Published:Updated:

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து கலைப்பொருள்கள்... கழிவு மேலாண்மையில் கலக்கும் அபர்ணா!

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து கலைப்பொருள்கள்... கழிவு மேலாண்மையில் கலக்கும் அபர்ணா!
பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து கலைப்பொருள்கள்... கழிவு மேலாண்மையில் கலக்கும் அபர்ணா!

கழிவு மேலாண்மையில், கலையைப் புகுத்தி நிறைய புதுமைகள் செய்துவருகிறார் இந்தக் கேரள மாணவி

மீபகாலமாக இந்தியாவில் தண்ணீர் மாசும், கழிவுப் பொருள்களும் பெரிய பிரச்னையாகவே இருந்து வருகின்றன. இத்தகைய பிரச்னையால், ஏரிகளும் ஆறுகளும் முற்றிலுமாக தங்கள் இயற்கைத் தன்மையை இழந்து அழிந்துகொண்டிருக்கின்றன. இதற்குப் பல நகரங்களில் குப்பைகளும், நச்சுகளும் மிதந்து கொண்டிருக்கும் நீர்நிலைகளே சாட்சி. எப்படி இந்த மாசுகளை அப்புறப்படுத்துவது எனத் தெரியாமல் அரசும் திணறிவருகிறது. இதனால் பல தொண்டுநிறுவனங்களும், தன்னார்வக் குழுக்களும் கையிலெடுத்து தமது பகுதிகளில் உள்ள மாசுகளை நீக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் இந்த 23 வயது அபர்ணா.

கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். பி.எட் முதலாமாண்டு படித்து வரும் மாணவி. இவர் கொல்லம் அருகே உள்ள அஷ்டமுடி காயல் ஏரியில் இருக்கும் கண்ணாடி பாட்டில்கள், தெர்மாகோல், பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் எனப் பலவற்றையும் சேகரித்து அதை அழகுபடுத்தி மறுபயன்பாட்டுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அபர்ணாவை தொடர்பு கொண்டு பேசினோம். 

``சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரிக்குச் சென்று வரும்போது, அஷ்டமுடி ஏரியின் கரையோரமாக வீசப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களை பார்த்தேன். வீசப்பட்ட பாட்டில்கள் அனைத்தும் அழகிய உருவம் கொண்டதாக இருந்தது. அதை எடுத்து வந்து வீட்டில் சேகரிக்க ஆரம்பித்தேன். ஏரியில் தினமும் ஐந்து பாட்டில்கள் சேகரித்து வீட்டுக்குக் கொண்டு வந்தேன். இதனால் என்னுடைய தாய் கவலைப்பட ஆரம்பித்தார். சாலையில் கிடக்கும் பாட்டில்களை ஒரு பெண் வீட்டுக்குக் கொண்டுவந்தால் எந்தத் தாய்க்குத்தான் கவலை வராது. ஆனால் சேகரித்த பாட்டில்களை ஓவியம் தீட்டி அழகுபடுத்திக் கொண்டிருந்தேன். ஓவியம் தீட்டிய பின்னர் அலங்காரப் பொருளாகக் காட்சியளித்தது. அதனால் ஆன்லைனில் பதிவேற்றினேன். அந்த பாட்டில்களில் இருந்த ஓவியங்கள் சிறியதாகவும், எளிமையானதாகவும் இருந்தது. ஆன்லைனில் பொருள்களை கண்ட பலரும் வாங்கத் தயாராக இருந்தனர். அதன் பின்னர்தான் என் குடும்பமே இதற்கு இன்றுவரை உறுதுணையாக இருந்து வருகிறது.

