Published:Updated:

10 ஆண்டுகளில் 25,000 மரங்கள்... கெரில்லா பயிரிடுதலின் மகத்துவம்!

10 ஆண்டுகளில் 25,000 மரங்கள்... கெரில்லா பயிரிடுதலின் மகத்துவம்!
10 ஆண்டுகளில் 25,000 மரங்கள்... கெரில்லா பயிரிடுதலின் மகத்துவம்!

15 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலுமே கொல்கத்தாவின் பசுமைப் போர்வை நன்றாகத் தானிருந்தது. விரைவிலேயே அந்தக் காடுகள் கான்க்ரீட் காடுகளாக மாறத் தொடங்கின. அதை அனுபவபூர்வமாகப் பார்த்தவர், மாண்டு ஹைத்.

சுமையான சூழல், சுத்தமான காற்று, மரங்கள் நிறைந்த அமைதி நிலவும் ரம்மியமானதோர் இயற்கைச் சூழல். இதை நீங்கள் சில நிமிடங்களாவது அனுபவித்து எத்தனை நாள்கள் இருக்கும்?

கான்க்ரீட் காடுகள் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நகர்ப்புறத்தில் இத்தகைய செழிப்பான பசுமைநிறப் போர்வையை உண்டாக்க வேண்டுமென்பது பலருக்கும் நனவாகாத கனவாகவே இருந்துகொண்டிருக்கும். அந்தக் கனவை கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நனவாக்கிக் காண்பித்திருக்கிறார்.

மாஜெர்ஹத்துக்கு (Majerhet) அருகில் அமைந்திருப்பதுதான் அலிபோர் (Alipore). அந்தப் பகுதியில் வளர்ந்திருக்கும் மா, கொய்யா, கடலை வகைகள், புளி, பேரீச்சம்பழம், பனை, எலுமிச்சை என்று எத்தனை வகை மரங்கள். அந்த மரங்களை ஆக்கிரமித்திருக்கும் பறவைகள்தாம் எத்தனை வகைகள். 

வெறும் குப்பை மேடாகக் காட்சியளித்த அந்த நிலங்களை மீட்டெடுத்து சுமார் 25,000 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார் மாண்டு ஹைத் (Mantu Hait). தன் குழந்தைப் பருவத்தில் அவரும் சராசரி குழந்தைகளைப் போலவே கோடை விடுமுறைக்காகக் காத்திருப்பார். 1980,90-களில் பிறந்த மற்ற குழந்தைகளைப் போலவே அவரும் மரம் ஏறுவது, பழங்களைப் பறித்து ருசிப்பது, கிரிக்கெட் விளையாடியபின் நண்பர்களோடு மரக்கூட்டங்களுக்கு மத்தியில் அதன் நிழலில் ஓய்வெடுப்பது என்று தன் குழந்தைப் பருவத்தைப் பேரானந்தமாகக் கழித்திருக்கிறார். பதின்ம பருவத்தை எய்தியபோது தம் ஊரின் பசுமைப் போர்வை குறைந்துவருவதைத் தன் கண்களால் பார்த்தவர். தான் விளையாடிய நிலத்தில் வளர்ந்திருந்த நிழல் தந்த மரங்கள் வெட்டப்படுவதையும், தம் குழந்தைகள் நாளை ஏறி விளையாடப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய மரங்கள் அழிக்கப்படுவதையும் பார்த்தவரால் மற்றவர்களைப் போல் வெறும் பார்வையாளனாகக் கடந்து செல்ல முடியவில்லை. அங்குதான் மாண்டு மற்ற சராசரி குழந்தைகளிடமிருந்து தனித்து நிற்கிறார்.

