Published:Updated:

'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை!' வியப்பூட்டும் கறையான்களின் வாழ்வியல்

நம் அனைவருக்கும் தெரிந்த கறையானின் மறுபக்கம் பற்றி மாணிக்கவாசகம் சொன்ன தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. அதை மாணிக்கவாசகத்தின் வார்த்தைகளிலேயே வாசியுங்கள்.

'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை!' வியப்பூட்டும் கறையான்களின் வாழ்வியல்
'இப்படிப்பட்ட இன்ஜீனியர்கள் மனிதர்களில்கூட இல்லை!' வியப்பூட்டும் கறையான்களின் வாழ்வியல்

னிதர்களால் மட்டுமே இயங்குவதில்லை இப்பூவுலகு. மண்ணுக்கு மேலும், மண்ணுக்குள்ளும் உலகின் இயக்கத்துக்காகக் கோடிக்கணக்கான உயிர்கள் உழைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சமூகத்தின் துப்புரவாளனான கறையான்கள். மரத்தில் இருந்து உதிரும் இலைகள் முதல் மண்ணில் விழும் பெரிய தாவரங்கள் வரை மக்க வைக்கும் அரும்பணியை ஆற்றுகின்றன கறையான்கள். ஆம், மண்ணில் விழும் இலையானாலும் சரி, மரமானானாலும் சரி இவை மக்கவைத்து விடுவதால்தான் வனங்கள் வளமாக இருக்கின்றன. மழை, புயல் பாதிப்புகளால் உடைந்து விழும் மரங்களை மக்கவைத்துக் கொடுப்பவை கறையான்கள்தான். 

நாகரிகத்திலும் குழுவாக வாழ்வதிலும் மனிதர்கள்தான் முன்னோடிகள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மிகநேர்த்தியான வாழ்க்கைமுறையை வாழ்ந்துகொண்டிருப்பவை கறையான்கள். கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் இருக்கும் தொல்லுயிர். தேனீக்களைப் போலவே, கூட்டம் கூட்டமாகக் காலனி அமைத்து கறையான்கள் வாழும். அதனால்தான் இதை ‘சமுதாய பூச்சி’ என்கிறார்கள். நவீன கட்டடக்கலை வளர்ச்சியின் இன்றைய உச்சத்தைக் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே தொட்டுவிட்டவை கறையான்கள். இதற்கு உதாரணம் கறையான் புற்றுகள். எந்த நவீன உபகரணங்களும் இல்லாமல், காற்று, மழை, பனி, வெயில் எனப் பருவங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ளும் அறிவு அலாதியானது. 

ராணி, மன்னர், படைவீரர்கள், பணியாளர்கள், ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள், உணவு சேமிப்பு அறை, குஞ்சுகள் வளரும் அறை எனக் கறையான் புற்றுக்குள் சத்தமில்லாமல் ஒரு சாம்ராஜ்யமே நடந்துகொண்டு இருக்கிறது. கறையான்கள் பற்றிய தேடலில் கிடைத்த தகவல்கள் ஆச்சர்ய பள்ளத்தாக்கில் மூழ்க வைத்துவிட்டன. கறையான்தானே என எகத்தாளமாய் பார்க்கும் சிறிய உயிர்கள், எத்தனை ஒழுங்கோடு, நெறியோடு வாழ்கின்றன என்பதை அறிந்துகொண்டால் நீங்களும் ஆச்சர்யப்படுவீர்கள். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் மாணிக்கவாசகம், பூச்சியியல் ஆராய்ச்சியில் உலகளவில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பூச்சிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றை அமைத்திருக்கிறார். பூச்சியியல்துறை மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு போதிமரம். இந்தியாவில் எங்கும் இல்லாத சில ரக பூச்சிகளையும் இங்கு பார்க்கலாம். அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்த சமயத்தில், பேராசிரியர் மாணிக்கவாசம் பூச்சிகள் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் என் கவனத்தை ஈர்த்தது கறையான். நம் அனைவருக்கும் தெரிந்த கறையானின் மறுபக்கம் பற்றி மாணிக்கவாசகம் சொன்ன தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. அதை மாணிக்கவாசகத்தின் வார்த்தைகளிலேயே வாசியுங்கள்.

‘‘சுற்றுச்சூழலுக்கும் கறையான்களுக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. இந்தப் பூமியில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளிலிருந்து யானை வரை அனைத்து உயிர்களும் தேவைக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. சூழலியல் சமன்பாட்டில் ஒவ்வோர் உயிருக்கும் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களைத் தவிர, மற்ற அனைத்து உயிர்களும் தங்கள் சூழலியல் கடமையைத் தவறாமல் செய்து வருகின்றன. கறையான்களை மனிதர்கள் எதிரிகளாகவே பார்த்து பழகிவிட்டோம். வீட்டில் உள்ள பொருள்களை அரித்துவிடுவதால் கறையான்கள் மீது கோபம் கொள்கிறோம். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கறையான்களின் உணவுகளை (மரங்கள்) கொண்டு நாம் வீடுகள் அமைத்துக்கொண்டோம். அதனால் அவை தங்கள் உணவைத் தேடி வரத்தானே செய்யும். இதில் கறையான் மீது கோபம்கொள்வது எந்த வகை அறம்? உண்மையில் கறையான்கள் அரிப்பதனால் 10 சதவிகித பொருளாதார சேதாரம் ஏற்படுவது உண்மைதான். ஆனால், மீதமுள்ள 90 சதவிகிதம் தேவையில்லாத பொருள்களை மக்கவைக்கும் பணியைக் கறையான்கள் செய்கின்றன. இதற்கான மனித ஆற்றல், பொருளாதார செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டால் 10 சதவிகித பொருளாதார இழப்பு ஒரு பொருட்டே இல்லை. அனைத்தையும் அரித்து அழித்துவிடுகின்றன என்பதற்காக ஒட்டுமொத்த கறையான்களையும் ஒருநாள் அழித்துவிட்டால், அடுத்தநாள் என்ன நடக்கும் தெரியுமா? இறந்து விழும் தாவரக்கழிவுகள் மக்காமல் இருக்கும்... கானகம் முழுவதும் காய்ந்த மரங்கள் குவிந்துகிடக்கும். அந்த மரங்கள் மண்ணிliருந்து எடுத்த சத்துகள் மீண்டும் மண்ணுக்குள் போய்ச் சேராது. ஆக, வனம், வளமாக இருக்க வேண்டுமென்றால் கறையான்களும் வாழ வேண்டும். வனம் இருந்தால்தான் இனம் இருக்கும் என்ற அடிப்படையில், நாம் வாழ்வதற்கான உதவியை மறைமுகமாக அவை செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் புரிதலோடு கறையான்கள் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்.

கறையான் தனியாக வசிக்காது. மனிதர்களைப்போல் கூட்டம் கூட்டமாகத்தான் வசிக்கும். கட்டடக்கலையில் பல வித்தைகளைச் செய்யும், வல்லுநர்களுக்கு இன்றைக்கும் வியப்பை அளிப்பவை கறையான் புற்றுகள். உண்மையில் கட்டடக்கலையின் அடிப்படையே கறையான் புற்றுகள்தான் எனச் சொல்லலாம். அவை ஒன்றுபோல இருக்காது. அந்தந்தப் பகுதியின் மழையளவு, ஈரப்பதம், வெப்பநிலை, காற்றின் அளவு போன்ற பௌதீக காரணிகளின் அடிப்படையில் பிற உயிர்களால் பாதிப்பு ஏற்படாதவாறு தங்கள் குடியிருப்புகளை அமைக்கின்றன கறையான்கள். அதிக ஈரப்பதம் இல்லாத, அதிக உலர்தன்மை இல்லாத, வடிகால் வசதிகொண்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து புற்றுகளை அமைக்கும். எந்த புறக்காரணிகளாலும் குடியிருப்பு சேதமாகாத வகையில் புற்றுகள் இருக்கும். நீர்நிலைகளில் குடியிருப்புகளை அமைக்கும் மனிதர்கள், கறையான்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்டிலும் கறையான் புற்றுகள் வெவ்வேறு வடிவில் இருக்கும். 

