Published:Updated:

``ஸ்டெர்லைட் செய்த அத்தனையும் கிரிமினல் குற்றங்களே!" சூழலியலாளர்கள் வெளியிட்ட ஆதாரங்கள்

``ஸ்டெர்லைட் செய்த அத்தனையும் கிரிமினல் குற்றங்களே!" சூழலியலாளர்கள் வெளியிட்ட ஆதாரங்கள்
``ஸ்டெர்லைட் செய்த அத்தனையும் கிரிமினல் குற்றங்களே!" சூழலியலாளர்கள் வெளியிட்ட ஆதாரங்கள்

``காற்று, நீர், நிலம் அனைத்தும் மக்களின் அடிப்படை உரிமைகள். அவையனைத்தும் அவர்களுக்குச் சொந்தமானது. அதைக் கெடுத்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்ற ரத்தக்கறை படிந்த வெள்ளையுடைக் குற்றவாளிகள் செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடைத்தே ஆகவேண்டும்"

தேர்தல் திருவிழா, தேசம் முழுவதும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் மத்தியில் மட்டுமன்றி மாநிலத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முதன்மையானதாக நிற்பது ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் அதற்கு எதிராக நடந்த துப்பாக்கிச்சூட்டில் தூத்துக்குடி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும்தான். ஸ்டெர்லைட் தொழிற்சாலை செய்த குற்றங்களைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளின் தூத்துக்குடி வேட்பாளர்களிடமும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், சென்னை ஒருமைப்பாட்டுக் குழு, பூவுலகின் நண்பர்கள் அனைவரும் வேண்டுகோள் வைத்துள்ளனர். 

அதுதொடர்பாக நேற்று (02-04-2019) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாத்திமா பாபு, ``தூத்துக்குடி மக்களுக்கு இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று தெரியும். அவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தேவையில்லை. அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்த மக்கள்; முடிவுகளை அவர்களே எடுப்பார்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேதாந்தாவின் உண்மை முகம் தெரியவேண்டும். அதற்காக அவர்களைச் சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகக் கிடைத்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியது, புள்ளிவிவரங்களை மாற்றியமைத்தது, அதைச் சட்டபூர்வ அதிகார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தது ஆகிய வேதாந்தாவின் குற்றங்களுக்காக அதன் அதிகாரிகளைப் பொறுப்பாக்குவோம் என்று தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரத்தக்கறை படிந்த வெள்ளையுடைக் குற்றவாளிகள். அவர்கள் தப்பித்துவிடக்கூடாது, செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடைத்தே ஆகவேண்டும்" என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து கிரிமினல் குற்றப்பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் பேரா.பாத்திமா பாபு வழக்கு தொடுத்துள்ளார். தொடக்கத்திலிருந்து ஸ்டெர்லைட்டின் விதிமீறல்களில் துணை நின்றதாக, அந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையும் இணைக்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது. வேதாந்தாவுக்கு எதிரான ஆதாரங்களை பற்றிச் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆதாரங்கள்

