Published:Updated:

ஏன் இன்னும் நதிநீர் இணைப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்? #MustRead

ஏன் இன்னும் நதிநீர் இணைப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்? #MustRead

நதிநீர் இணைப்பைப் பொறுத்தவரை ஒரு குழாயில் வரும் நீரை, மற்றொரு குழாய்க்கு திருப்பும் வேலையாகத்தான் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நதியும் ஒரு சூழலியல் தன்மை கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண் சார்ந்து உற்பத்தியாகி ஓடக்கூடியது. இருவேறு சூழலைக் கொண்டு ஓடக்கூடிய நதிகளை ஒன்றாக இணைத்தால் இரண்டு நதிகளின் சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்.

ஏன் இன்னும் நதிநீர் இணைப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்? #MustRead

நதிநீர் இணைப்பைப் பொறுத்தவரை ஒரு குழாயில் வரும் நீரை, மற்றொரு குழாய்க்கு திருப்பும் வேலையாகத்தான் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நதியும் ஒரு சூழலியல் தன்மை கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண் சார்ந்து உற்பத்தியாகி ஓடக்கூடியது. இருவேறு சூழலைக் கொண்டு ஓடக்கூடிய நதிகளை ஒன்றாக இணைத்தால் இரண்டு நதிகளின் சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்.

Published:Updated:
ஏன் இன்னும் நதிநீர் இணைப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்? #MustRead

தேர்தல் களம் சூடுபிடித்து தகித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தனது சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி வெவ்வேறு திசைகளில் பிரிந்திருக்கும் கட்சிகளனைத்தும் ஒரே குரலில் சொல்லும் விஷயம் என்றால் அது `நதிநீர் இணைப்பு' எனும் வார்த்தை. அதை விவசாயி அய்யாக்கண்ணு முதல் நடிகர் ரஜினிகாந்த் வரை அனைவரும் வரவேற்கிறார்கள். நிறைய இளைஞர்கள் கூட இதை ஒரு கனவுத் திட்டமாகவே நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் நதிநீர் இணைப்பு குறித்த மாற்றுக் கருத்துகளை முன்வைத்தே ஆகவேண்டியிருக்கிறது.

நதிநீர் இணைப்புக்கு ஆதரவு தருபவர்கள் எல்லோரும் சொல்வது ``விவசாயம் செழிக்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும். வறட்சியை முழுவதுமாக விரட்ட வேண்டும். குறிப்பாக வறட்சியாக இருக்கும் மாவட்டங்கள் அனைத்தையும் பசுமையாக மாற்றவேண்டும்" என்பதாகத்தான் இருக்கிறது. இவர்கள் சொல்வதற்குப் பின்னால் முக்கியமான கேள்வி ஒன்றும் எழுகிறது. 

``நதிநீர் இணைப்பு சாத்தியமா, இல்லையா என்பதே முழுமையாகத் தெரியாது. அதற்குள் நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட்டால், மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசனம் கிடைக்கும். ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மெட்ரோ நகரங்களுக்குக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அனைவருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்குமென்று சொல்கிறார்கள். இதையெல்லாம் எந்தெந்தத் தரவுகள் வைத்துச் சொல்கிறார்கள் என்ற கேள்வியையும் இங்கே கவனிக்கப்பட வேண்டும்." என்கிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜனகராஜன். 

இவர் சொல்வதுபோல எல்லாம் ஒரு மாயக்கணக்காகவே இருக்கிறது. அரசு சொன்ன நதிநீர் இணைப்பு கணக்கு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஆந்திர நதிநீர் இணைப்பு பற்றியும் நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. ஆந்திராவில் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பை நேரில் பார்வையிட்டிருக்கிறேன். அப்போது அங்கு நாங்கள் கண்ட காட்சிகள், சேகரித்த தகவல்கள் பலவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருந்தன. 