ஒரு புற்றில், ராணி கறையான்தான் தலைமைப் பொறுப்பில் இருக்கும். இனப்பெருக்கத்துக்காக ஆண் கறையான் (மன்னர்), பாதுகாப்புக்காகப் படைவீரர்கள், வேலைகளுக்காகப் பணியாளர்கள் என நான்கு பிரிவு ஒவ்வொரு புற்றிலும் இருக்கும். மனிதர்கள் அனைவராலும் (பெண்களில்) இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆனால், கறையான்களில் ராணியைத் தவிர, மற்ற கறையான்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்தத் தன்மை ஒருசில பூச்சியினங்களுக்கு மட்டுமே இருக்கும். அதனால் இதை ‘யூசோசியல் இன்செக்ட்’ (Eusocial Insectes) என்கிறார்கள். ராணி கறையானின் பணி, முட்டையிட்டுக் காலனியை ஒருங்கிணைப்பது மட்டும்தான். காலனியின் தலைவியான ராணியின் அறை விசாலமாக இருக்கும். ராணி இருக்கும் இடத்தைவிட்டு வேறு எங்கும் போகாது. 10 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அதற்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பணிக்கறையான்கள் செய்துகொடுக்கும். ஆண் கறையான், இனப்பெருக்கத்துக்கான வேலை தவிர, வேறு எந்த வேலையையும் செய்யாது. பிற உயிர்களிடமிருந்து காலனியைப் பாதுகாக்கும் பணியில் வாகை கறையான் என்ற படை கறையான்கள் ஈடுபடும்.

வாகைகறையான்களில் ஆண், பெண் உண்டு என்றாலும் அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இவற்றின் ஆயுட்காலம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள். இந்தப் படைவீரர்களில் இரண்டு வகை உண்டு. பருத்த தலையும் தலையில் அரிவாள் போன்ற அமைப்புடன் இருப்பவை முன்வரிசை படைவீரர்கள். (Mandibulate Soldiers) எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, காலனியைப் பாதுகாப்பவர்கள். தங்கள் முகத்தின் முனையில் கூர்மையாக உள்ள ஊசியைப் போன்ற பகுதியைப் புற்றில் உள்ள சின்னச் சின்ன துளைகள் சொருகி நின்று காவல் காக்கும். அரண்மனையில் கையில் வாளுடன் காவல்காக்கும் போர்வீரர்கள் போன்றவர்கள். இவர்களையும் தாண்டி, தாக்க வரும் எதிரிகளை துவம்சம் செய்பவர்கள் நாஸ்டி சோல்ஜர்ஸ் (Nasute Soldiers) என்ற அழைக்கப்படும் இரண்டாம் வரிசை படைவீரர்கள். இவர்கள், துர்வாசம் வீசும் சுரப்பிகளை எதிரிகள் மீது துப்பி விரட்டியடிப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், படைகறையான்களுக்குப் பார்வைத்திறன் இல்லை. படைவீரர்கள், பணியாளர்கள் மீது பிரத்யேகமான ஒருவித வாசனை இருக்கும். எதிரிகளின் தாக்குதலில் படை கறையான்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், காலனியில் அந்த வாசனைக் குறையும். கறையான்களைப் பொறுத்தவரை அவை உண்ணும் உணவுக்கு ஏற்ப, படை கறையான்களாகவோ, பணியாளர் கறையான்களாகவோ மாறும். எனவே, எந்தப் பிரிவில் எண்ணிக்கை குறைகிறதோ அந்தப் பிரிவு கறையான்கள் உருவாகத் தேவையான உணவுகள், குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படும். இதைப் பணியாளர்கள் செய்வார்கள். இயற்கையின் பேராற்றலை நினைத்தால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

புதிய புற்றுகளை உருவாக்குதல், ஏற்கெனவே இருக்கும் புற்றின் பராமரிப்புப் பணிகள், ராணி, குஞ்சுகள் உள்ளிட்ட மற்ற கறையான்களுக்கு உணவு கொடுப்பது போன்ற பணிகளைப் பணிக்கறையான்கள் செய்யும். இதிலும் ஆண், பெண் உண்டு. இந்தக் கறையான்களுக்குக் கொடுக்கு இருக்காது. ஒரு புற்றில் இந்தக் கறையான்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இவற்றுக்கும் கண்பார்வையில்லை. இதன் ஆயுள்காலம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள். ராணியிடும் முட்டைகளை எடுத்துச் சென்று குஞ்சு பொரிக்கும் அறையில் வைத்து, பொரிக்கச் செய்வது பணிக்கறையான்கள்தான். காலனியில் ராணி அறையைத் தவிர, குஞ்சுகள் பராமரிப்பு அறை, உணவு சேமிப்பு அறை, பணியாளர்கள் அறை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அறைகள் இருக்கும். இத்தனை ஒழுங்கு மனிதர்கள் வாழ்க்கையில்கூட இருக்காது. 

