Published:Updated:

கோடைக்காலத்தில் போர்வெல் அமைப்பது சரியா? - வேளாண் பொறியாளர் விடுக்கும் எச்சரிக்கை!

புது போர்வெல் அமைத்து, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் மக்கள் அதிகமானோர் இருப்பது உண்டு. ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், வறண்ட போர்வெல்களிலும் தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும்.

கோடைக்காலத்தில் போர்வெல் அமைப்பது சரியா? - வேளாண் பொறியாளர் விடுக்கும் எச்சரிக்கை!
கோடைக்காலத்தில் போர்வெல் அமைப்பது சரியா? - வேளாண் பொறியாளர் விடுக்கும் எச்சரிக்கை!

கோடைக்காலத்தில் சென்னையில் எந்த ஏரியாவுக்குச் சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் பார்க்க முடியும். புதிய போர்வெல்களுக்காக லாரிகள் நிலத்தைக் குடையும் காட்சிதான் அது. திடீரென கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்கவும் தண்ணீர் லாரிகளின் தட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கவுமே மக்கள் போர் போடும் முடிவுக்கு வருகின்றனர். ஆனால், கோடைக்காலத்தில் இப்படி அமைக்கப்படும் போர்வெல்களால் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக விளக்குகிறார் திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ்.

"கடுமையான வறட்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. பல வீடுகளில், கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் வருகிறது. கோடைக்காலத்தில் போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைவது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். இது நகரங்களில் அதிகமாக நடக்கிறது. நாம் தண்ணீரை எடுத்துக்கொண்டு மட்டுமே இருப்பதுதான் அதற்குக் காரணம். பொதுவாகக் கோடையில் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போய்விடும். அதனால் போர்வெல்களில் உள்ள ஊற்றுகளில் நீர் இருக்காது. இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கோடைக்காலத்தில் போர்வெல்களில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தால், இன்னும் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால், பயப்படத் தேவையில்லை. அதனால் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் புத்திசாலித்தனம். அதனால், புது போர் பற்றி யோசிக்கத் தேவையில்லை 

பொதுவாக, கோடைக்காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடைக்காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால், தண்ணீரைத் தேடி அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்துக்கு ஊடுருவி 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்... போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேற்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமென்ட்போல மாறி, மேலே சில 100 அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள், ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்துக்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து நீர் மூழ்கி மோட்டார்களைக் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் இறக்க முடியாமலோ... அல்லது எடுக்க முடியாமலோ போய்விடும்.  

இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!

'புது போர்வெல் அமைத்து, தண்ணிக்குப் பதிலா வெறும் புகைதான் வந்தது’ என வேதனைப்படும் மக்கள் அதிகமானோர் இருப்பது உண்டு. ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படிப் புகை வந்த போர்வெல்களிலும், வறண்ட போர்வெல்களிலும் தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு முக்கியமாகச் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம். கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, 'நீர்ச் செறிவூட்டல்’ செய்தால், தண்ணீர் ஊறிவிடும்.

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில்... 6 அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். (இடம் குறைவாக இருந்தால் ஆழத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.) அந்தக் குழியின் அடிப்பாகத்திலிருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையைக் கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்துக்குக் கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்... மழைநீர், கற்களில் வடிகட்டப் பட்டு கிணறுகளில் சேகரமாகும். இப்படித் தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும்போது, ஏற்கெனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமென்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து, இனி தண்ணீரே கிடைக்காது என நீங்கள் நினைத்த இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும். மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்" என்கிறார் பிரிட்டோ ராஜ்.

விவசாய நிலங்களில் போர்வெல் அமைக்கும் தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்ளப் பசுமை விகடனில் வெளியான 'மழைநீர் அறுவடை... மானியம் கொடுக்கும் அரசு!' கட்டுரையைப் படிக்கவும்.