முதல் முறையாகப் பொருள்களை விற்பனை செய்யும்போது லாபம் கிடைக்கவில்லை. அப்போது பொருள்களை குறைவாகவே விற்பனை செய்யமுடிந்தது. நாளுக்கு நாள் அதிகமான பாட்டில்களை சேகரித்த பின்னர், அனைத்தையும் விற்பனை செய்ய தீர்மானித்து கடந்த ஜனவரி மாதம் `குப்பி' (quppi) எனும் முகநூல் பக்கம் ஆரம்பித்தேன். அழகிய புகைப்படங்களை அதில் பதிவேற்றினேன். அழகுப் பொருள்களாக மாற்ற முறையான பயிற்சிகள் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் படைப்புகள் மிக அழகாகக் காட்சியளித்தன. அதை வாங்கிக் கொள்ள பலர் ஆர்வம் காட்டினர். துபாய் வரைக்கும் எனது பொருள்கள் ஆன்லைனில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கேரளாவில் எல்லா மாவட்டங்களுக்கும், தமிழ்நாட்டில் சென்னை, புதுடெல்லி எனப் பல இடங்களிலும் சென்று எங்களது பொருள்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்." என்று சொல்லும் இவரின் பயணம் பாட்டில் சேகரிப்பதில் தொடங்கி இன்று ஏரியைச் சுத்தம் செய்வதுவரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. 

குப்பி என்றால் மலையாளத்தில் பாட்டில் என்று பொருள். அதிகமாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. ஆர்டர்கள் கொடுத்த மகிழ்ச்சியைவிட, பொருள்களை அப்புறப்படுத்தும்போது பகுதி சுத்தமாவது இவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதுதவிர, இவருக்கு மக்களும் தாங்கள் சேகரித்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், நைலான் துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவற்றை அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். கழிவுகளை அகற்றும்போதும், பாட்டில்களைச் சேகரிக்கும்போதும் எளிமையாக இருந்திருக்கிறது. ஆனால் பாட்டிலின் உட்புறம் சுத்தம் செய்யும்போது, கஷ்டமாக இருந்திருக்கிறது. 

இவர் முயற்சியில் இன்று பலர் இவர்களுடன் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாட்டில்களை அழகுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு அபர்ணாவுக்கு உதவி செய்துவருகின்றனர். இதன்மூலம் கிடைத்த ஊக்கத்தால், அபர்ணா கொல்லத்தில் உள்ள பூங்காவில் கடந்த உலக தண்ணீர் தினத்தன்று ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பொருள்களை எப்படிச் சுத்தப்படுத்துவது, அலங்கரித்து மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது என்பது குறித்து விளக்கமாக விவரித்துவிட்டு, தான் செய்த கலைப்பொருள்களையும் காட்சிக்கு வைத்தார்.

அந்தக் கூட்டத்தில் அபர்ணா பேசும்போது, ``நாம் கலைப் பொருள்களை கடைகளில் வாங்க அதிகமாகப் பணம் செலவிடுவோம். அதற்குப் பதிலாக கழிவுப்பொருள்களை பயனுள்ள கலைப் பொருள்களாக நாம் மாற்றலாம். சாலைகளிலிருந்து கழிவுகளை சேகரிப்பதைப் பார்த்து பலர் என்னைக் கேலி செய்துள்ளனர். இந்த மனப்பான்மை மாறவேண்டும்" என்று பேசினார். இதற்குப் பின்னர், இவரது குழுவில் பலர் இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்துள்ளனர். அன்று மாலையே அஷ்டமுடி ஏரியைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறது, அபர்ணா அண்ட் டீம். 150-க்கும் மேற்பட்ட பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் எனப் பலவற்றையும் எடுத்துத் தூர்வாரி இருக்கிறார்கள். இதன்மூலம் கிடைத்த பாட்டில்களையும், அழகுபடுத்தி, கொல்லம் பேருந்து நிலையத்தில் தற்காலிக கடை அமைத்து அபர்ணா குழுவினர், பொருள்களை விற்பனை செய்தனர். அங்கும் மக்களிடம் அதற்கு அதிகமான வரவேற்பு இருந்திருக்கிறது.

அதனால் இதை அடுத்தகட்ட நகர்விற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். இதுதவிர சாலையோரம் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும், கழிவுப் பொருள்களையும் சேகரிக்கும் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கைவினைப் பொருள்களை தயாரிக்க கற்றுக் கொடுத்து வருகிறார். முதலில் 15 நண்பர்களுடன் ஆரம்பித்த குழு, இன்று நூறுபேருக்கு மேல் அதிகரித்திருக்கிறது. தான் சேகரித்த கழிவுப் பொருள்களை அலங்காரப் பொருள்களாக மாற்றுவது மட்டுமன்றி, மறுசுழற்சி செய்து புதிய பொருள்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார், அபர்ணா. 

அடுத்த கட்டுரைக்கு