மன்னரும் ராணியும் இல்லறத்தில் உண்மையானவர்களாக இருப்பார்கள். மன்னர் இறந்தால் மட்டுமே, இனப்பெருக்கத்துக்காக மட்டும் புதிய மன்னருடன் ராணி இணைசேரும். புற்றில் பல ஆண்கறையான்கள் இருக்கும். இவற்றுக்கு எந்த வேலையும் கிடையாது. உண்பது, உறங்குவது, இணைசேர்வது மட்டுமே இவர்களது பணி. உலகில் அதிக சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் இந்த ஆண் கறையான்களாகத்தான் இருக்கும். அதே போல, ஒவ்வொரு காலனியிலும் பல ராணி கறையான்கள் இருக்கும். ராணி கறையான் இறந்துவிட்டால், மற்ற ராணி கறையான்களில் ஒன்று ராணி பொறுப்பை ஏற்கும். சூழல் மாற்றம் ஏற்படும்போது வாழிடத்தை மாற்றுவது, காலனியில் உள்ள கறையான்களை வழிநடத்துவது ராணி கறையான்தான். முட்டை வைக்கும் பணி மட்டும்தான் ராணி கறையானுடையது. முட்டைகளை எடுத்துச் சென்று பொறிக்க வைக்கும் பணியைப் பணிக்கறையான்கள் பார்த்துக்கொள்ளும். 

பங்குனி, சித்திரை மாதங்களில் ராணி கறையான் வைக்கும் முட்டைகளைப் பணிக்கறையான்கள் எடுத்துச்சென்று ஆழத்தில் வைத்துப் பாதுகாக்கும். இந்த முட்டைகள் பொரித்து புழுக்கள் வெளியே வந்தவுடன், அவற்றுக்கு பிரத்யேகமான உணவுகொடுத்து பராமரிப்பார்கள். அடுத்த ஐந்து மாதங்களில் புழுக்களுக்கு இறக்கை முளைத்து, பழுப்பு நிறத்தில் ஈசலாக மாறிவிடும். காலனியில் அதிக எண்ணிக்கையில் ஈசல்கள் உருவானவுடன், அவற்றைக் காலனியிலிருந்து பிரித்து வெளியே அனுப்புவார்கள். தங்கள் இனத்தைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்ட ஈசல்களுக்கு வழியனுப்பு விழா நடத்த ஏற்ற நாளை எதிர்பார்த்து மொத்த காலனியும் காத்திருக்கும். அக்டோபர், நவம்பர் போன்ற மழை மாதங்களில்தான் வழியனுப்பு விழா நடக்கும். நன்றாக மழை பெய்து, நிலமும் புற்றும் குளிர்ந்துள்ள நிலையில், புற்றின் வெளிப்புறம் பிறைவடிவில் வாசல் அமைத்து, அதில் படை கறையான்கள் காத்திருக்கும். வெளிப்பகுதியில் நல்ல ஈரப்பதம், சாதகமான காற்று, நல்ல நிலவொளி ஆகியவை ஒன்றாக அமையும் நேரத்தில், இவை ராணிக்குத் தகவல் அனுப்பும். ராணி அனுமதி கிடைத்தவுடன் வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப்போல, சாரை சாரையாகப் புற்றிலிருந்து ஈசல்கள் வெளியே பறக்கும். 

