Published:Updated:

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்... வந்தாச்சு புது இயந்திரம்!

ஒரு கிலோ பிளாஸ்டிக், ஒரு லிட்டர் திரவ எரிபொருளை வழங்கும் என்பதால், பிளாஸ்டிக் கழிவு பிரச்னையில் அல்லல்படும் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இது இருக்கும்.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்... வந்தாச்சு புது இயந்திரம்!
பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல்... வந்தாச்சு புது இயந்திரம்!

ன்று நமக்கு வசதியாக இருக்கிறது என்று பயன்படுத்திய பொருள் இன்று நமக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. இது அனைவருக்கும் தெரிந்தாலுமே கூட இன்னும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் கூடிக்கொண்டேதான் போகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளை மனிதர்களால் அழிக்கமுடியாது என்று சொன்னாலும்கூட யாரும் கேட்பதாக இல்லை. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை  நூறாண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்தாலும் மட்காமல் அப்படியேதான் இருக்கும். இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட பெரிய சவாலாகவே மாறிவருகின்றன.

அத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் குவித்து வைத்து, கொளுத்திவிட்டால் அவை எரிந்து சாம்பலாகிவிடுமே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அப்படியும் பிளாஸ்டிக் எரிந்து சாம்பலாகாது என்பதுதான் பிரச்னையே. பிளாஸ்டிக்கை எரித்து அழித்துவிட முடியாது. எரிந்த பின்னும் கரி மாதிரி சில வேதிப்பொருள்கள் மிஞ்சுகின்றன. இந்த பிளாஸ்டிக்குகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா எனப் பலரும் பல்வேறு தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், பிளாஸ்டிக்குகளை எந்த ஆபத்தும் இல்லாமல் அழிப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்துதான் பயன்படுத்த முடியுமே தவிர, முற்றிலுமாக அழிக்க முடியாது .

Photo Courtesy: Reuters

இந்த முயற்சிக்கு உதவும் வகையில் பிரெஞ்சு விஞ்ஞானி கிறிஸ்டோபர் காஸ்டஸ் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை நாம் பெறும் வகையில் 'க்ரேசாலிஸ்'(Chrysalis) என்ற கருவி (பிளாஸ்டிக்கை உடைத்து திரவ எரிபொருளாக மாற்றும் இயந்திரம்) ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் 39 லட்சம் ஆகும்.

டீசல், பெட்ரோல் உருவாக்கும் முறை: 

 'க்ரேசாலிஸ்' (Chrysalis) என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை 450 டிகிரி-செல்சியஸ் வெப்பநிலையில் மூலப்பொருளாக (ரியாக்டன்ட் ) நிரப்பி, பைரோலிஸ் எனும் முறையில் டீகாம்ப்போஸ்(Decompose) செய்யப்படும். அதாவது  பிளாஸ்டிக் கழிவுகள் உடைக்கப்பட்டு, சிறிய  ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்படுகிறது. பின்னர் இயந்திரத்தில் வேதியியல் செயல்முறைகளுக்கு உட்படுத்தும்போது உருவாகும் திரவமானது, இயந்திரத்தில் உள்ள வடிகட்டும் கோபுரத்துக்குள் அனுப்பப்பட்டு, எரிபொருளான டீசல் மற்றும் பெட்ரோலாக பிரிக்கப்பட்டு பின்னர் சேமிப்புக்கலனில் சேமிக்கப்படுகிறது.

அதிலிருந்து கிடைக்கும் 65 சதவிகிதம் டீசலை, ஜெனரேட்டர்கள் அல்லது படகின் மோட்டார்களுக்கும் 18 சதவிகித அளவில் கிடைக்கும் பெட்ரோலை விளக்குகளை எரியவைக்கவும் மற்றும்10 சதவிகித எரிவாயுவை வெப்பப்படுத்தவும், மீதமுள்ள 7 சதவிகித கார்பனை கிரயான் மற்றும் நிறமூட்டிகளுக்கும் பயன்படுத்தலாம். இயந்திரமானது ஒரு மணி நேரத்துக்கு 40 லிட்டர் எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்டது. மாதத்துக்கு 10 டன் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றும். ஒரு கிலோ பிளாஸ்டிக், ஒரு லிட்டர் திரவ எரிபொருளை வழங்கும் என்பதால், பிளாஸ்டிக் கழிவு பிரச்னையில் அல்லல்படும் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இது இருக்கும்.

இதுகுறித்து கிறிஸ்டோபர் காஸ்டஸ் கூறுகையில், ``க்ரேசாலிஸ் இயந்திரம் `எர்த் வேக்' எனும் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து  வடிவமைத்த ஒன்றாகும். ஒரு மணி நேரத்துக்கு 40 லிட்டர் எரிபொருளை உருவாக்கும் திறன் கொண்ட இதுபோன்ற மிகப்பெரிய இயந்திரத்தை இந்த ஆண்டில் நிறுவத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த இயந்திரத்தை பெரியளவில் வணிகமயமாக்கப்பட்ட இயந்திரமாக  வடிவமைக்க 50,000 யூரோக்கள் செலவாகும்" எனத் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியாக லாபகரமான வகையில் இந்த மாதிரி அமைந்தால், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக இருக்கும். இதுபோன்ற பலவற்றை காலத்திற்கேற்ப உருவாக்குவோம்" என்கிறார் எர்த்வேக் அமைப்பைச் சேர்ந்த பிரான்கோயிஸ் டேனியல்.