  • நாளொன்றுக்கு 900 டன்கள் தாமிர உற்பத்தி செய்துகொண்டிருந்த வேதாந்தா அதை 1200 டன்களாக உயர்த்த விரும்பியது. உற்பத்தியை அதிகரித்தால் அதற்கும், அதற்கான மாசுக்கட்டுப்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் நிலமும் அதிகமாகத் தேவைப்படும். தன்னிடம் 172.17 ஹெக்டேர் நிலமிருப்பதாகக் கூறி அனுமதி வாங்கினார்கள். ஆனால், அவர்களிடம் இருந்ததும், இருப்பதும் 102 ஹெக்டேர் நிலம் மட்டுமே.
  • மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 13 காற்றுத்தர கண்காணிப்புக் கருவிகளில் 7 மட்டுமே தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றன. மற்றவை அதைச் செய்வதில்லை. ஆனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவின்படி பதிமூன்றுமே முழுநேரமும் கண்காணிப்பவையாகவே இருக்கவேண்டும். இதோடு, இந்தக் கருவிகள் ஃபுளோரின் அளவுகளை மதிப்பிடுவதில்லை. முறையாகக் கண்காணிக்காததும், அதனால் சரியான தரவுகள் கிடைக்காததும் ஆதாரங்களைக் குலைப்பதற்கான முயற்சி. காற்று மாசுபட்டிருப்பதற்குத் தரவுகள் இல்லாததால் அவர்களால் எளிதில் மாசுபாடே இல்லையென்று சொல்லமுடிகிறது.
  • உற்பத்திக்குப் பயன்படும் தாமிரக் கலவைகளின் மாதிரிகளை எட்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்யவேண்டும். அதன் தரம், சுற்றுச்சூழலில் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றும் போன்றவற்றை அதைவைத்துக் கணக்கிட வேண்டும். இதை முறையாகச் செய்யாதது குறித்து, 2005-ம் ஆண்டே ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உற்பத்திக்குப் பயன்படும் தாமிரக் கலவை மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்வதில்லை.
  • ஆலைத் தரப்பிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சூழலியல் தாக்க மதிப்பீடு செய்து அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும். இதைச் செய்யாததன் மூலம், தான் செய்துகொண்டிருந்த அதிக நச்சுக்கழிவு வெளியேற்றத்தை வெளியே தெரியாமல் மறைத்துவிட்டது.
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2005-ம் ஆண்டு உள் மற்றும் வெளி நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இன்றுவரை அப்படியெதுவும் அமைக்கப்படவில்லை.
  • 1999 முதல் தாமிரக் கசடுகளை அப்புறப்படுத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தாமிரக் கசடுகளை வெளியேற்ற அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனத்திடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2011 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கிடையில் சுமார் முப்பது லட்சம் டன்கள் தாமிரக் கசடுகளைத் தூத்துக்குடியைச் சுற்றி சட்டவிரோதமாகக் கொட்டியது. அதற்கான எந்த அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாகவே இந்தக் கசடுகளை வெளியேற்றியுள்ளது.
  • தூத்துக்குடியில் பெய்யும் சராசரி மழையின் அளவு 150,000 கன மீட்டர். அதற்குரிய வகையில் ஆலைக்குள் மழைநீர் சேகரிப்பு முறையை உருவாக்கியிருக்க வேண்டும். வேதாந்தா அதைச் செய்யவில்லை. 100,000 கன மீட்டர் அளவுக்கு மட்டுமே அமைத்துள்ளது. இதனால், வேதாந்தா திரவக் கழிவு வெளியேறாதிருக்க வேண்டுமென்ற விதியை மீறியுள்ளது.
  • புகைப்போக்கியில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் பொறியமைவை அமைக்கவேண்டும். அது சரியான முறையில் இயங்கவேண்டும். அவர்கள் அதை அமைத்திருந்தாலும் முறையாக இயக்குவதில்லை. 2017-ம் ஆண்டில் ஆலையிலிருந்து வெளியேறும் மாசுத் துகள்களில் 25,145 டன்கள் இந்தப் பொறியமைவால் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 8,085 டன்கள் மட்டுமே இதில் சிக்கியுள்ளது. ஆவணங்களின்படி ஆலையிலிருந்து உற்பத்தியாகும் மாசுத்துகள்களின் அளவு 17,060 டன்கள். இந்தக் கணக்கீட்டின்படி விதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகக் குறைவான அளவையே கட்டுப்படுத்தியுள்ளார்கள். தாமிர உற்பத்தியில் உருவாகும் துகள்களில் ஆர்சனிக் என்ற மிகக்கொடிய நச்சுப்பொருள் கலந்திருக்கும். ஆலை நிர்வாகம் கொடுத்துள்ள அறிக்கையின்படி பார்த்தால், 20.5 டன்கள் வரையிலான ஆர்சனிக் தூத்துக்குடி சுற்றுச்சூழலில் தூசாக வெளியேற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது.
  • ஆபத்தான நச்சுக்கழிவுகளை மிகுந்த எச்சரிக்கையோடு அப்புறப்படுத்த வேண்டும். அதை அதற்குரிய அங்கீகாரம் பெற்ற முகமைகளுடனே செய்யவேண்டும். 2017-ம் ஆண்டில் மட்டும், இந்த அங்கீகாரம் பெறாதவர்களிடம் ஆபத்தான ஆர்சனிக் கலந்திருந்த பதினைந்தாயிரம் டன்களுக்கும் மேலான நச்சுப் புகைப்போக்கிக் கரிகளையும், ஆயிரத்து நாற்பத்து மூன்று டன்களுக்கும் மேலான மறுசுழற்சிக் கழிவுகளையும் ஸ்டெர்லைட் விற்றுள்ளது. 
  • ஆலை வளாகத்திற்குள் ஜிப்சம் கழிவுகள் சேராதிருக்க வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் உரிய நேரத்தில் அவை நீக்கப்பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். ஸ்டெர்லைட் அதைச் செய்யாததால், வளாகத்திற்குள் இன்றுவரை நான்கு லட்சம் டன்கள் ஜிப்சம் குவிக்கப்பட்டுள்ளது. 