இந்த நிலப்பரப்பில் ஒரு நாடும், இன்னொரு நாடும் தாக்கிக்கொண்டால்தான் போர். இரு அணிகள் மோதிக்கொண்டால்தான் சண்டை என நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நொடியிலும் போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு உயிரும் உணவுக்காகவும் தற்காப்புக்காகவும் போரிட்டுக்கொண்டேயிருக்கின்றன. இந்தச் சண்டை இல்லாவிட்டால், உயிர் சமன்பாடு உடைந்துவிடும். கறையான்களுக்கும் அப்படிச் சூழலியல் எதிரிகள் அதிகம் இருக்கிறார்கள். பறவைகள், பாம்புகள், மனிதர்கள் எனப் பல எதிரிகளைச் சமாளிக்க வேண்டிய ஆற்றல் கறையான்களுக்கு இல்லை. புற்றிலிருந்து வெளியேறி பறக்கத் தொடங்கிய சில அடி தூரத்திலே பல ஈசல்கள் கீழே விழுந்துவிடும். இன்னும் பல பறவைகள், பாம்புகளுக்கு இரையாகும். அதிக தூரம் பறந்தவுடன் ஈசல்களுக்கு இறக்கைகள் உதிர்ந்துவிடும். அப்போது மண்ணில் விழும், ஈசல்கள் ஊர்ந்துகொண்டே செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவை, உயிர்வாழ்வதற்காக ஊர்வதில்லை. தனது இணைதேடி, மரண வேதனையுடன் ஊர்ந்துகொண்டிருக்கும். அந்தக் கணம்தான் கறையான்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம். தங்கள் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது இணையைத் தேடிக் கண்டுபிடிக்கும். ஆயிரம் ஈசல்கள் மண்ணில் விழுந்தால், அதில் ஒன்றிரண்டு ஈசல்களுக்கு மட்டுமே இணை கிடைக்கும். தனது இணை கிடைத்தவுடன், ஊர்ந்துகொண்டே மண்ணுக்குள் சிறு குழிபறித்து வசிக்கும். அதன் பிறகு, மண்ணுக்குள் நடக்கும் ஒரு இனத்தின் பரவலாக்கம். ஆண் கறையானுடன் உறவு கொண்டவுடன் பெண் கறையானின் அடிவயிறு வளரத்தொடங்கிவிடும். ஆண், பெண் இணை சேர்ந்து, முட்டைகளை உற்பத்தி செய்து, குஞ்சுகளை உருவாக்கும். அந்தக் குஞ்சுகள் வளர்ந்து இரைதேடித் தரும்வரை பெற்றோர்களுக்கு யார் உணவு தருவது? இயற்கையின் பெருங்கருணையே அதற்கும் வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. 

ஈசல்களின் உடல்முழுவதும் புரதமும் கொழுப்பும் நிறைந்திருக்கும். இவைதான் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள ஈசல்களுக்கான உணவு. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்த பிறகு, தங்களுக்கென பிரத்யேகமான புற்றுகளை உருவாக்கும். முட்டைகளை இடும் ஈசலின் உடல் வளர்ந்துகொண்டே போகும். அதுதான் ராணி கறையானாக மாறும். இந்த ராணி, ஒவ்வொரு தேவைக்கும் தேவையான கறையான்களை உருவாக்கிக்கொள்ளும். இப்படித்தான் கறையான்களின் காலனி உருவாகிறது. ராணி கறையான் ஒருநாளைக்கு 2,000 முட்டைகள் வரை வைக்கும் திறனுடையது.

