Published:Updated:

'காடுகள்தான் சிறந்த தண்ணீர் விவசாயிகள்! அடித்துச் சொல்லும் ஆய்வு

'காடுகள்தான் சிறந்த தண்ணீர் விவசாயிகள்! அடித்துச் சொல்லும் ஆய்வு
'காடுகள்தான் சிறந்த தண்ணீர் விவசாயிகள்! அடித்துச் சொல்லும் ஆய்வு

காடுகளே சிறந்த விவசாயிகள். அவை யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எந்த லாபத்தையும் எதிர்பார்த்து விவசாய முறைகளை மாற்றிக்கொள்வதில்லை. ஆம், காடுகளும் மலைகளும் வானிலிருந்து பெய்யும் மழையை வைத்து இந்தப் பூமிக்குத் தேவையான தண்ணீரை விவசாயம் செய்கின்றன.

னிதர்களாகிய நாம் விவசாயம் செய்கிறோம். பல வகையான பயிர்களை அறுவடை செய்கிறோம். அதற்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா... காடுகளும் விவசாயம் செய்கின்றன. அவை அறுவடை செய்வது நம்மைப்போல் மனிதர்களுக்கு மட்டுமே 'லாபம்' தரும் பயிர் வகைகளை அல்ல. அவை தண்ணீரை அறுவடை செய்கின்றன. ஆம், காடுகளும் மலைகளும் வானிலிருந்து பெய்யும் மழையை வைத்து இந்தப் பூமிக்குத் தேவையான தண்ணீரை விவசாயம் செய்கின்றன. தம் பஞ்சுபோன்ற நிலத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தண்ணீரை வடிகட்டுகின்றன. இறுதியாகச் சுத்தமான தண்ணீர் அறுவடை செய்யப்படுகிறது. 

காடுகளே சிறந்த விவசாயிகள். அவை யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எந்த லாபத்தையும் எதிர்பார்த்து விவசாய முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. இயற்கையில் அவை எப்படித் தோன்றினவோ, எப்படிச் செயல்படுகின்றனவோ அப்படியே அவை இன்றும் இயல்பு மாறாமல் லாப நோக்கமின்றிச் செயல்படுகின்றன. அதனால்தான் அது காடு. லாபவெறி கொண்டு நாம் ஆடும் திருவிளையாடலில் சிக்கித் தவிப்பதால்தான் இது நாடு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முதலாவது இயல்பு மாறாமல் இருக்கிறது. இரண்டாவது இயல்பு மறந்து செயல்படுகிறது.

Dzalanyama Forest Reserve, Malawi

"மக்களுக்குத் தேவைப்படும் குடிநீருக்கும் காடழிப்புக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை. காடுகளை அழிப்பதாலெல்லாம் குடிநீர் விநியோகம் தடைப்படாது" என்றுதான் பல காலமாகச் சொல்லப்பட்டு வந்தது. அதைத் தவறு என்று சிலர் எதிர்த்தும் கொண்டிருந்தார்கள். மலாவியில் முதல்முறையாக அதை நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலாவி, தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் நான்கு திசையிலும் நிலங்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு குட்டி நாடு. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஹிசாஹிரோ நைட்டோ (Hisahiro Naito). பொருளாதார அறிஞரும் ஸுகுபா பல்கலைக்கழகத்தின் (University of Tsukuba) பேராசிரியருமான அவர் தன் குழுவோடு மலாவியில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பூமியில் நிறைய தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அவையனைத்துமே நாவுக்கினிய பாதுகாப்பான குடிநீர் என்று நம்மால் சொல்ல முடியாது. பஞ்சுபோல் காடுகள் தனக்குள் உறிஞ்சிக்கொள்ளும் தண்ணீர் எத்தனையோ மண், கற்கள் மற்றும் கனிமங்களைக் கடந்து சுத்திகரிக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றது. நாம் காடுகளை அழித்துக்கொண்டேபோவதால் அந்தச் சுத்திகரிப்பு முறை தோல்வியடைந்து குடிக்கத் தகுதியற்ற தண்ணீர்தான் மக்களைச் சென்றடைகிறது. அந்த மாதிரியான பிரச்னைகள் மலாவியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

தண்ணீர் மற்றும் காடழிப்புப் பிரச்னைகளை நேரடியாகச் சம்பந்தப்படுத்திச் செய்யப்பட்ட முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது. ஆய்வின் முதல்கட்டமாக அந்த நாட்டின் இயற்கை வளங்கள், ஆற்றல் மற்றும் சுரங்க அமைச்சகத்திடமிருந்து செயற்கைக்கோள் தரவுகள் சிலவற்றைச் சேகரித்தனர். 2000 முதல் 2010-ம் ஆண்டுவரை மலாவியில் நடந்துள்ள காடழிப்பு குறித்த தரவுகளைச் செயற்கைக் கோள்களிலிருந்து சேகரித்த பின்னர், அதை மக்களின் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விநியோகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். மக்களுக்குக் கிடைக்கும் அன்றாட குடிநீர் விநியோகம், அதன் தரம், மலாவி மக்களின் உடல் ஆரோக்கியம் போன்றவற்றை அந்நாட்டின் 2000 முதல் 2010-ம் ஆண்டுவரையிலான மக்கள்தொகை மற்றும் உடல் ஆரோக்கியக் கணக்கெடுப்புகளிலிருந்து சேகரித்தனர்.

