Election bannerElection banner
Published:Updated:

பூமியில் கொசுத்தொல்லை இன்னும் அதிகமாகும்... காரணமாகும் காலநிலை மாற்றம்?

பூமியில் கொசுத்தொல்லை இன்னும் அதிகமாகும்... காரணமாகும் காலநிலை மாற்றம்?
பூமியில் கொசுத்தொல்லை இன்னும் அதிகமாகும்... காரணமாகும் காலநிலை மாற்றம்?

இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத நாம் அறிந்த கிருமிகளும், ஏதுவான தட்பவெட்பநிலை ஏற்பட்டால் மிகக் கொடிய தொற்றுநோயை உண்டாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வ்வோர் ஆண்டும் வானிலை மாற்றங்களின்போது அடிக்கும் வெயிலுக்கும் கொட்டும் மழைக்கும் பயப்படுகிறோமோ இல்லையோ,  எல்லா காலநிலையிலும் கொசுவுக்கு பயப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் பருவநிலை மாறும்போது, நம் உடல்நிலையும் அதோடு சேர்ந்தே மாறுகிறது. அந்தந்த காலத்தில் பருவநிலை மாற்றங்களால் அவ்வப்போது நமக்குத் நோய்த்தொற்று ஏற்படுவதுண்டு. தொற்றுநோய்களை உருவாக்கும் கிருமிகளைப் பரப்புவதில் முதல் இடம் கொசுவுக்குத்தான். எந்தச் சமயத்தில் எதுமாதிரியான நோய்களைப் பரப்பி நம்மிடையே பீதியை ஏற்படுத்தும் என்றே யூகிக்க முடியாது. உலகம் முழுவதும் பல ஆயிரம் கொசு இனங்கள் இருந்தாலும் இவற்றில் ஒரு சில கொசுக்கள் மட்டுமே நோயைப் பரப்புகின்றன. உதாரணத்துக்கு அனோஃபிலஸ், க்யூலக்ஸ், ஏடிஸ் கொசுக்கள் மலேரியா, டெங்கு, ஜிகா, சிக்கன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்களைப் பல இடங்களில் பலருக்கு உண்டாக்குகின்றன.

இந்தக் கொசுக்களால் தற்போது புதிய பிரச்னை ஒன்றும் உருவாகிவருகிறது. பனிக்காலத்தின் அளவு குறையக் குறைய கொசுக்களின் உற்பத்தி பெருகிக்கொண்டே செல்லும். தற்போது புவி வெப்பமயமாதலால் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இப்படியே செல்லும்பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நாம் இதுவரை காணாத புதிய வகை நோய்களை இந்தக் கொசுக்கள் நமக்கு அறிமுகப்படுத்தும். இந்நோய்களால் பல பில்லியன் மக்கள் பாதிக்கப்படவுள்ளனர் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதோடு கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாவதால், மக்களிடையே நோயானது பரவும் வேகமும் மிக அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர் அதன் ஆராய்ச்சியாளர்கள்.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உயிரியல்துறையில் பணிபுரிபவரும் மற்றும் பி.எல்.ஓ.எஸ் இதழ் வெளியிட்ட 'புறக்கணிக்கப்பட்ட  வெப்பமண்டல நோய்கள்' எனும் தலைப்பில் இணை ஆய்வு ஆசிரியராகப் பணிபுரிபவருமான உயிரியலாளர் கொலின் ஜே.கார்ல்சன், "இந்தச் சாதாரண வெப்பநிலை, அதிகப்படியான மக்களைக் கொல்லப்போகிறது" என்று கூறியுள்ளார். 

இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத நாம் அறிந்த கிருமிகளும், ஏதுவான தட்பவெட்பநிலை ஏற்பட்டால் மிகக் கொடிய தொற்றுநோயை உண்டாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, 'ஜிகா' என்ற தொற்றுநோயை 1947-லேயே ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். 2015-ம் ஆண்டு வரை அது மெள்ள மெள்ள ஒவ்வொரு இடமாக உலகம் முழுவதிலும் பரவிக்கொண்டே வந்தது, அதன் பின்னர், பிரேசிலில் ஜிகா நோய் பரவத்தொடங்கியது. ஆனால், பிரேசிலில் அது மிகக்கொடிய தொற்று நோயாக மாறி பல ஆயிரம் பேரை பலிகொண்டது. இதற்குக் காரணம் அந்த நோயை உண்டாக்கிய கிருமிக்கு ஏதுவான தட்ப வெப்பமே. இதுபோல பல புதிய நோய்களை இந்த உலகம் இனிவரும் காலங்களில் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

கொசுக்கள் மற்றும் பல நோய்க்கிருமிகள் மீது நமக்கு இப்போது சந்தேகம் இருக்கிறது. ஆனால், காலநிலை மாற்றமும் ஒரு தீவிர பிரச்னை என்று நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் எனக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்களின் நிபுணராகப் பணிபுரியும் ராபர்ட் டி.ஸ்கூலே கூறியுள்ளார்.

மிகவும் பொதுவான நோய் பரப்பும் கொசுக்களான ஏடிஸ் எகிப்தீ மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் போன்றவை வரும் தசாப்தங்களில் வெப்பநிலை அதிகரித்தால் என்ன ஆகும் என்ற ஆராய்ச்சியையும் செய்தனர். இதில் பூமியில் வெப்பம் கூடக்கூட தொற்றுநோய்க் கிருமிகள் மற்றும் அதைப் பரப்பும் கொசுக்களின் வாழ்நாள் உயரும் என அறிந்தனர். அதோடு இன்னும் 50 வருடங்களில் ஏறத்தாழ உலகில் இருக்கும் அனைவரும் கொசுவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனக் கண்டறிந்தனர். தற்போது விஞ்ஞானிகளின் இலக்கானது உயரும் வெப்பநிலையால் ஏடிஸ் கொசு எதுமாதிரியான வைரஸ்களைப் பரப்பப்போகிறது என்பதை அறிந்துகொள்வதுதான்.

கிட்டத்தட்ட 7 பில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். இதில் யார் பாதிக்கப்படப்போகிறார்கள்? வரும்காலங்களில் கொசுக்கள் எங்கு அதிகமாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மாதிரி வைரஸ்கள் முன்னால் பரவிய இடம் மற்றும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு, காலப்போக்கில் 2050 முதல் 2080 வரை எந்த இடத்தில் கொசுக்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் என விளக்கியுள்ளார் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில், வளர்ந்துவரும் நுண்ணுயிரிகள் நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் சாடே ஜே.ரியான். 

வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்கெனவே நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. உடனடியாக இதனால் பாதிக்கப்படப்போகும் நாடுகளாக அதீத வெப்பம் கொண்ட நாடுகளே கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள், இந்த வெப்பநிலை மாற்றத்தால் புதிய நோய்களைச் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு