Published:Updated:

மலைகளின் நடுவே மகத்தான கல்வி... வியப்பூட்டும் லடாக் சூழலியல் பள்ளி!

இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேரப்போகும்போது, இவர்கள் சொல்வது இதுதான், "இங்குப் படிப்பது சம்பாதிப்பதற்காக அல்ல, வாழ்வதற்காக"

மலைகளின் நடுவே மகத்தான கல்வி... வியப்பூட்டும் லடாக் சூழலியல் பள்ளி!
மலைகளின் நடுவே மகத்தான கல்வி... வியப்பூட்டும் லடாக் சூழலியல் பள்ளி!

மேற்கு லடாக்கின் தெற்குப் பகுதி அது. அங்கே இருக்கும் க்யா (Gya) எனும் கிராமத்தில் ஏழ்மை நிலையில் வசித்த ஒரு இளைஞர் அண்மையில் சிறந்த சுற்றுச்சூழல் திரைப்பட இயக்குநருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். லடாக்கின் கிழக்குப் பகுதியில் மூன்று பேர் சேர்ந்து முற்றிலும் மண், மரம், செடிகள், வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை முறையில் கட்டடம் கட்டும் நிறுவனத்தை நடத்துகின்றனர். லேய் (leh) மாவட்டத்தில் ஒரு பெண், சுற்றுச்சூழல் பயண நிறுவனத்தைத் தொடங்குகிறார். ஒரு இளைஞர் லடாக்கில் உள்ளூர் விவசாய உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்பனை செய்துவருகிறார். ஒருவர் அரசியலில் சேர்ந்துவிடுகிறார், இருவர் சீஸ் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர். பலர் அரசாங்க பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும், மற்றொருவர் அரசு அதிகாரியாகவும், இன்னொருவர் லே மாவட்டத்தில் காவல்துறையிலும் வேலை செய்கிறார். இவர்கள் அனைவரும் பார்ப்பது வேறுவேறு பணி... வேறு வேறு துறை... ஆனால், இவர்களை இணைக்கும் மையப்புள்ளி ஒன்றே ஒன்று. அது 'லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம்'. மேற்கண்ட நபர்கள் அனைவரும் அங்கு படித்தவர்கள்தான். இதுதவிர, லடாக்கின் தொலைதூர கிராமங்களில் இருந்து இந்த இயக்கப் பள்ளியில் சேர்ந்து, படித்தவர்கள் தற்போது லடாக்கின் கல்வித்துறையில் பணிசெய்து வருகின்றனர்.

லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம் என்பது அரசு சாரா சமூகநல அமைப்பு. இந்த அமைப்பானது 1980-ல் நிறுவப்பட்டு, பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. சோனம் வாங்சாக் (Sonam Wangchuk) என்பவர் இந்தப் பள்ளியை நிறுவினார். லடாக்கில் உள்ள சாதாரண கல்விமுறைக்கு மாற்றாக அனுபவம் சார்ந்த கல்விமுறையே தேவை என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த பள்ளியை ஆரம்பித்தார். அந்த இயக்கம் இன்று ஏராளமான கிராம மாணவர்களுக்குப் படிப்பை வழங்கிக் கொண்டு இருக்கிறது.

யாரெல்லாம் இங்கு சேரலாம்?

- 10-ம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் / தேர்ச்சி அடைந்தவர்கள்.

- பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் (வயது வரம்பு உண்டு)

- மற்ற அனைத்து தரப்பினரும் சேரலாம்.

இங்கு படிக்கும் மாணவர்கள் லடாக்கைச் சேர்ந்த மாணவர்களாகவோ, அல்லது நீண்ட காலம் லடாக்கில் வசிப்பவர்களாகவோ இருக்கவேண்டும். அதேபோல நேபாள மக்கள் லடாக்கில் வசித்தாலும் இந்தப் பள்ளியில் விண்ணப்பிக்கலாம். இதுபோக அருகிலுள்ள கார்கில், ஜாங்ஸ்கர், ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் சேரலாம். முக்கியமாக ஊனமுற்ற இளைஞர்கள், தாய், தந்தை அற்ற மாணவர்கள், கஷ்ட சூழலால் படிப்பைக் கைவிடப்பட்ட மாணவர்கள் இங்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மாதத்திற்கு 2,000 ரூபாய் உணவுக் கட்டணம் செலுத்தினால் போதும். இங்கு தங்கும் செலவுகள், பள்ளிப்படிப்பு முற்றிலும் இலவசம். ஆனால், அதற்கு பதிலாக மாணவர்கள் இங்கு தொழில்முறை படிப்பு சார்ந்த வேலைகளைச் செய்யவேண்டும். இப்படி அனுபவப் பாடமாக மாணவர்கள் கற்றுக்கொள்வதால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்பது, இந்தப் பள்ளியின் நோக்கம். 

இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள் காலை எழுந்ததும் ஆளுக்கு ஒரு வேலையாகத் தொடங்க வேண்டும். தோட்ட வேலை, கால்நடைகளைக் கவனித்தல், மரங்களைப் பராமரித்தல், உணவு சமைத்தல், பண்ணையை சுத்தம் செய்தல், வகுப்பறைகளைத் தயார் செய்தல் எனப் பல வேலைகளை மாணவர்கள் செய்ய வேண்டும். அடுத்ததாக வகுப்பறை செயல்பட ஆரம்பிக்கும். கால்நடைகளில் இருந்து பெற்ற பாலை மதிப்புக் கூட்டுதல், சாணத்தைக் கொண்டு பயோகேஸ் தயாரிப்பு, மழைநீர் சேகரிப்பு, ஆப்பிள் மற்றும் காய்கறி தோட்ட பராமரிப்பு, பெற்ற காய்கறிகளையும், பழங்களையும் மதிப்புக் கூட்டி மாணவர்களுக்குக் கொடுத்தல், ஆங்கில பாட வகுப்பு, கலாசாரம் மற்றும் வாழ்க்கைமுறை வகுப்பு, பாடல் மற்றும் நடனம் வகுப்பு, பனிச்சறுக்கு பயிற்சி, சமுதாய பாடப்படிப்பு என பல்வேறு விதமான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துவிடுவதாக சொல்கிறார்கள், முன்னாள் மாணவர்கள்.

இந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது. 30 வருடங்களுக்கு முன்னரே இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுவிட்டது. இங்கு பயன்படுத்தும் பொருட்களை மறுசுழற்சி, ஒரு பொருளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் அதனை மற்றொரு உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் என வாழ்க்கைமுறை மாற்றி போதிக்கப்படுகிறது. பூமியிலிருந்து 3,350 மீ உயரத்தில் மலைப்பகுதியில் இந்தப் பள்ளி அமைந்திருப்பதால் இங்கு செல்போன் சிக்னல் கிடைக்காது. அதனால் இங்கு செல்போன் பயன்பாடு இல்லை. உலகின் பல பல்கலைக்கழகங்களில் இருந்து வருகைதரும் ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களும், பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். ஒருநாளைக்கு இரண்டு மணிநேரமாவது சுற்றுச்சூழல் வகுப்புகள் இருக்கும். அதில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்னைகள், மறுசுழற்சி செய்தல், சோலார் மின்சாரம் தயாரிப்பு எனப் பலவிதமான வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. 

சிறப்பு செயல்பாடாக சோலார் மூலம் தண்ணீர் சூடேற்றப்படுகிறது. இதற்காகத் தனியாக சோலார் பேனல்கள் அமைத்து அதன் ஒளியை பிரதிபலிக்கச் செய்து தண்ணீரைச் சூடேற்றுகிறார்கள். இதுதவிர தேநீர் தயாரிக்கும் தண்ணீரை சோலார் மூலம் சூடேற்றிக் கொள்கிறார்கள். இதுபோக இங்கு மின்சாரத் தேவைகளில் முக்கால்வாசி சோலார் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. உள்ளே காய்கறித் தோட்டம், கால்நடைப் பண்ணை, சோலார் மின்சாரம், பொருட்கள் மறுசுழற்சி, இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் தடை, இயற்கை கட்டடங்கள் என எங்கும் இயற்கை நிறைந்து காணப்படுகிறது. சுற்றிலும் வெறுமையாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தில் பள்ளியில் மட்டுமே பசுமை காணப்படுகிறது.

இன்று லடாக்கில் உள்ள வீடுகள் உயரமான கட்டடங்களாக வளர்ந்து நிற்கும்போது, வெறும் மரங்களையும், மண்ணையும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது, இந்தப் பள்ளி. அதோடு, கலாசார ரீதியாகவும், நடைமுறை ரீதியிலான கல்வியிலும் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. இங்கு சிறப்பு பாடங்கள் நடத்த அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேரப்போகும்போது, இவர்கள் சொல்வது இதுதான், "இங்குப் படிப்பது சம்பாதிப்பதற்காக அல்ல, வாழ்வதற்காக". இப்படி ஒவ்வொருவருக்கும் தேவையான படிப்பு சொல்லிக் கொடுப்பதுடன், சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தையும் உணர்த்தி கற்றுக்கொடுக்கிறது, இப்பள்ளி.