Photos Courtesy: Mantu Hait

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலுமே கொல்கத்தாவின் பசுமைப் போர்வை நன்றாகத்தானிருந்தது. விரைவிலேயே அந்தக் காடுகள் கான்க்ரீட் காடுகளாக மாறத்தொடங்கின. அதை அனுபவபூர்வமாகப் பார்த்தவர், மாண்டு ஹைத். 1995-ம் ஆண்டு தான் வசித்த பகுதியான அலிபோர் முழுவதும் மரங்கள் கட்டுமானங்களுக்காக அழிக்கப்படுவதைப் பார்த்தார். மற்றவர்களைப் போலவே அவரும் சமுதாய அழுத்தங்களில் சிக்கியிருந்தார். கல்வி, வேலை, வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த வேண்டும். அனைத்தும் அவரை அழுத்திக் கொண்டிருந்தது. இவற்றுக்கு மத்தியில் தன் நிலத்தின் பசுமை அழிந்து வருவதும் அவரை நெருடிக் கொண்டேயிருந்தது. வழக்குரைஞராகித் தன் வாழ்வை நிலைநிறுத்திக் கொண்ட சமயத்தில், 2010-ம் ஆண்டு தம் பணியைத் தொடங்கினார். அலிபோர் பகுதியின் சாலையோரங்களில் மரம் நடும் பணியைத் தொடங்கினார். சாலையோர நிலப்பகுதிகள் விரைவாக வளர்ச்சிகளுக்குப் பலியாகிக் கொண்டிருந்தன. அதற்கு அனுமதியளிக்கக் காத்திருந்த அதிகாரிகள் அதை மீட்டெடுக்க நினைத்த அவரின் செயல்பாடுகளை மறுத்தனர். மரங்கள் வளர்ப்பதற்காக அவர் இறுதியாகத் தேர்ந்தெடுத்த நிலம் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. அவர்களுக்குக் கடிதம் அனுப்பிவிட்டுக் காத்திருந்தார். எந்தப் பதிலும் வரவே இல்லை. அந்தச் சமயத்தில்தான் அவருடைய நண்பர் மூலமாகக் கெரில்லா பயிரிடுதல் முறையைப் பற்றித் தெரிந்துகொண்டார். 

கெரில்லா பயிரிடுதல் முறையைப் பற்றிப் பல்வேறு நிபுணர்களிடம் பேசியும் பல இணையத் தேடல்களின் மூலமும் விரிவாகத் தெரிந்துகொண்டார். மரக்கன்றுகளைப் பயிரிடுவதற்குச் சட்டப்படியான உரிமங்கள் கிடைக்காத நிலங்களில் தாவர விதைகளைப் பயிரிடப் பயன்படுத்தும் முறையே கெரில்லா பயிரிடுதல். உதாரணமாக, கைவிடப்பட்ட நிலங்கள், தனியார் நிலங்கள், கவனிக்கப்படாத குப்பை கொட்டும் நிலப்பகுதிகள். நேச்சர் மாதே, அலிபோர் சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து மாண்டு விதைகளை வாங்கினார். கொல்கத்தாவின் `வளர்ச்சி'க்கு எதிரான தன் பசுமைப் போரைத் தொடங்கினார். 

அவரது முயற்சியின் முதல் படி அவரை மிக மோசமாகக் கீழே தள்ளியது. மரக்கன்றுகள் அனைத்தும் பராமரிப்பின்றியும் தண்ணீரின்றியும் அழிந்துபோயின. அது அவருக்குப் பேரதிர்ச்சியாகத் தானிருந்தது. ஆனால், தளர்ந்துவிடவில்லை. அவற்றைச் சரியாகப் பராமரிப்பது எப்படியென்று தேடத்தொடங்கினார். தேடலுக்கு எப்போதுமே பலனுண்டு. அவருடைய தேடலும் பலவற்றைக் கற்றுத்தந்தது. எப்போது மரக்கன்றுகளை நடவேண்டும். எப்படிப் பராமரிக்க வேண்டுமென்று அனைத்தையும் தெரிந்துகொண்டார். இதற்கே 2010-ம் ஆண்டு முழுவதும் கடந்துவிட்டது. 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் தன் முயற்சியை மீண்டும் தொடங்கினார். கோடைக்காலத்தில் விதைகளைப் பயிரிட்டு ஓரளவுக்கு வளர வைத்தால், அடுத்துவரும் மழைக்காலத்தில் அவை நன்றாகக் கிளைவிட்டு வளர்ந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டவர், 2011-ம் ஆண்டின் கோடையில் சில வேலையாட்களை நியமித்துக்கொண்டு தன் வேலையைத் தொடங்கினார். அவர் கணக்கிட்டது போலவே அடுத்து வந்த மழைக்காலத்தில் மரங்கள் கிளைவிடத் தொடங்கின. அதற்கு அடுத்த ஆகஸ்ட்டில் பழங்களைக் கொடுக்கத் தொடங்கின. 

