Published:Updated:

வெர்டிக்கல் கார்டன், வெட்டிவேர் கால்மிதி... கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக்க டிப்ஸ்!

இனிமேல் புதிதாக வீடு வாங்குபவர்கள் கலர், டிசைன் எனப் பார்க்காமல் கட்டடத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து வாங்கலாம். நமக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

வெர்டிக்கல் கார்டன், வெட்டிவேர் கால்மிதி... கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக்க டிப்ஸ்!
வெர்டிக்கல் கார்டன், வெட்டிவேர் கால்மிதி... கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக்க டிப்ஸ்!

கோடை வெயில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வீடுகள் எல்லாம் அனலாக தகித்துக்கொண்டிருக்கிறன. வீடுகள் தகிக்கும் பகலில் மட்டுமல்ல; இரவிலும்தான். மின்சாரம் இல்லாமல் 15 நிமிடங்கள் அறையில் அமர்ந்திருந்தால் முழுவதும் குளித்து முடித்ததைப் போல உடல் வியர்த்துவிடும். கோடை வெப்பத்திலிருந்து நம்மையும், வீட்டையும் சில இயற்கை வழிமுறைகளில் பாதுகாக்கலாம். அதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகப் பார்ப்போம். 

செங்கல்லில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாகத்தான் இருக்கும். ஆனால், வெயிலை வீட்டுக்குள் நுழைய விட்டுவிடும். தற்போது சந்தையில் செங்கல்லுக்கு மாற்றாகப் போரோ தெர்ம் பிளாக்ஸ் என்ற கல் அறிமுகமாகியுள்ளது. இதைவைத்து வீடு கட்டும்போது வெயில் காலத்தில் வெப்பம் வீட்டுக்குள் வருவதைத் தடுக்கும். ஆனால், போரோ தெர்ம் பிளாக்ஸில் பெரிய அளவிலான ஆணி அடிக்கும்போது மட்டும் கவனம் தேவை. செங்கல் கொடுக்கும் உறுதித்தன்மையை இதுவும் கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கும் மிக ஏற்றது. 

மொட்டைமாடி பாதுகாப்பு

மொட்டை மாடியில் சாதாரண காவி நிற சதுர கற்களையே பெரும்பாலும் பதிக்கின்றனர். இந்தக் கல்லானது வெப்பத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளே இறங்கவிடும். இந்தக் காவி நிற சதுர கற்களுக்குப் பதிலாக வெண்மை நிறக்கற்கள் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கின்றன. இந்த வெண்மை நிற டைல்ஸில் வெயில், பட்டு எதிரொலித்துவிடும். இதனால் இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் வீட்டின் அறைகள் குளிர்ச்சியாக இருக்கும். வெப்பமும் தெரியாது. மேலும், வெள்ளை டைல்ஸ்களைப் பதிக்க முடியவில்லை என்றால் வெயிலைத் தடுக்கும் வெள்ளை நிற பெயின்ட்களை வாங்கி மொட்டைமாடி தளத்தின் மீது பூசலாம். இதுதான் தற்போதுள்ள தற்காலிகத் தீர்வு. ஆனால், புதிய வீடு கட்டுபவர்கள் வெயிலைச் சமாளிக்கக்கூடிய வீடுகளைக் கட்டுவது நல்லது. ஒருமுறை பணம் செலவழித்துவிட்டால் மீண்டும் பணம் செலவழிக்கும் நிலை வராது. 

ஆரோக்கியம் கொடுக்கும் செடிகள்

வீடுகளில் இருக்கும் ஜன்னல்களைக் காற்றோட்டம் கொண்ட ஜன்னல்களாக அமைப்பது நல்லது. மேலும், வீட்டில் இடமிருந்தால் ஆங்காங்கே செடிகள் வளர்த்து வீட்டை பசுமையாக்கலாம். இதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். முக்கியமாக ஜன்னல்கள், வாசற்படிகள், பால்கனிகள் எனப் பல இடங்களில் வளர்த்தால் வீட்டில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். மேலும், இதில் மூலிகைகளாக வளர்த்தால் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. மாடியிலும் தோட்டம் அமைப்பதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம். 

வெர்டிக்கல் கார்டன்

அடுத்ததாக வெர்டிக்கல் கார்டன் அமைக்கலாம். ஓர் அடுக்கு, மூன்று தொட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதைத் தனியாகவும் சுவரில் மாட்டிக்கொள்ளலாம். மொத்தமாக 50 அல்லது 100 அடுக்குகள் கொண்டு வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச்சுவர்களிலும் அமைக்கலாம். மூன்று அடுக்குகள் ஒன்றின்கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது முதல் தொட்டி நிரம்பி அடுத்த தொட்டிக்குத் தண்ணீர் செல்லும் வகையில் தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால் தொட்டியின் கீழ்புறத்தில் உள்ள துளை வழியாகத் தண்ணீர் வெளியேறி கீழே அமைந்துள்ள தொட்டிக்குச் சென்றுவிடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை மழைநீர் சேகரிப்பு குழாய் அமைப்பதுபோல தண்ணீரை வீணாகாமல் சேகரித்து மற்ற வீட்டுத் தோட்ட செடிகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது. நீண்ட சுவர்போலத் தோட்டம் அமைக்கும்போது, மேல் முதல் அடுக்கில் மட்டும் சொட்டுநீர் பாசன குழாய்கள் அமைக்கப்பட்டு, தண்ணீர் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும். வெர்டிக்கல் கார்டனுக்கு சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிது. 10 அடுக்குக் குறைவாக இருந்தால் கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. மொத்தமாக வெர்டிக்கல் கார்டன் அமைக்கச் சதுர அடிக்கு 650 ரூபாய் செலவாகிறது. இந்தக் கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும்போது, விலை குறைவாக இருக்கும். குறைந்த தொட்டிகள் பயன்படுத்தினால் விலையில் சற்று மாற்றம் இருக்கும். வீட்டுக்கு உள்ளும் வெர்டிக்கல் கார்டன் அமைக்கலாம். இதன் மூலம் அறையையும் குளிர்ச்சியாக வைக்கலாம்.

மாடி சுவர்த்தோட்டத்திலும் செடிகள்

கடும் வெயிலையும், முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத்தான் மாடி சுவர்த் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே, திறந்த வெளியில் வளரக்கூடிய எல்லா வகை அழகுச் செடிகளையும் இதில் வளர்க்க முடியும். ஆனால், தொட்டியில் குறைந்த அளவே மண் இருப்பதனால், பெரிய செடிகளை வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதால், வண்ண வண்ணப் பூக்களையும், இலைகளையும் கொடுக்கக்கூடிய செடிகளையும் வளர்த்து, வீட்டைப் பசுமையாக்கலாம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் திரைச்சீலைகள், கால்மிதிகள், தரை விரிப்புகள் என அனைத்தையும் பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தற்போது வெட்டிவேர் மூலிகை நார்களால் ஆன விரிப்புகள், கால்மிதிகள், திரைச்சீலைகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை அறையில் வெப்பத்தை தணிக்க உதவும் 

இனிமேல் புதிதாக வீடு வாங்குபவர்கள் கலர், டிசைன் எனப் பார்க்காமல் கட்டடத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து வாங்கலாம். நமக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இதேபோல ஏற்கெனவே வீட்டைக் கட்டியிருக்கும் பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பொறியாளர்கள் ஆலோசனையுடன் மாற்றிக்கொள்ளலாம். வெயிலில் இருந்து வீட்டையும் தம்மையும் பாதுகாத்துக்கொள்ள இதுபோல பல வழிகள் இருக்கின்றன.