Published:Updated:

ஆப்பிரிக்கப் பாறை, ஜெர்மன் சிலிகா, வண்ணாத்திக் கெண்டை... வியப்பூட்டும் மீன்காட்சியகம்!

மீன் காட்சியகத்தில் பல மீன் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 450 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. ஒவ்வொரு மீன் தொட்டி பற்றியும் விளக்குவதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆப்பிரிக்கப் பாறை, ஜெர்மன் சிலிகா, வண்ணாத்திக் கெண்டை... வியப்பூட்டும் மீன்காட்சியகம்!
ஆப்பிரிக்கப் பாறை, ஜெர்மன் சிலிகா, வண்ணாத்திக் கெண்டை... வியப்பூட்டும் மீன்காட்சியகம்!

பாபநாசத்திலிருந்து அகஸ்தியர் அருவி செல்லும் வழியில் அமைந்திருக்கிறது அரசு மீன்காட்சியகம். தமிழக அரசின் `கயல்' திட்டத்தின்கீழ் இந்த மீன்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் வாழும் உயிரினங்களைக் காட்சிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். மற்ற மீன் காட்சியகத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேட்ட போது மற்ற காட்சியகங்களில் கடல் நீரில் வாழும் உயிரினங்களையும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இங்கு நன்னீரில் வாழும் உயிரினங்களை மட்டுமே நாங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீன் காட்சியகத்தில் எந்தவிதமான செயற்கை தாவரமும் அமைக்கப்படவில்லை எனவும் இயற்கை தாவரங்களை கொண்டே அனைத்து மீன்தொட்டிகளையும் வடிவமைத்து இருக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

கயல் திட்டத்தின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மீன்காட்சியகத்தின் வெளிப்புறச் சுவரில்கூட மீன்கள் நீந்துவது போன்ற அமைப்புடன் அருமையாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதற்காக ஈரோட்டிலிருந்து ஒரு கலைஞரை வரவழைத்து இந்தப் பணியைச் செய்ததாக அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார். மொத்த மதிப்பீடாக 25 லட்சம் ரூபாய் வரை இந்த மீன்காட்சியகம் அமைக்கச் செலவிட்டிருக்கிறார்கள். மீன் காட்சியகத்திற்குள் நுழைவதற்கு பெரியவர்களுக்கு 20 ரூபாயும் குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். 

மீன் காட்சியகத்தில் பல மீன் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 450 லிட்டர் கொள்ளளவு கொண்டவை. ஒவ்வொரு மீன் தொட்டி பற்றியும் விளக்குவதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மீன்தொட்டியை முழுவதுமாக அமைப்பதற்கு இரண்டரை லட்சம் வரை செலவாகும் என அந்த அதிகாரி தெரிவித்தார். 

கயல் மீன் காட்சியகத்திற்குள் நுழைந்தவுடன் நான் பார்த்த முதல் மீன் தொட்டி போன்சாய் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொட்டியில் இருந்த டாங்கோ பாறைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாம். நீர்வாழ் தாவரங்களை வளர்ப்பதற்காக மூன்று அடுக்குகளில் மணலை வடிவமைக்கிறார்கள். ஜெர்மன் சிலிகா, ப்ளானட் பேஸ், கான்ட்ரோ சாயில் என மூன்று அடுக்குகளாக மண் அமைக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் ஊடுருவிச் செல்வதற்கு ஏதுவாக முதல்தர மணலையே பயன்படுத்துகிறார்கள். ஹர்லிகுயின் ரெஸ்போரா, ரம்மி நோஸ் டெட்ரா, செர்ரி பார்ப், பஃப்பர் பிஷ், கிளாஸ் பிஷ் ஆகிய மீன்வகைகள் போன்சாய் தொட்டியில் வளர்க்கப்படுகின்றன. இதில் கிளாஸ் பிஷ் ஆனது உள்ளே இருக்கக்கூடிய உடல் பாகங்கள் வெளியே தெரியும் வகையிலான உடலமைப்பு உடையது. பஃப்பர் பிஷ் தண்ணீரை விட்டு எடுக்கும் பொழுது உப்பக்கூடிய தன்மை உடையது. இந்த மீன்கள் அனைத்தும் இந்தோனேசியா, பிரேசில், இலங்கை போன்ற பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒவ்வொரு மீன் தொட்டிக்கும் தனிச் சுத்திகரிப்பு வசதி செய்து வைத்திருக்கிறார்கள். 

அடுத்த தொட்டி இவாகுமி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டா கோரிடோரஸ், பென்குயின் டெட்ரா, கார்டினல் டெட்ரா ஆகிய மீன்வகைகள் இதில் வளர்க்கப்படுகின்றன. இந்தத் தொட்டியில் நீரில் கரையாமல் இருப்பதற்காக உலையில் வைத்து எரிக்கப்பட்ட மண்ணை கயல் திட்டத்திற்காகவே பிரத்யேகமாகச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளார்கள்.

