Published:Updated:

'கஷ்டம்தான்... ஆனா சர்வைவ் ஆகணும்ல!' - விலங்குகளின் வித்தியாச பிரசவங்கள்

'கஷ்டம்தான்... ஆனா சர்வைவ் ஆகணும்ல!' - விலங்குகளின் வித்தியாச பிரசவங்கள்
'கஷ்டம்தான்... ஆனா சர்வைவ் ஆகணும்ல!' - விலங்குகளின் வித்தியாச பிரசவங்கள்

கொண்டாட்டங்களும் வேதனைகளும் சோதனைகளும் உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை. மனிதன், பறவை, விலங்கு என்ற பாகுபாடெல்லாம் இயற்கைக்குக் கிடையாது. பிறப்பு எந்த உயிரினத்துக்குமே சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை. அதற்காகப் பல வலிகளையும், பல சோதனைகளையும் கடந்து வந்தாக வேண்டும். மனித இனத்தை விட அதிக வலிகளைப் பொறுத்து குட்டிகளைப் பெறுகிற உயிரினங்களும் இங்கே இருக்கின்றன.

கிவி (kiwi bird)

கிவி பறவை இனத்தைச் சேர்ந்தது. இதனுடைய பெயரைk கேட்பதற்கு அழகாக இருக்கலாம், ஆனால் அதன் பிரசவக் காலம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதுதான் உண்மை. இனச்சேர்க்கைக்கு பிறகு பெண் கிவிகள் முட்டையிட்டு குஞ்சுகளை உலகிற்குக் கொண்டு வருகின்றன. இங்கே கிவிகளுக்குப் பிரச்னையே அது இடுகின்ற முட்டைதான். தன்னுடைய மொத்த  உடல் எடையில் 20 சதவிகித அளவிலான  முட்டையை இடுகிறது. மனித இனத்தோடு ஒப்பிட்டால் ஒரு பெண் பிரசவ நேரத்தில் 7 வயதுக் குழந்தையை பெற்றெடுப்பதற்குச்  சமம். உலகிலேயே இவ்வளவு பெரிய முட்டையை இடுவது கிவி பறவைகள்தான். இதோடு பெண் கிவிகளின் வேலை முடிந்துவிடுகிறது. இனி முட்டையை அடைகாத்து குஞ்சுகளைப் பாதுகாப்பாக உலகிற்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஆண் கிவிகளுடையது  

தஸ்மானியன் டெவில் (TASAMANIYAN DEVIL)

 உலகிலேயே இனப்பெருக்க காலத்தில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவது இந்த விலங்குதான். இனப்பெருக்கக் காலத்தில் பெண் டெவில் மட்டும் பாதுகாப்பான இடத்தைத் தேடி அலையும். குட்டி போடுவதற்கு முன்பாக பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளும். புற்கள், வைக்கோல் போன்றவற்றை கொண்டு மென்மையான ஒரு படுக்கையைத் தயார் செய்து கொள்ளும். இனப்பெருக்க நாளன்று சுமார் 30 இருந்து 40 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். அதுவரைக்கும் எந்த பிரச்னையும் இல்லை.  எல்லா பிரச்னைகளும் அதற்கு மேல்தான் ஆரம்பமாகும். இயற்கை எவ்வளவு நம்பிக்கையானதோ, அதே அளவிற்குக் கொடுமையானதும் கூட. பிறந்த ஒவ்வொரு குட்டியும் ஒரு சோற்று பருக்கை அளவிற்கே இருக்கும். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் சோற்றுப் பருக்கை அளவிற்குப் புழு என்றால் கூட பரவாயில்லை, பிறந்திருப்பது விலங்கின் குட்டிகள். ஒவ்வொன்றும் எப்படியே முட்டி மோதி வெளியே வந்துவிடுகின்றன. பிறப்பதை விட உயிர் வாழ்வது  தான் சர்வைவலின் தொடக்கம். இதோடு இயற்கை நின்றுவிடவில்லை, இன்னொரு ட்விஸ்டையும் வைத்திருக்கிறது. பெண் டெவிலுக்கு நான்கு பாலூட்டும் முலைகளே இருக்கும். அதில் 40 குட்டிகள் பால் அருந்துவதே நினைத்துப் பார்க்க முடியாத கொடூரம். 40 குட்டிகளில் எந்தக் குட்டி பால் குடித்தது எந்தக் குட்டி பால் குடிக்கவில்லை என்பதைத் தாயால் கண்டுபிடிப்பதே இயலாத காரியம். முடிவில் ஐந்தில் இருந்து எட்டு குட்டிகள் வரை மட்டுமே உயிர் பிழைக்கும். இதில் இன்னொரு துயர சம்பவம், பிழைக்காது எனத் தெரிகிற குட்டிகளை டெவில் தனக்கு இரையாக்கிக் கொள்ளும். பல கோடி உயிரணுக்களின் போட்டியில் ஒரு உயிரணுதான் மனிதனைப் படைக்கிறது. டெவிலின் 40 குட்டிகளில் ஒன்றிரண்டுதான் தப்பிப் பிழைக்கிறது. இயற்கை எவ்வளவு முரணானது.

முள்ளம்பன்றி (Porcupine)

இந்திய முள்ளம்பன்றிகளில் கர்ப்ப காலம் 240 நாட்கள் நீடிக்கும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவைக்கு 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும். குட்டிகளின்  உடல் குட்டையான மென் முட்களால் மூடப்பட்டிருக்கும். குட்டிகள் பிறக்கும் பொழுது, வால் பகுதியே முதலில் வெளியே வரும். தாய் முள்ளம்பன்றியின் பிரச்னை அதன் முள்ளில் இருந்துதான் தொடங்குகிறது. மென்மையான முட்கள்தான் என்றாலும் இவை தாயின் உடலைக் காயப்படுத்திவிடுகின்றன. குட்டிகள் உலகிற்கு வந்த அடுத்த சில மணி நேரங்களில் முட்கள் உறுதியாகிவிடுகின்றன. 

கடல் குதிரை (sea horse)

இணை சேர்க்கை முடிந்ததும் பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். முட்டைகளைப் பாதுகாத்து அவற்றைப் பெற்றெடுக்க வேண்டியது ஆண் கடல் குதிரையின் பொறுப்பு. சுமார் 200 முட்டைகள் வரை சுமந்தாக வேண்டும். முட்டையில் இருந்து வெளியே வருகிற குட்டிகள் சில நாட்கள் அதன் பாதுகாப்பு பையிலேயே இருக்கும். உலகிலேயே ஆண்கள் மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது இந்த விலங்கு மட்டும்தான். 

பிரசவத்திற்குப் பயந்தாலும் குட்டிகளைப் பெற்றாக வேண்டுமென்பது இயற்கையின் விதி. 

அடுத்த கட்டுரைக்கு