கறையான் புற்று, நிலத்தின் மேல் பகுதியில் இருக்கும் உயரத்தைவிட அதிக ஆழம் பூமிக்குள் இருக்கும். பணிக்கறையான்கள் தங்கள் வாயில் சுரக்கும் ஒருவிதமான உமிழ்நீரை, மண்ணுடன் கலந்து புற்றுகளைக் கட்டும். கட்டடக்கலைக்கு புற்றுகள் எப்படி முன்னோடியாக இருக்கிறதோ... அதேபோல விவசாயத்துக்கும் முன்னோடி கறையான்கள்தான். மனிதன் விவசாயம் செய்யத் தொடங்குவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தோட்டம் அமைத்து பூஞ்சைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன கறையான்கள். புற்று அமைக்க இடம் தேர்வானதும், நிலமட்டத்தில் படுக்கை அமைத்து, அதில் பூஞ்சைகளைப் பயிர் செய்யும் பணியில் பணிக்கறையான்கள் ஈடுபடும். இந்தப் பூஞ்சைகள்தான் கறையான் புற்றின் வாழ்வாதாரம். கறையான்களின் உணவுப்பொருள்களை இந்தப் பூஞ்சைகள்தான் மட்க வைத்து, உண்ணும் வகையில் மாற்றித்தரும். சில புற்றுகள் மேற்பகுதி மூடியிருக்கும். சில திறந்தநிலையில் இருக்கும். மூடியிருக்கும் புற்று முழுவதும் ஏராளமான நுண்துளைகள் இருக்கும். அதன் வழியாகக் காற்றோட்டம் இருக்கும். கறையான்கள் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் வெப்பம் காரணமாக ஒருவித அழுத்தம் ஏற்பட்டு, வெளிக்காற்று புற்றுக்குள் போகும். அப்போது, ஏற்படும் அழுத்தம் காரணமாக புற்றுக்குள் இருக்கும் காற்று வெளியேறும். வெளிக்காற்று புற்றுக்குள் செல்வதால் புற்று எப்போது குளுமையாக இருக்கும். புற்று நிலத்தின் கீழ்ப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குக்கூடச் செல்லும். இத்தனை இயந்திரங்கள், ஆயிரக்கணக்கான ஆட்கள் உதவியுடன் நாம் சில கட்டடங்களை உருவாக்கி, அவற்றை உலக அதிசயம் எனக் கொண்டாடுகிறோம். உண்மையில் சின்ன உயிரியான கறையான்கள் கட்டும் ஒவ்வொரு புற்றும் இயற்கையின் அதிசயம்தான். எனவே, இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரும் உன்னதமானதுதான் என்ற எண்ணத்தை மனதில் வைத்து, கறையான்கள் மீதும் கனிவு காட்டுவோம். 

கடினமான மரங்களைக் கறையான்கள் எப்படிக் கரைக்கின்றன?

மரம் போன்ற கடினமான பொருள்களைக் கடிக்கும்போது, கறையான்களின் வாயில் ஒருவிதமான திரவம் சுரக்கிறது. இந்தத் திரவம், கடிபடும் இடத்தை மென்மையாக மாற்றிவிடும். அதன் பிறகு, கறையான்கள் அந்த இடத்தை அரிக்கத்தொடங்கும். மரத்துகள்களை அரித்து, புற்றுக்குள் கொண்டு சென்று ஒன்றின்மீது ஒன்றாக சாண்ட்விச் போல அடுக்கி வைக்கும். புற்றில் உள்ள பூஞ்சான்களை அதன்மீது தூவும். மரத்துகள்கள் மீது பூஞ்சை படர்ந்து, மேலும் மென்மையாக்கும். அதன் பிறகே கறையான்கள் அவற்றை உண்கின்றன. மழைக்காலங்களில் இந்தப் பூஞ்சைகள்தான் காளான்களாக நிலத்தில் முளைக்கும். 

கோடிக்கணக்கான ஆண்டுகளாக வெற்றி விவசாயி!

சிலநாடுகளில் கறையான்களை மனிதர்கள் உணவாகவும் உட்கொள்கிறார்கள். உலக உணவுக் கழகம் இதை மனிதர்கள் உண்ணும் உணவாக அங்கீகரித்திருக்கிறது. நம்மிடம் நவீன உபகரணங்கள், இயந்திரங்கள் இருந்தாலும் விவசாயத்தில் இன்னமும் முழுமையடைய முடியவில்லை. வறட்சி, வெள்ளம் எனப் பயிர்களைப் பலிகொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், கறையான்கள் பலகோடி ஆண்டுகளாகத் தங்கள் பூஞ்சை விவசாயத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இரண்டு கறையான் புற்றுகள் ஒன்றாக இணைய நேர்ந்தால், இரண்டு புற்றிலும் இருக்கும் ராணி கறையான்களைப் படைக்கறையான்கள் கொன்றுவிடும். அதன் பிறகு, தங்களுக்கு புதிய ராணியைத் தேர்ந்தெடுப்பார்கள். 

டெர்மிட்டீஸ் (Termites) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கறையான்கள், சம இறகிகள் வகுப்பைச் சேர்ந்தவை. இது, கரப்பான் வரிசையிலுள்ள சமூக விலங்கு என்கிறது அண்மையில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு. கறையான்களில் 236 பேரினங்களும் 1958 சிற்றினங்களும் இருக்கின்றன. கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர்.