அடுத்த தொட்டி சுமத்ரா பயோடோப் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் தாமிரபரணி ஆற்றில் மட்டும் வாழும் அரிய உயிரினமான ``புன்டியஸ் தாமிரபரணிஸ்” வளர்க்கப்படுகிறது. இது 4 முதல் 7 ஆண்டுகள் வரை வாழுமாம். வட்டார வழக்கில் இந்த மீனுக்கு வண்ணாத்திக் கெண்டைமீன் என்று பெயர். நம் பகுதியில் மட்டும் காணப்படுவதால் இது பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார். 

ஏஞ்சல் ஃபிஷ் மற்றும் டைகர் பார்ப் ஆகியவை ஒடிசாவிலிருந்து பெறப்பட்ட ஆற்று மணல் உள்ள தொட்டியில் வளர்க்கப்படுகிறது. வேகமாக நீந்திச் செல்லும்போது வானவில் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நியான் ரெயின்போ பிஷ், நியான் டெட்ரா ஆகியவை லோலா முறைப்படி அமைக்கப்பட்ட தொட்டியில் வளர்க்கப்படுகின்றன. 

மாங்குரோவ் பயோடோப் முறைப்படி அமைக்கப்பட்ட தொட்டியில் தாமிரபரணி ஆற்றில் காணப்படும் மீன் வகைகளும் கயல் மீன்காட்சியகத்தில் வளர்க்கப்படுகின்றன. மிஸ் கேரளா என்று அழைக்கப்படும் புன்டியஸ் டெனிசோனி வகை மீன்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இது கேரளாவில் மட்டுமே வாழும் அரிய உயிரினம் ஆகும். எரிமலை சாம்பலை இங்கு மண்ணாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

அரிசோனா டெசர்ட் முறைப்படி அமைக்கப்பட்ட மீன் தொட்டியில் ரெஸ்போரா டேனிகானியஸ் வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இவை அரிய வகையைச் சேர்ந்தவை ஆகும். எப்பொழுதும் வாயசைத்துக் கொண்டிருக்கும் டிஸ்கஸ் பிஷ் வகைகளும் ஒரு தொட்டியில் வளர்க்கப்படுகின்றன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு மீன்கள் ஒன்றுக்கொன்று விவாதித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றுவதால் இதற்கு அப்பெயர் வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

காட்சியகத்தைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பொதிகை மலையின் அடிவாரத்தில் அந்தப் பொதிகையின் நகலையே பார்த்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. அத்தனையும் இப்பொழுதுதான் வளர்ந்து கொண்டிருப்பதால் முழுமையான வளர்ச்சியை எட்ட இன்னும் சில காலம் ஆகலாம். பொதிகை மலை உச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்காக அவர்கள் வாழும் வீடு, பயன்படுத்தும் பொருள்களை இங்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களே அவற்றைச் செய்து தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வளவு வெயில் அடித்தாலும் அவர்கள் வடிவமைத்த மூங்கில் வீட்டிற்குள் நுழையும்போது மட்டும் மிகவும் குளிர்ந்த நிலையே நிலவும் என அங்கு வேலை செய்யும் நபர்கள் தெரிவித்தனர். 

குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஊஞ்சலும், சறுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. மூங்கில் மற்றும் பனைமரத்தைக் கொண்டும் உருவாக்கி இருக்கிறார்கள். செயற்கையாக ஓர் அருவியையும் உருவாக்கியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது நீர் வழிந்தோடும் அந்தக் காட்சி. நீர் வழிந்து விழும் இடத்திலும் தாமிரபரணியில் வாழும் மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிங்கவால் குரங்குகள், இப்பகுதியில் மட்டுமே காணப்படக்கூடிய தவளை இனங்கள் இங்குச் சிலையாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. அலங்கார வளைவு உட்பட இன்னும் பல வேலைப்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மிகச்சிறந்த காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். 

``இன்னும் மீன் காட்சியகத்திற்கு பல வகையான மீன்கள் வாங்கத் திட்டமிட்டுள்ளோம். முழுமையான செயல்பாட்டுக்கு மீன்காட்சியகம் வரும் பொழுது இன்னும் பல மீன்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் பொதிகை மலையில் மட்டுமே காணக்கூடிய அபூர்வ மூலிகைகளை மூலிகை காட்சியகத்தில் வைத்து வளர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இப்பகுதியின் மருத்துவக் குணங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தத் திட்டத்திற்கு அனுமதி கேட்டிருக்கின்றோம். தொடர்ந்து பல தரப்பட்ட முயற்சிகளைச் செய்து ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதியாக இதை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறோம்” என்று கூறினார் இங்கே பணிபுரியும் அன்பு. 

பாபநாசம் செல்பவர்கள் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த மீன் காட்சியகத்திற்குச் சென்று வரலாம். அங்குள்ள மீன்வகைகளைக் கண்டு ரசிப்பதோடு காணி பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் தெரிந்துகொண்டு வரலாம். நிச்சயம் நல்ல ஓர் அனுபவமாக இருக்கும்.