Published:Updated:

`ப்ளீஸ்... இன்னைக்கு மட்டும் கார் வேணாம்!' கொலம்பியாவில் ஒரு `சைக்கிள் புரட்சி' #Ciclovía

திடீரென்று ஒருநாள் அவர்கள் ஞாயிறுகளில் மட்டும் மிதிவண்டிகளைப் பயன்படுத்தினர். வாரத்தில் அந்த ஒருநாளில் மட்டும் வேறெந்த வாகனத்தையும் பயன்படுத்த மாட்டார்கள். இதை சண்டே பாத் (Sunday Path) என்றழைத்தனர்.

`ப்ளீஸ்... இன்னைக்கு மட்டும் கார் வேணாம்!' கொலம்பியாவில் ஒரு `சைக்கிள் புரட்சி' #Ciclovía
`ப்ளீஸ்... இன்னைக்கு மட்டும் கார் வேணாம்!' கொலம்பியாவில் ஒரு `சைக்கிள் புரட்சி' #Ciclovía

கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்! தயவுசெய்து இந்த நகரத்திற்குப் போகாதீர்கள். சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களை வரவேற்கத்தான் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அதுவொரு ஏழை நாடுதான். பல்லாண்டுகளாக உள்நாட்டு வன்முறைகளில் சிக்கிச் சுழன்று பல அடிகளை வாங்கிய நாடு. நகரங்கள் அப்படியொன்றும் பெரிய முன்னேற்றங்களை அடைந்துவிடவில்லைதான். ஆனால், உலகம் முழுவதுமுள்ள நகரங்களுக்கு உதாரணமாக நிற்குமளவிற்கு, உலகளாவிய அரசியல்வாதிகள் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் அளவுக்குச் சிறப்பான திட்டத்தைக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்.

அது 1976-ம் ஆண்டு. நான்கு சக்கர வாகனங்களை வைத்திருந்த பணக்காரர்களின் அட்டூழியங்கள் நிறைந்திருந்தன. தங்கள் கார்களை நடைபாதைகளின் குறுக்கே வேண்டுமென்றே நிறுத்திவிடுவார்கள். போக்குவரத்து சிக்னல்கள் இன்னும் மோசம். ஒரு சாலையில் எத்தனை சிவப்பு விளக்குகளை வேகமாகக் கடக்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போட்டி நடத்துவார்கள். இத்தனை அட்டூழியங்களும் நடந்துகொண்டிருந்தாலும், அந்த நகரத்தில் நல்ல மென்மையான மனிதர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பஞ்சாயத்துகளைப் பற்றிய கவலை கிடையாது. தானுண்டு தன் சைக்கிளுண்டு என்றிருப்பார்கள்.

திடீரென்று ஒருநாள் அவர்கள் ஞாயிறுகளில் மட்டும் மிதிவண்டிகளைப் பயன்படுத்தினர். வாரத்தில் அந்த ஒருநாளில் மட்டும் வேறெந்த வாகனத்தையும் பயன்படுத்த மாட்டார்கள். இதை சண்டே பாத் (Sunday Path) என்றழைத்தனர். அதற்கு முன், அங்கு டெலிவரி ஆட்கள் மட்டுமே மிதிவண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். உடல் ஆரோக்கியம் குறித்து அந்த இளைஞர்களுக்கு வந்த ஞானமே இந்த ஐடியாவுக்கு உயிர்கொடுத்தது. இப்படியே 20 ஆண்டுகள் கழிந்தன. அவர்களும் அதைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தனர். காலப்போக்கில் அது அந்த நகரத்தின் கலாசாரமாக மாறியது. ஆரோக்கியம் மற்றும் சூழலியல் அக்கறைக்கு வித்திட்ட இந்த ஐடியாவை அமல்படுத்திய நகரத்தின் பெயர் பொகோடா (Bogotá). கொலம்பியாவின் தலைநகரம்.

Photo Courtesy: Janey Henning

1995 - 1997 வரை அந்த நகரத்தின் மேயராக இருந்தவர் அன்டானஸ் மோகஸ் (Antanas Mockus). மீண்டும் 2001-03 வரை அவரே மேயரானார். அவர் அடிப்படையில் ஒரு கணிதவியலாளர். அதனால், அவரைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அறிவிற் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதே அவருடைய கனவாக இருந்தது. அப்போதுதான் அந்தச் சமுதாயம், சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்குமென்பது அவருடைய எண்ணம்.

இளம் நடிகர்களை வைத்து, சாலையோரங்களில் மௌன நாடகங்களை (Mimes) அரங்கேற்றினார். அதன்மூலம், நடைபாதைகளை வாகனங்கள் ஆக்கிரமிக்கக் கூடாதென்ற நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தார். அதேபோல் போக்குவரத்து சிக்னல்களை விளக்கும் நாடகங்களும் சாலைகளிலேயே அரங்கேறின. நகர மேலாண்மை அதிகாரிகள் குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதைப் பற்றிச் சிந்தித்தார்கள்; திட்டமிட்டார்கள். 1998-ம் ஆண்டு மேயரான என்ரிக் பெனலோசா (Enrique Penalosa) தன் காலத்தில் அதை நடைமுறைப்படுத்தினார். 'மோகஸ் சண்டே பைக் பாத்' என்று இளைஞர்கள் நடத்திவந்த மிதிவண்டி ஓட்டும் பயிற்சியை, கொண்டாடும் பார்ட்டியாக மாற்றினார். அதன் பெயர் சிக்லோவியா (Ciclovia). கார்களின் புகைக்குள்ளும் சத்தத்திற்குள்ளும் சிக்கிச் சுழன்று மன அழுத்தத்தோடு இருப்பவர்கள் இதில் கலந்துகொண்டு 8,660 அடி உயரமான ஆண்டஸ் மலைத்தொடரின் சுத்தமான காற்றைச் சுவாசிக்க இந்தப் பார்ட்டியில் பங்குபெறலாம். 