கோதாவரி நதிநீரை கிருஷ்ணா நதிநீருடன் இணைப்பதற்கான போலாவரம் அணைக்கட்டு கட்டும் பணியில் மும்முரமாக இருக்கிறது ஆந்திர அரசு. அதற்கு முன்னர் அந்த மாநிலத்தில், பட்டிசீமா எனும் இடத்தில் நீரேற்று நிலையத்தின் மூலம் கோதாவரியை, கிருஷ்ணாவுடன் 173 நாள்களில் இணைத்திருந்தது. (நீரேற்று நிலையமும் பெரிய அளவில் பயனில்லை என்பது வேறு விஷயம்). பழங்குடி மக்களிடமிருந்து போலாவரம் அணைக்கட்டைக் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலங்களுக்குப் பதிலாக அவர்கள் குடியேற வேறு ஓர் இடத்தைக் கொடுத்தது ஆந்திர அரசு. ஆனால், அவர்கள் வாழத்தகுந்த வளமான விவசாய நிலம், முறையான வீடுகள் ஆகிய வசதிகள் இருக்கிறதா என்றால் 'இல்லை' என்பதுதான் பதில். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய குடியமர்வுகளில் அதுவும் ஒன்று. இப்போதுவரை யாருக்கும் முழுமையான இழப்பீடுகள் வரவில்லை என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை வைத்திருப்பது, பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்தான்.

கோதாவரி நதிநீர் இணைப்பின் திட்ட அறிக்கையில், "கோதாவரி ஆற்றின் நீரானது திருப்பிவிடப்பட்டால் 29,000 ஹெக்டேர் நிலங்களில் நீர்ப்பாசனம் நடக்கும். 540 கிராமங்களுக்குக் குடிநீர் கிடைக்கும். ஆனால், இது மொத்தமாக 3 லட்சம் மக்களைத் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வைக்கும். மக்களைத் தவிர, அதிகாரபூர்வமான அறிவிப்பின்படி, மொத்தம் 1,17,065 ஏக்கர் நிலம் போலாவரம் நீர்த்தேக்கத்தால் மூழ்கடிக்கப்படும். அதில் 3,838 ஏக்கர் வனப்பகுதி நிலங்கள் முழுவதும் மொத்தமாக நீரில் மூழ்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆரம்பத்தில் 1976-ம் ஆண்டு 6 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இன்று 60,000 கோடியில் வந்து நிற்கிறது. 

நதிநீர் இணைப்பைப் பொறுத்தவரை ஒரு குழாயில் வரும் நீரை, மற்றொரு குழாய்க்கு திருப்பும் வேலையாகத்தான் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நதியும் ஒரு சூழலியல் தன்மை கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மண் சார்ந்து உற்பத்தியாகி ஓடக்கூடியது. இருவேறு சூழலைக் கொண்டு ஓடக்கூடிய நதிகளை ஒன்றாக இணைத்தால் இரண்டு நதிகளின் சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். கோதாவரி - கிருஷ்ணா பட்டிசீமா நீரேற்று இணைப்பின்போது, இரண்டு நதிகளும் இணைந்த இடத்தில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. இதில் கிடைக்கும் இன்னொரு தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ரகம். 

``பட்டிசீமா திட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு வரைக்கும் 70 சதவிகித அளவுக்கான விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்றது. ஆனால், திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெறும் 35 சதவிகித அளவுக்குத்தான் விவசாயம் நடைபெற்றன." என்கிறார், ஆந்திர விவசாய சங்கத் தலைவர் நாகேந்திரநாத். பல நேரங்களில் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து செயல்பட்டிருந்தாலும், இந்த மாற்றுக் கருத்தை இவர் முன்வைக்கிறார். பட்டிசீமா திட்டத்திற்குப் பின்னர் அதிகமான விவசாயம் நடந்தாக தகவல் வந்ததே என்று உங்களுக்குத் தோன்றலாம். அந்தக் கணக்கு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட்டால், 173 பில்லியன் க்யூபிக் தண்ணீரைச் சேமிக்க, 14 பெரிய நதிகள், 27 அணைகளை ஒன்றிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான மதிப்பீட்டுத் தொகை பல லட்சம் கோடி ரூபாய். இதன்மூலம் இந்திய உணவுத் தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என்பதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத கற்பனையாகத்தான் இருக்கிறது. வழிந்தோடும் வெள்ளத்தைத் திருப்பிவிடத்தான் இந்தத் திட்டம் என்று சொல்கிறார்கள். மழை அதிகமாகப் பெய்யும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுதானே இயற்கை என்பதையும் கவனிக்க வேண்டும். 

இதனால் மில்லியன் கணக்கிலான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும். நாட்டில் உள்ள பெரிய நதிகளை யார் பராமரிப்பது, இதற்கு எவ்வாறு காவல்படை அமைப்பது, இந்தத் தண்ணீரை எவ்வாறு மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ளும். அண்டை மாநிலமான காவிரியிலிருந்தே முழுமையான தண்ணீர் இன்னும் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கூட்டணி, ஒவ்வொரு கொள்கைகள் இருக்கும்போது இதைச் சுலபமாக நிறைவேற்ற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.

``இந்தத் திட்டத்துக்கு இன்றைக்குப் போடப்பட்டுள்ள நிதி மதிப்பீடு 15 லட்சம் கோடி. இது நடைமுறைக்கு வரும்போது, தொகையின் மதிப்பு இன்னும் அதிகமாகும். இதுபோல உருவாக்கும் அணைகளையும், கால்வாய்களையும் பராமரிக்க லட்சம் கோடிகள் செலவிட வேண்டி இருக்கும். இந்தத் திட்டத்திற்காகச் செலவிடும் தொகையில் 10 சதவிகிதம் இருந்தாலே இந்தியா முழுவதும் உள்ள நீர் நிலைகளைச் சுத்தப்படுத்தி, நீர்வளத்தைப் பெருக்கலாம். நதிகளை இணைப்பது கோடிக்கணக்கான மக்களை தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும்" என்கிறார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன். 

இப்போதுள்ள தண்ணீர்ப் பிரச்னையைப் போக்குவதற்கு நதிநீர் இணைப்பைச் செயல்படுத்தினாலும், அது முடிவடைய குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது ஆகும். அதுவரைக்கும் தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? விவசாயம்தான் செய்யாமல் இருக்க முடியுமா? விவசாயம் செழிக்க வேண்டும் அதனால் நதிநீர் இணைப்பு வேண்டும் என வாதங்களை முன்வைக்கும் ஆர்வலர்கள்கூட ஏரிகள், குளங்களைத் தூர்வாரச்சொல்லி கேட்பதில்லை. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் ஏராளமான ஏரிகளையும், குளம், குட்டைகளையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தலாம். நதிநீர் இணைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, குளம் குட்டைகளை தூர்வாருவதற்குக் கொடுத்தாலே பெரும்பாலான தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்துவிடும். 

"நான் பேரழிவைக் கொண்டுவரப் போகும் திட்டமாகப் பார்க்கிறேன். ஆம், நதிநீர் இணைப்பு என்பது நிச்சயம் நம் தேசத்துக்கு ஒரு பேரழிவாக அமையும்." - தண்ணீர் மனிதர், ராஜேந்திர சிங்.

நதிநீர் இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளோ அல்லது தனிநபரோ, தங்கள் ஆதரவுடன் நின்று கொள்கிறார்கள். ஆனால், சூழலியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தை வெறும் பெயரளவில் மட்டும் வாக்குறுதிகளாகக் கொடுத்து, வாக்குகளை அறுவடை செய்யும், மக்களை ஏமாற்றும் முயற்சியாகத்தான் `நதிநீர் இணைப்பு' வாக்குறுதியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.  

இப்படி பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, புவியியல் ரீதியாக நடைமுறை சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கலாம். ஆனால், மக்களாகிய நாம் அதை அலசிஆராயாமல் ஆதரிக்கக் கூடாது.