பல்வேறு காரணிகளைக் கணக்கிலெடுத்து, பொதுமக்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகத்தை ஆய்வுசெய்தார்கள். அந்தக் காரணிகளில் மிக முக்கியமாகக் காடழிப்புகளை முழுமையாக ஆராய்ந்தார்கள். 21-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் மட்டுமே முந்தைய நூற்றாண்டின் இறுதியிலிருந்த வனப்பகுதியின் 14 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலேயே காடழிப்பு மிக அதிகமாக நடக்கும் நாடுகளின் பட்டியலில் மலாவியும் இடம்பெற்றிருப்பதைத் தங்கள் ஆய்வின்போது வெளியான வேறொரு ஆய்வின் முடிவுகள் மூலமாகத் தெரிந்துகொண்டனர். இந்தக் காரணிகள் மலாவியில் இயற்கையான குடிநீர் சுத்திகரிப்பு முறைகளைச் சிதைத்தது. அதோடு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த மழையை 9 சதவிகிதம் குறைத்தது. ஒன்பது சதவிகிதம்தானே என்றுகூட நாம் நினைக்கலாம். ஆனால், மலாவி போன்ற மிகச்சிறிய நாட்டில் ஒன்பது சதவிகித இழப்பு என்பது மிகவும் சிக்கலானது. அது அந்நாட்டின் குடிமக்களுடைய அன்றாட குடிநீர் விநியோகத்தில் ஒவ்வொருடைய பங்கிலும் ஐந்து சதவிகிதம்வரை பாதிக்கின்றது.

2000-க்குப் பிறகுதான் அங்கு காடழிப்பு தொடங்கியதா என்றால் பதில் இல்லையென்பதுதான். உலகளவில் மரப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தபோதே மலாவியிலும் காடழிப்பு அதிகரித்துவிட்டது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் கால்மேல் கால்போட்டு கண்மூடிச் சொகுசாக அமர்வதற்கு மலாவி போன்ற ஆப்பிரிக்க ஏழை நாடுகளின் குடிமக்கள் தங்கள் காடுகளை இழந்துகொண்டிருந்தனர். அதனால் சுற்றுச்சூழல் சீரழிந்து அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கூலித் தொழிலாளர்களாகச் சென்றுகொண்டிருந்தனர். ஆப்பிரிக்கா மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா என்று மூன்றாம் உலக நாடுகளின் காடுகள் அனைத்தும் இப்படித்தான் பரிதாபகரமான நிலைக்கு ஆளாகிக்கொண்டிருந்தன. அந்தப் பட்டியலில் 1970-களிலேயே மலாவியும் இணைந்துவிட்டது. 1990-களில் அங்கு வழக்கமாகப் பெய்யும் சராசரி மழை அளவு 18 சதவிகிதம் குறைந்தது. அப்போதிலிருந்து நடந்துகொண்டிருந்த காடழிப்பு நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு மழை அளவு குறைந்தது, மக்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர் விநியோகம் குறைந்தது, தற்போது அவர்களுக்குப் பற்றாக்குறையாக இருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் போன்றவற்றைப் பேசவே முடியவில்லை என்கிறது நைட்டோ செய்த ஆய்வு.

Photo Courtesy: JackyR

இந்தப் பிரச்னைகளோடு தற்போது காலநிலை மாற்றமும் தம் பாதிப்புகளைத் தரத் தொடங்கிவிட்டது. பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேபோகிறது. இப்போது வருடா வருடம் பெய்யும் மழையைவிட ஒன்று, 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் அல்லது 30 சதவிகிதம் அதைவிடக் குறைவாக இருக்கும். அங்கு தற்போது பெய்துகொண்டிருக்கும் மழையே வழக்கத்தைவிட ஒன்பது சதவிகிதம் குறைவாக இருக்க, இதிலிருந்து 30 சதவிகிதம் குறைந்தால் ஏற்படப்போகும் பாதிப்புகளைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. 2010-ம் ஆண்டுத் தரவுகளின்படி இன்னமும் மலாவியில் 17 சதவிகித மக்கள் பாதுகாப்பற்ற பகுதிகளிலிருந்துதான் தங்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மழை அளவு மேலும் குறைந்து மலாவி போன்ற நாட்டில் அப்படியொரு நிலை ஏற்பட்டால் அது நிச்சயம் பேரழிவாகத்தானிருக்கும்.

ஒருவேளை மலாவி தன் வனப்பரப்பைப் பாதுகாத்து மேலும் அதிகப்படுத்தினால் அந்தப் பேரழிவிலிருந்து தப்பிக்கலாம். அந்தக் காடுகள் அவர்களைப் பாதுகாக்கும். அதற்கு அவர்கள் காடழிப்பு நடக்காமல் பாதுகாப்பதோடு நிற்காமல் புதிதாகக் காடுகளையும் உருவாக்க வேண்டும். இந்த நிலை மலாவியோடு நின்றுவிட்டதென்று நினைக்க வேண்டாம். மலாவி செய்ததையே நாமும் செய்துகொண்டிருக்கிறோம். அதேநிலை நாளை நமக்கும் வரும். 

இப்போது கேள்வி என்னவென்றால், மலாவியிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோமா. முன்னெச்சரிக்கையாகக் காடுகளின் தேவையை உணர்ந்து, அவை செய்யும் தண்ணீர் அறுவடையைப் புரிந்து பாதுகாக்கப் போகிறோமா. இல்லை, இப்போதைய அரசுகளைப் போலவே இனிமேலும் காடுகளை அழித்துப் பெருமுதலாளிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தாரை வார்க்கப் போகிறாமா?

அடுத்த கட்டுரைக்கு