Published:Updated:

"கடற்கரையில் முட்டையிடும் சுதந்திரம்கூட கிடையாதா?" - மாலத்தீவில் கடல் ஆமைக்கு நிகழ்ந்த சோகம்

பல லட்சம் வருடங்களாக முட்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமித்திருக்கிறார்கள் மனிதர்கள். வேறு வழியின்றி ஆமை விமான ஓடுதளத்தில் முட்டைகளை இட்டிருக்கிறது.

"கடற்கரையில் முட்டையிடும் சுதந்திரம்கூட கிடையாதா?" - மாலத்தீவில் கடல் ஆமைக்கு நிகழ்ந்த சோகம்
"கடற்கரையில் முட்டையிடும் சுதந்திரம்கூட கிடையாதா?" - மாலத்தீவில் கடல் ஆமைக்கு நிகழ்ந்த சோகம்

கடலில் வாழும் ஆமைகள் எங்கே எப்போது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடல் ஆமைகள் ஒவ்வொரு வருடமும் கரையேறி வந்து கடற்கரையில் முட்டையிட்டுச் செல்லும். அதே போல மாலத்தீவில் முட்டையிடக் கரைக்கு வந்த ஆமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் மனிதர்கள். 

ஒரு வருடமாகத்தான் அது மனிதனுக்குச் சொந்தம், ஆனால் பல லட்சம் வருடங்களாக அது ஆமைக்குச் சொந்தமான இடம்

Photo Courtesy:NASA

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் மாலத்தீவு என்பது பல குட்டிக் குட்டி தீவுகளின் கூட்டமைப்பு. அதில் ஒரு தீவான மாஃபரு (Maafaru) என்ற இடத்தில் தான் இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 9-ம் தேதி முட்டையிடுவதற்காகக் கரையேறியிருக்கிறது ஒரு கடல் ஆமை. பச்சைக் கடல் ஆமை வகையைச் சேர்ந்த இந்தப் பெண் ஆமை முட்டையிடுவதற்கான இடத்தைத் தேடி அலைந்திருக்கிறது. பொதுவாக ஒரு கடல் ஆமை கரையேறியவுடன் முட்டைகளை இட்டுவிடாது. முதலில் அதற்கான கடற்கரை மணலில் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்கும் என நினைக்கிறதோ அங்கே செல்லும். பின்னர் பின்னால் இருக்கும் துடுப்புகளால் மண்ணைத் தோண்ட ஆரம்பிக்கும். அதுவும் ஏனோதானோ என்றெல்லாம் கிடையாது. சரியாக அந்தக் குழியின் வாய்ப்பகுதி குறுகியதாகவும் உள்ளே அகலம் பெரிதாகவும் இருக்கும் வகையில் ஒரு குழியைத் தோண்டும்.

கோப்புப் படம்

எத்தனை முட்டைகளை அதனுள்ளே இட முடியுமோ அந்த அளவுக்கு அந்த குழியின் ஆழமிருக்கும். எனவே அதைக் குழி என்று சொல்வதை விடவும் ஆமை உருவாக்கும் மணல் கூடு என்று சொன்னால் பொருத்தமானதாக இருக்கும். பின்னர் முட்டையிடத் தொடங்கும். சில சமயங்களில் அதிகபட்சமாக இருநூறு முட்டைகள் வரை ஒரு கூட்டில் இடும். ரப்பர் பந்துகளைப் போல நெகிழும் தன்மையுடன் முட்டைகள் இருக்கும். இதற்கே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கடந்து விடும் நிலையில் முட்டைகளை இட்ட பின்னர் அந்தக் குழியைச் சுற்றியிருக்கும் மணலைக் கொண்டு மூடத் துவங்கும். முழுவதுமாக மணல் நிரம்பிய பின்னர் உடலைத் தூக்கி அடித்து அதைச் சமன் செய்யத் தொடங்கும்.' ஆமை நடனம்' எனப்படும் இதன் மூலமாக மற்ற விலங்குகள் குழியை எளிதாகத் தோண்டி விடாதபடி மணலை இறுக்கமாக்க உதவும். அதற்குப் பின்பு குழியிலிருந்து சற்று தொலைவில் சென்று மணலைக் குழியின் மீது வாரி இறைக்கும். இதுவும் ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். வந்து போன தடயமே இல்லாமல் செய்வதற்காக ஆமை கடைப்பிடிக்கும் இறுதி வழிமுறைதான் அது.