"அது சிறப்பான தொடக்கமாக இருந்தது. அனைத்து மக்களுக்குமே ஒன்று புரிந்தது. அந்த நகரம் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. நகரத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்த, அவர்கள் வைத்திருந்த 16,00,000 கார்களுக்கோ, 50,000 டாக்சிகளுக்கோ, 9000 பேருந்துகளுக்கோ, 5,00,000 இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கோ சொந்தமானதில்லை."

அந்த உணர்வுதான் அனைவரிடமும் இத்தகைய அதிசயத்தை நிகழ்த்த உந்துதலாக அமைந்தது. அன்றிலிருந்து ஞாயிறுகளில் தம் அனைத்து வாகனங்களையும் ஒதுக்கிவிட்டு மிதிவண்டிகளை மட்டுமே அந்த நகரவாசிகள் பயன்படுத்தத் தொடங்கினர். 

``சிக்லோவியா இயக்கமாக மாறியது. இயந்திர வாகனங்களை ஒதுக்க வைத்து மனிதத்திற்கான வழியை அந்த மக்களுக்குக் காட்டியது. பொது இடங்களை வாகனங்கள் ஆக்கிரமிக்கக்கூடாது, அது மனிதர்களுக்கானது. அங்கு அவர்கள் கூடிச் சந்தோசமாக வாழ வேண்டுமென்பதைக் காட்டியது அந்த இயக்கம்."

இது மீண்டும் மீண்டும் காதலில் விழுவதைப் போலத்தான். இந்தச் சுற்றத்தின்மீது அதன் இயல்பான சூழலின்மீதும் அந்த மக்களை மீண்டும் மீண்டும் மயக்கமடையச் செய்தது. அவர்களுக்கு ஆரோக்கியத்தின் அருமையும், சுத்தமான காற்றிலிருக்கும் போதையும் புரியத் தொடங்கியது. அதையே தொடர்ந்து தம் கலாசாரத்தின் பகுதியாகச் செய்யத் தொடங்கினார்கள்.

சிக்லோவியா அவர்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுக்கவில்லை. சிறப்பான கல்வியை வழங்கவில்லை. அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தவில்லை. ஆனால், மோகஸ் மற்றும் பெனலோசா கொண்டு வந்த சிக்லோவியா தம் சுற்றத்தின்மீது மக்களுக்கு இருந்த பார்வையை மாற்றியது. மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காத பைக்கர்களையும் ஸ்ட்ரீட் ரேசர்களையும் அமைதிப்படுத்தி அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் வாகனங்களைப் பயன்படுத்தாமல் மிதிவண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியது கொலம்பியாவின் தலைநகரமான பொகொடா. இன்று அவர்களிடம் அமைதி நிலவுகிறது. காவலாளி யாராவது தன் கார் அல்லது மோட்டார் வாகனத்தை நிறுத்தினால் முன்பைப் போல் கடுமையாகவும் சண்டை மனநிலையோடு பதில் சொல்வதில்லை. போக்குவரத்துக் காவலர்கள் சொல்வதைச் செய்கிறார்கள். மக்களிடம் சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் வன்முறையைக் கட்டுப்படுத்த அவர்களிடம் வளர்த்தவேண்டிய முக்கியமான தன்மை, சகிப்புத்தன்மை. மோகஸுடைய சிக்லோவியா அந்த மக்களிடம் அதை வளர்த்தெடுத்தது.

Photo Courtesy: Nati_Fg

அவர்கள் தொடர்ச்சியாக இதைச் செய்யத் தொடங்கி இந்த மாதத்தோடு 25 ஆண்டுகள் முடிகின்றது. இன்று அந்த நகரம் அமைதியாகவும் சகிப்புத்தன்மையோடும் ஒவ்வொரு பிரச்னையையும் எதிர்கொள்கிறது. தாங்கள் சுவாசிக்கும் காற்றின் அருமையைப் புரிந்துகொண்டு நகரம் முழுக்க மரங்களை வளர்த்து வைத்துள்ளனர். பூங்காக்களைப் பராமரித்துப் பசுமையைப் பாதுகாத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும், ஒரே ஒருநாள் மட்டும் தங்கள் வாகனங்களைக் கைவிட்டு மிதிவண்டிகளைக் கையிலெடுத்தது மட்டுமே.

"ஒரு சைக்கிள் செய்த வேலை என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, அந்த சைக்கிளைக் கையிலெடுக்க நினைத்த சில இளைஞர்கள்தாம், இன்று அந்த நகரத்தின் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கான வித்து."