Published:Updated:

"கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்" - மோடி பேச்சும் கங்கையின் உண்மை நிலையும்!

இந்திய அரசு கங்கையைச் சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. 2019-20-ம் ஆண்டிற்குள் 20,000 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

"கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்" - மோடி பேச்சும் கங்கையின் உண்மை நிலையும்!
"கங்கைபோல வைகையும் தூய்மைப்படுத்தப்படும்" - மோடி பேச்சும் கங்கையின் உண்மை நிலையும்!

டந்த 13-ம் தேதி தேனி வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, போகிற போக்கில், "கங்கையைப்போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம்" என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். இந்த ஒரு வார்த்தையை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் பறந்த வண்ணம் இருந்தன. உண்மையிலேயே கங்கை சுத்தமாகிவிட்டதா, வைகை அவ்வளவு மாசடைந்துவிட்டதா எனத் தேடினால் கங்கை குறித்தே பல வருந்தத்தக்க விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

"அன்னை கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வதில் நான் பேருவகை கொள்கிறேன்." - 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் பேசிய வசனம்தான் இது.

கங்கை நதி அதன் புனிதத்தினாலும் கலாசார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் முக்கியத்துவம் பெற்றதாகிறது. 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவிகித இந்திய மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே, கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சிதான். ஆனால், தேனியில் பேசியதுபோல உண்மையிலேயே கங்கை தூய்மையடைந்துவிட்டதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். 

கங்கை நதியின் பயணமானது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகள் சேரும் இடத்தில் தொடங்குகிறது. இந்த இடத்துக்குப் பின்னர்தான் இந்த ஆறு கங்கை என அழைக்கப்படுகிறது. கங்கை ஆறு ரிஷிகேஷ், ஹரித்வார் வரை மலைகளின் வழியாகத்தான் பயணம் செய்யும். ரிஷிகேஷ், ஹரித்வாரில்தான் சமவெளிப் பகுதிகளில் கங்கைப் பயணிக்கத் தொடங்கும். இதன் மொத்த நீளம் 2,525 கி.மீ. கங்கை மொத்தமாக உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் வழியாகப் பயணிக்கிறது. இந்த மாநிலங்களில் உத்தரகாண்டில்தான் அதிகபட்ச தூரமாக 1,420 கி.மீ., பயணிக்கிறது. மேற்கு வங்காளத்தில் நுழைந்த பின்னர் நதியை மேக்னா என்று அழைக்கின்றனர். 

கங்கையின் உண்மை நிலை?

நதி முழுக்க அணைகளும் தடுப்பணைகளும் அதிகம். நதியின் இயல்பான நீரோட்டம் திசை திருப்பப்பட்டுப் பெரிய குழாய்கள் மூலம் நீர் மின்நிலையங்களுக்காகக் கொண்டு செல்லப்படுகின்றது. இவையனைத்தும் அதன் சூழலியல் சமநிலையைக் குலைத்துப் பல்லுயிர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. முக்கால்வாசி அழிந்தும்விட்டது. ஆறு அதன் இயற்கையான பாதையில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், மனிதத் தலையீடுகள் உருவாக்கிய தடைகள் கடல் நோக்கி ஓடும் ஆற்றை ஆங்காங்கே குட்டைகளாகத் தேங்கிநிற்க வைத்துவிட்டன. அதன் நீர்வழிப் பாதையின் பல இடங்களில் நீரோட்டமே இல்லாமல் போய்விட்டது. ஹரித்வார், பிஜ்னோர், நரோரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள தடுப்பணைகள் மட்டுமே 90 சதவிகிதம் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை நீரோட்டத்தைத் தடைசெய்வது மட்டுமல்ல, பல லட்சம் உயிரினங்களின் வாழிடத்தைக் குப்பைக் குளங்களாக மாற்றிவிட்டன. அந்தக் குளங்களில் நதிநீரைவிடத் தொழிற்சாலைக் கழிவுகளும் அன்றாட நகர்ப்புறக் கழிவுகளுமே ஆட்சி புரிகின்றன.

பல மில்லியன் லிட்டர் கழிவுநீர், குடியிருப்புகளிலிருந்தும், பல பில்லியன் லிட்டர் கழிவுகள் தொழிற்சாலைகளிலிருந்தும் கங்கையில் கலந்துகொண்டிருக்கிறது. நதிநீர் முழுவதும் நுண்கிருமிகளாலும், வேதிப்பொருள்களாலும் மாசடைந்துள்ளது. அது போக நதிப்படுகையில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயன பூச்சிக்கொல்லிகளும் அங்குதான் கலக்கின்றன. எல்டிரின், டையெல்டிரின், பி.ஹெச்.சி, ஹெச்.சி.ஹெச் போன்ற ஆபத்தான ரசாயன உரங்களை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அவையும் ஆற்றில் கலக்கவே அவை மற்ற வேதிப்பொருள்களோடு வினைபுரிந்து ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் நதியில் வாழும் மீன் இனங்களைப் பாதிக்கின்றன. ஆக, கங்கை இன்னும் தூய்மையாகவில்லை. 

ஒதுக்கப்பட்ட நிதிகளும் நடக்காத பணிகளும்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், கங்கைச் சுத்திகரிப்புக்காக 2014 - 2018 இடையேயான காலகட்டத்தில் ரூபாய் 3,867 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், 'கங்கையைச் சுத்தம் செய்ய மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை' என்று அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்காக, ஒதுக்கப்பட்ட பணமும் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2018-ம் ஆண்டுவரை கங்கையைத்  தூய்மையாக்கியதற்கான தரவுகள் மத்திய அரசிடம் இல்லை. 'கங்கையைச் சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை' எனத் தேசிய பசுமை ஆணையமும் அரசை விமர்சித்திருக்கிறது. இதுபோக, கடந்த ஆண்டு கங்கையை சுத்தம் செய்யக்கோரி, சூழலியல் பேராசிரியர் ஜி.டி.அகர்வால் 112 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். கங்கையைச் சுத்தப்படுத்துவது தொடர்பாகப் பல கடிதங்களைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையானது, 'கங்கை நதியைச் சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை' என்று சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

2019-20-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி ரூபாய் செலவில் நமாமி கங்கா திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனால், ராஜீவ்காந்தி காலத்தில்தான் முதன்முதலில் கங்கை சுத்தம் செய்ய திட்டம் கொண்டுவரப்பட்டது என்கிறது, வரலாறு. இரு கட்சிகளும் கங்கையைத் தூய்மை செய்யத் திட்டங்கள் கொண்டுவந்தன. ஆனால், இன்று வரையில் கங்கை உயிர்ப்பிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

இப்போது முதல் வரிக்கு வருவோம், 'கங்கையைப்போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம்'. வைகையும் மதுரை நகரத்துக்குள் வரும்போது கழிவு நீராகத்தான் சென்று கொண்டு இருக்கிறது, நிச்சயமாகச் சுத்தம் செய்ய வேண்டும். அது மறுப்பதற்கில்லை. ஆனால், கங்கைபோல சுத்தம் செய்வோம் என்ற வார்த்தையில்தான் 'வாக்கு அரசியல்' இருக்கிறது.