கோப்புப் படம்

ஆமை இவ்வளவு கடினமான முயற்சிகளை எடுப்பது மற்ற விலங்குகளிடம் இருந்து முட்டையைக் காப்பாற்றத்தான். இந்த மொத்த செயல்முறையையும் ஆமை செய்து முடிப்பதற்கு  இரண்டு மணி நேரமாவது தேவைப்படும். முட்டையிட்டு விட்டால் மீண்டும் கடலுக்குத் திரும்பி விடும் பெண் ஆமையின் வேலை அதோடு முடிந்து விடுகிறது.  அதன் பின்னர் அந்த முட்டைகள் சராசரியாக இரண்டு மாதங்களில் தானாகவே பொரிந்து குட்டிகள் வெளியேறி கடலுக்குள் செல்லும். உலகில் பல பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் இது போல ஆமைகளைப் பார்க்கலாம்.

கோப்புப் படம்

அப்படி மேற்பரப்பில் குழி தோண்டி முட்டையிடத்தான் மாலத்தீவில் கரையேறியிருக்கிறது அந்த ஆமை. ஆனால் அது எதிர்பார்த்தது போல அங்கே மணற்பரப்பு தென்படவில்லை .காரணம், அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருந்த விமான ஓடுதளம்தான். வேறு வழியில்லாமல் முட்டைகளை அங்கேயே இட்டிருக்கிறது அந்தப் பெண் ஆமை. பல லட்சம் ஆண்டுகளாக ஆமையின் இடமாக இருந்த அது தற்போது மனிதர்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரி எதற்காக பச்சைக் கடல் ஆமை எதற்காக விமான ஓடுதளத்தை நோக்கி வந்தது? அதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?

கடல் ஆமைகளின் நினைவுத் திறன்:

நேற்று போன இடத்துக்கு நாளைப் போக வேண்டும் என்றால் கூகுள் மேப்பை உதவிக்குக் கூப்பிடும் மனிதர்கள் போல கிடையாது கடல் ஆமைகள். இருப்பிடம் தொடர்பாக ஆமைக்கு இருக்கும் நினைவுத் திறன் என்பது நம்பவே முடியாத வகையில் இருக்கிறது.ஓர் ஆமை எந்த இடத்தில் முட்டையிடுகிறதோ அடுத்த முறை அதே இடத்தில்தான் முட்டையிடுவதற்காகத் திரும்பவும் வரும். ஒரு முறை ஒரு கடற்கரையில் முட்டையிட்டு கடலுக்குச் செல்லும் கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வரும் திறன் கொண்டவை. அப்படி உலகம் முழுக்க பயணப்பட்டாலும் முட்டையிட்ட இடத்தை நோக்கிச் சரியாக திரும்பி வரும் அளவுக்கு ஆமைகளின் நினைவுத் திறன் அபாரமானது. மெரினா கடற்கரையில் ஒரு ஆமை முட்டையிட்டுச் சென்றால் அந்த ஆமை அடுத்த தடவையும் மெரினாவுக்கே திரும்பி வரும். அது மட்டுமல்ல அதன் குஞ்சுகளும் வளர்ந்த பின்னர் முட்டையிட அந்த இடத்தை நோக்கியே வரும்.

இது பல லட்சம் ஆண்டுகளாக ஒரு சங்கிலித்தொடர் போலத் தொடர்ந்து நடந்து வரும் இயற்கை நிகழ்வு. இரவு நேரங்களில் மட்டுமே முட்டையிட ஆமை கரையேறும். அதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் கடற்கரையில் அதிகமாக விலங்குகளின் நடமாட்டம் இருக்காது. இருள் சூழ்ந்திருக்கும் என்பதால் பாதுகாப்பானதாகவும் இருக்கும். மேலும் இரவு நேரங்களில் நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகளின் எழுச்சி அதிக அளவில் இருக்கும் என்பதால்  கடலில் இருந்து ஆமை சுலபமாக கரையேறவும் அது உதவியாக இருக்கும்.