உரிமம் இல்லாமல் இயங்கியது, சட்டவிரோதமாகக் கழிவுகளை வெளியேற்றியது, கழிவுகளை அகற்றாமல் வளாகத்திற்குள் குவித்து வைத்தது, போலியான தரவுகளைச் சமர்ப்பித்தது என்று சுற்றுச்சூழலுக்கு எதிராகப் பல குற்றங்களையும் சட்டவிரோதச் செயல்களையும் ஸ்டெர்லைட் செய்துள்ளது. காற்றுப் பாதுகாப்புச் சட்டம், நீர்ப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இவையனைத்துமே குற்ற நடவடிக்கைகளாகும். வேதாந்தாவின் இந்தக் குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன் பேசுகையில், ``சுற்றுச்சூழலுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் கிரிமினல் குற்றங்களாகக் கருத்தில்கொண்டு விசாரிக்கப்பட வேண்டும். கொலை செய்பவர்களைவிட ஆபத்தானவர்கள் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை மீறி மக்களுக்குச் சொந்தமான காற்று, நீர் போன்றவற்றுக்குக் கேடு விளைவிப்பவர்கள். இந்தக் குற்றங்களைச் சிவில் குற்றமாக அல்லாமல் கிரிமினல் குற்றமாக விசாரிப்பதுதான் சரியாக இருக்கும். சர்வதேச அளவில் சூழலியல் குற்றங்களைக் கையாள்வதுபோலவே இவற்றையும் கையாள வேண்டும். அந்த வகையில் முதலாவதாக, ஸ்டெர்லைட் செய்துள்ள சூழலியல் குற்றங்களைக் கிரிமினல் குற்றங்களாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

காற்று, நீர், நிலம் அனைத்தும் மக்களின் அடிப்படை உரிமைகள். அவையனைத்தும் அவர்களுக்குச் சொந்தமானது. யாருக்கு முதலுரிமை வழங்கப்பட வேண்டுமோ அவர்களைப் புறந்தள்ளிவிட்டுக் கொண்டுவரும் வளர்ச்சிகள் உருவாக்கும் பாதிப்புகள் அதை எதிர்த்துப் போராட மக்களைத் தூண்டுகிறது. வரலாற்றில் மறக்கமுடியாத அப்படியொரு போராட்டம்தான் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் அதை எதிர்த்து ஆளும் அரசு நடத்திய துப்பாக்கிச்சூடும். வேதாந்தாமீது சாட்டப்பட்டுள்ள சூழலியல் குற்றங்களே இவை அனைத்திற்கும் காரணம். உலகளவில் தற்போது மிக ஆபத்தானதாகக் கருதப்படும் சூழலியல் குற்றங்களை இவர்கள் சொல்வதுபோல் கிரிமினல் குற்றங்களாகக் கருதி விசாரிப்பதே இன்றைய அரசியல் மற்றும் சமுதாயச் சூழலில் மிகச் சரியானதாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு