாக அவர்கள் வளர்க்கும் காடுகளில் இயற்கையின் இயல்பு மனம் துளியும் வீசுவதில்லை. அங்கும் அவர்களுக்குச் சாதகமாக வியாபார மரங்களை வளர்த்துக் காடாகக் கணக்கு காட்டி அதிலும் லாபம் பார்க்கிறார்கள். ஆக, சட்டத்தைச் சமாதானம் செய்துவிட்டு அதையே மீறிக்கொண்டிருக்கிறார்கள். புள்ளி விவரங்களை முன்வைத்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம். அந்தப் புள்ளிகளிலிருக்கும் புரட்டுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தால் வளர்ச்சிகளைவிடச் சூழலியல் சூழ்ச்சிகளே அதிகமிருக்கின்றன.

இப்படி இயற்கையில் அனைத்து உயிர்களையும் கணக்கில்கொண்டு உருவான பரிணாம வளர்ச்சியை, வெறுமனே நம்முடைய சுயலாபத்திற்காகச் சீரழித்துவிட்டோம். சமநிலையைக் குலைக்கும் பணப்பயிர்களைக் கொண்டுவந்து நட்டோம். அந்தப் பகுதி தாவரங்களைச் சார்ந்திருந்த விலங்குகளின் உணவைப் பறித்தோம், உணவுதேடி ஊருக்குள் வரும்போது மனித-விலங்கு மோதலுக்கு வழிவகுத்தோம், அவற்றின் பாதையிலேயே நம்முடைய இருப்பிடங்களை அமைத்துக்கொண்டோம், பல்லுயிர்ச்சூழல் மிகுந்த காடுகளை அழித்துவிட்டு அதற்கு கணக்குக்காட்ட வெறுமனே மரங்களை மட்டும் நட்டுவிட்டு வேடிக்கை பார்த்தோம்... இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி எந்தவோர் உயிராவது தன்னுடைய தேவையைத் தாண்டி, இயற்கையைச் சுரண்டியதுண்டா? ஆனால், மனிதன் செய்தான். நாம் செய்தோம். இப்படிக் காட்டுயிர்கள் அத்தனைக்கும் எதிரிகளான நாம், இயற்கைக்கும் எதிரிதானே?

அடுத்த கட்டுரைக்கு