என்ன ஆனது மாஃபருவில் இருந்த கடற்கரை?

Photo Credit:Google Maps

மாலத்தீவு கூட்டமைப்பில் மனிதர்களின் குடியேற்றம் நிகழ்ந்துள்ள ஒரு தீவுப் பகுதியாக இருக்கிறது மாஃபரு. இந்நாட்டின்  பொருளாதாரம் சுற்றுலாவை மையப்படுத்தியே இருக்கிறது. எனவே அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அந்நாட்டின் அரசு தீவிரமாக இருக்கிறது. அதற்காகப் பல தீவுகளில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாஃபரு தீவில் விமான நிலையத்துடன் இணைந்த ஹோட்டலும் மற்றும் அங்கே விமானங்கள் இறங்குவதற்கான ஓடுபாதை ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக சுமார் 400 கோடி ரூபாயை வளர்ச்சி நிதி என்ற பெயரில் மாலத்தீவுக்கு அளித்திருக்கிறது ஐக்கிய அரபு நாடுகள்  அதைத் தொடர்ந்து கடந்த வருடம் 2,200 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுபாதை ஒன்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கடந்த வருடம் முட்டையிட்டுச் சென்ற கடல் ஆமை  தற்போது திரும்பி வந்த போது அங்கே இருந்த கடற்கரையை காணாமல் வேறு வழியின்றி விமான ஓடு பாதையில் முட்டைகளை இட்டிருக்கிறது. அந்தப் பெண் ஆமைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை, அதைத் தூக்கிச் சென்று பத்திரமாக மீண்டும் கடலுக்குள் திருப்பி விட்டிருக்கிறார்கள் உள்ளூர் வாசிகள். கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு பலரும் அனுதாபத்தைத் தெரிவித்து வருகிறார்கள். மாலத்தீவு அரசு கடல்வாழ் உயிரினங்களின் இயற்கைச் சூழலமைப்பை பாதுகாப்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது எனச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள் உள்ளூர் வாசி ஒருவர். மாஃபரு வாசிகளின் கருத்தும் அதேபோலத்தான் இருக்கிறது.

தொடக்கம் முதலே அவர்கள் இந்த விமான நிலையத் திட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள், இது அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்துக்காக செயல்படுத்த நினைக்கும் திட்டம் என்பது அவர்களின் கருத்து. நாடு தொழில்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைவதற்கு முன்னேற்றம் என்ற பெயரில் எவ்வளவுதான் இயற்கையைக் காவு கொடுக்க முடியும் என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இந்த கடல் ஆமை விஷயத்தில் அரசு தரப்போ வேறு விதமாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. ' இந்த விமான ஓடு தளம் அமைக்கப்பட்டதால் முட்டையிடுவதற்காக வரும் ஆமைகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையவில்லை  என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பச்சைக் கடல் ஆமைகள் என்பது விரைவாக அழிந்து வரும் ஆபத்தில் இருக்கும் ஆமையாக இருக்கிறது. ஏற்கெனவே பருவ நிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது, முட்டையிடும் நிலம் பறிபோவது எனப் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் கடல் ஆமைகளுக்கு இருக்கின்றன. இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் மனிதர்களும், வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்தும் அநியாயங்களும்தான்.

இப்போது அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் அனைவரிடத்திலும் அந்த ஆமை எழுப்பும் கேள்வி 'பல லட்சம் ஆண்டுகளாக எனக்குச் சொந்தமாக இருந்த இடத்தை ஏன் பறித்துக் கொண்டீர்கள்?'  என்பதாகத்தான் இருக்கும். இப்போது கடலுக்கு சென்று விட்ட அந்த ஆமை அடுத்த வருடமும் அதே இடத்தைத் தேடி முட்டையிட வரும், அப்போதும் அதே கேள்வியை மீண்டும் கேட்கும் ஆனால் அதனிடம் திருப்பி சொல்வதற்கு  எந்தப் பதிலும் இருக்கப்போவதில்லை.