``நீங்கள் நட்டு வளர்க்கும் விதைகளின் வளர்ச்சியை, அந்த விருட்சங்கள் விடும் கிளைகளை, அவை தரும் கனிகளைப் பார்த்து ரசிப்பதும் ஒருவகைத் தியானம்தான். இல்லை இதுவொரு தவம். என் தவம் நான் கேட்ட வரத்தைக் கொடுத்தது"- மாண்டு ஹைத். 

அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவர் இதைத் தொடர்ச்சியாகச் செய்தார். அலிபோரின் கவனிப்பாரற்றுக் கிடக்கும் குப்பை கொட்டும் நிலங்களையெல்லாம் தேர்ந்தெடுத்துக் கெரில்லா பயிரிடுதலைச் செய்யத் தொடங்கினார். கோடைக்காலத்தில் பார்த்துக் கொண்டாலே போதும், அதன்பிறகு அவற்றுக்குப் பராமரிப்பு ஒரு தேவையாக இருக்காது. இப்படியாகச் சுமார் 250 வகைகளைச் சேர்ந்த சுமார் 25,000 மரங்களை அலிபோர் முழுக்க வளர்த்திருக்கிறார் மாண்டு. அவர் வளர்த்த மரங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்குச் சுத்தமான காற்றைத் தந்து கொண்டிருக்கின்றன. அவரால் வளர்த்துவிடப்பட்ட நகர்ப்புறக் காடுகளில் தற்போது பறவைகள், கீரிகள், குள்ள நரிகள் என்று பல்வகைக் காட்டுயிர்களும் வருகைபுரியத் தொடங்கியுள்ளன. இதனால், அவற்றின் பல்லுயிர்ச் சூழலும் பெருகியுள்ளது. இனி அந்த மரங்களை அவர் பராமரிக்க வேண்டியதில்லை. அவையே பார்த்துக்கொள்ளும். இன்னும் பெருக்கியும் கொள்ளும். அவற்றை மனிதர்கள் அழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது மட்டுமே இனி மாண்டுவின் வேலை. அதையும் செய்து கொண்டுதானிருக்கிறார்.

``காற்றுத் தர கண்காணிப்புக் கருவிகளை உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஐம்பது வகையான பறவைகள் இருக்கின்றன. அவைதாம், காற்றுத் தர கண்காணிப்பாளர்கள். அவற்றை ஒருபகுதியில் பார்க்க முடிகின்றதா இல்லையா என்பதே அந்தப் பகுதியின் காற்றுத் தரத்தை நமக்கு விளக்கமாகச் சொல்லிவிடும்" - மாண்டு ஹைத்.

பயனற்றுக் கிடக்கும் நிலங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நகர நிர்வாகம் எந்தத் தடையும் செய்வதில்லை. இருந்தாலும், இரவுநேரங்களில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கும்பல்களால் அங்குள்ள மரங்களுக்கு ஆபத்து இருந்து கொண்டேயிருக்கின்றன. கடந்த இரண்டே வாரங்களில் சில நூறு மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. இது தொடர்பாகக் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இரவுநேர காவலுக்கும் ஆள் வைத்துவிட்டார்கள். இருப்பினும் குறைந்தபாடில்லை. 

மாண்டு தன் சக்திக்கு மீறி அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்த காடுகளைச் சில மணிநேரங்களில் அழிக்கத் துடிக்கும் அத்தகைய மனிதர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டின் கோடைக்காலம் வந்துவிட்டது. இந்தக் காடுகளை காவல் காப்பதோடு அவர்கள் அடுத்த காட்டை உருவாக்க விதைகளோடு கிளம்பிவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு