Published:Updated:

`ஒருநாள் இந்த உரிமைகளும் பறிபோகும்!' காலநிலை மாற்றத்தின் நிஜ ஆபத்து

`ஒருநாள் இந்த உரிமைகளும் பறிபோகும்!' காலநிலை மாற்றத்தின் நிஜ ஆபத்து
News
`ஒருநாள் இந்த உரிமைகளும் பறிபோகும்!' காலநிலை மாற்றத்தின் நிஜ ஆபத்து

நாம் பூமியை கையில் ஏந்தி நிற்கும் காற்றடைத்த பந்தைப்போல் கவனமாகக் கையாளவேண்டும். இல்லையேல் காலநிலை மாற்றம், உலகவெப்பமயமாதல் போன்ற பேராபத்துகள் அந்தப் பந்தை உடைக்க வெகுநேரம் எடுக்காது.

ரக்கமின்மை, அக்கறையின்மை, சமத்துவமின்மை போன்ற இன்மைகள் சமுதாயத்தில் வளர்ந்துகொண்டே போகின்றன. மனித சமுதாயத்தின் பேரழிவுக்கான வித்துகள் விருட்சமாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சமுதாய நலன்மீது துளியும் கரிசனமற்ற இந்த நடவடிக்கைகளுக்கு என்றென்றும் மன்னிப்பே கிடையாது. இந்த சமுதாயப் பிரச்னைகள் அதிகமாவதற்குக் காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்றவையும் காரணமென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயமாக நம்பமாட்டீர்கள். ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். காலநிலை மாற்றமென்பது சுற்றுச்சூழல் பிரச்னை அதைச் சமுதாயத்தோடு எப்படி ஒப்பிட முடியுமென்று சிலர் வாதிடவும் வரலாம். 

எந்தவொரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அதன் எழுச்சி எப்போது தொடங்கும்? அதில் வாழும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போதுதானே தொடங்கும். அதிலும் சாதாரண உரிமைகளல்ல. தம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படும் சுத்தமான காற்று, சுகாதாரமான வாழிடம், தூய்மையான குடிநீர் ஆகிய மூன்றுமே கேள்விக்குறியாகும்போது அல்லது கிடைக்காமலே போகும்போதுதானே எழுச்சியும் புரட்சியும் சாத்தியப்படும். அந்த நிலை புவியில் அதிகமாகிக் கொண்டிருப்பதற்குத் தமிழகமோ இந்தியாவோ மட்டுமல்ல, உலகம் தழுவி நடக்கும் அளவுக்கு அதிகமான போராட்டங்களே ஆதாரங்கள். 

காலநிலை மாற்றம் கொண்டுவரும் வறட்சி, பஞ்சம் மட்டுமன்றி வழக்கமாகிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரிடர்கள் யாரைப் பாதிக்கின்றன? பணம் படைத்தவர்கள் தம் பொருளாதார அடித்தளத்தால் மீண்டெழுந்து மீண்டும் சூழலியல் சீர்கேடுகளைத் தொடங்கிவிடுகிறார்கள். பொருளாதாரத்தின் விளிம்புநிலையில் தவித்துக்கொண்டிருக்கும் மக்கள் இன்னமும் முந்தைய பேரிடர்களிலிருந்தே மீண்டெழ முடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இப்போது அனுபவிக்கும் பிரச்னைகளில் முதலும் முக்கியமுமான பிரச்னை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளில் விழுந்த பெரிய அடியே. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ், ``பேரண்டத்தில் அனைத்து வளங்களும் ஓர் அளவோடுதான் இருக்கின்றன. நாம் அதை அளவின்றி பயன்படுத்திவிட்டோம். அதற்கான விளைவுகளையும் அனுபவித்துதான் ஆகவேண்டும்" என்று கூறுவது நூறு சதவிகிதம் உண்மைதான். ஆனால், அந்த விளைவுகளை அனுபவிப்பவர்கள் யார்? 

அனுதினமும் தம் அடுத்த நாளின் வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தாம். 

``காலநிலை மாற்றம் மனித உரிமைகளைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம் போன்ற உரிமைகளை ஏழைகளுக்குக் கிடைக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. பூமியின் சூழலியல் சீர்கேடுகளில் எதிலுமே பங்குவகிக்காத இந்த மக்கள், அதற்கான விளைவுகளை மட்டும் அளவுக்கு அதிகமாகச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய அநீதி"- மேரி ராபின்சன், அயர்லாந்து அதிபர், ஐ.நா-வில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்.

இப்போதிருக்கும் அரசியல், பொருளாதார அமைப்புமுறைகள் அனைத்துமே உலக வெப்பமயமாதலைச் சரிக்கட்டுவதற்குத் திராணியற்று நிற்கின்றன என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதில் சில சீரமைப்புகளும் சீர்திருத்தங்களும் செய்யப்படவேண்டும். இங்கு மிகப்பெரியதொரு புரட்சி வெடித்தால் மட்டுமே அதுகூடச் சாத்தியப்படும் நிலையில்தான் சமுதாயங்கள் இருக்கின்றன. நாம் வரலாறு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வரலாற்றின் புதிய சகாப்தமான நவீன யுகம் பிறக்கையிலேயே பிறந்தவர்கள் நாம். நுகர்வுக் கலாசாரத்திற்குப் பலியாகி நிற்கும் முதல் தலைமுறையும் நாம்தான். உலகமயமாக்கல் கொண்டுவந்த நுகர்வுப் பசி நம்மிடம் ஒரு பொருளை வாங்கவும் இரண்டாம் தரச் சரக்குகளாக விற்கவும் அல்லது கழிவுகளாகக் கொட்டவுமே பழக்கிவிட்டது. சுயச்சார்புப் பொருளாதாரத்தை நாம் மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் உற்பத்தி செய்யும் கழிவுகளைப் பற்றிக் கவலைப்படாமலே வாழத் தொடங்கிவிட்டோம். அதன்விளைவாக நம் கழிவுகளிலேயே நாம் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்.

நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளைச் சிறிதும் சிந்திக்க முடியாத (அரசின் மொழியில் சொல்லவேண்டுமென்றால் சட்டவிரோதமாகக் குடியிருப்பவர்கள்) நிலையில் வாழும் மக்களின் மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, ``நகர்ப்புறக் குடிசைகளில் வசிக்கும் மக்களைச் சட்டவிரோதமானவர்கள் என்று யாரும் அழைக்கமுடியாது. உண்மையில், அவர்கள் அந்த நிலையிலிருப்பதற்குக் காரணம் அந்தந்த மாநில அரசுகளே. தம் மக்களுக்குத் தேவையான சுகாதாரமான வாழிடத்தை உண்டாக்கிக் கொடுக்கத் தவறிய மாநில அரசுகளே இங்கு குற்றவாளிகள்" என்ற கருத்தைக் கூறியது. ஆம், தம் மக்கள் வாழ்வதற்குத் தகுந்த சுற்றுச்சூழலை உருவாக்கித் தரத் தவறிய மாநில அரசுகளே இங்கு சட்டவிரோதமானவர்கள், அவர்களால் இந்த நிலையில் வாழும் மக்களல்ல.

காலநிலை மாற்றமும், உலக வெப்பமயமாதலும் நகரமயமாக்கலும் கிராமங்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. அது மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுக்க முக்கியக் காரணமாக மாறிவருகின்றது. இப்போதிருப்பதைவிடப் பல மடங்கு அதிகமான மக்களைச் சுமக்கவேண்டிய நிலை நகரங்களுக்கு ஏற்படும். ஆனால், நகரங்களின் இப்போதைய நிலையே மிகவும் மோசமாக உள்ளது. இவற்றுக்கு அடிப்படைக் காரணமான காலநிலை மாற்றத்தையும் அதன் விளைவுகளாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் வெள்ளம், வறட்சி, பஞ்சம் மற்றும் அவற்றின் விளைவுகளால் கிராம மக்கள் சந்திக்கும் கடன் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களையும் நகர மக்கள் சந்திக்கும் வாழ்விடக் குறைபாடு வேலையின்மை மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும் சரிகட்டுவதற்குத் தற்கால அரசுகள் முனைந்தே தீரவேண்டும். அதற்கு, இப்போது வெப்பமயமாதலைத் தீவிரமாக்கும் கரிமம் போன்ற பசுமை இல்ல வாயுக்களையும், காலநிலை மாற்றத்தையும் மத்தியில் வைத்துப் பேசுபொருளாக்கும் அரசியல் அமைப்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன. இப்போதிருக்கும் சூழ்நிலையில் மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் காலநிலை மாற்றமும் அதிலொரு பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் சுகாதாரத்தைச் சிந்திக்கவே முடியாத நிலை உருவாகிக்கொண்டிருக்கும் நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளும், கிராமப்புறத்தில் இக்கட்டான வாழ்வை வாழும் விவசாயத் தொழிலாளர்களும் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திப்பார்கள். அத்தகைய அரசுகள் தோன்றவில்லை என்பதைவிட அதற்கான முயற்சிகளே மிகக் குறைவு. 

ஒரு சமுதாயம் முழுமையடைய வேண்டுமெனில் அதில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பான சுற்றுச்சூழல் வழங்கப்பட வேண்டும். ஆனால் நம் அமைப்புமுறை எப்படியானதாக இருக்கிறது? வேலைவாய்ப்பு என்ற பெயரில் சில நூறு பேருக்கு வேலை கொடுப்பதற்காகப் பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலேயே இருக்கிறது. உண்மையில் அது வேலைவாய்ப்புக்காகச் செய்யப்படுவதில்லை. ஒருசில பெருநிறுவனங்கள் வேலைவாய்ப்பு என்ற தூண்டிலை வீசிப் பிடிக்கும் லாப மீன்களுக்காகவே செய்யப்படுகிறது. இங்கு அவர்கள் வீசும் தூண்டிலே மக்களை ஆட்சி செய்துகொண்டிருக்கும் அரசுகள்தாம். அதிலிருக்கும் இரைதான் வேலைவாய்ப்பு.

பாரிஸ் ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும் இதுவரை மதித்ததாகத் தெரியவில்லை. தம் நாடுகளின் தொழில் வளர்ச்சியை, பெருமுதலாளிகளின் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டதில் பாதியளவு முனைப்பைக்கூடப் பூமியின் வெப்பநிலையைக் குறைக்கவேண்டுமென்பதில் காட்டவில்லை. இது இப்படியே போனால் இந்த நூற்றாண்டின் முடிவில் பூமியின் வெப்பம் 3 டிகிரியைத் தொட்டாலும் ஆச்சர்யமில்லை. உலக நாடுகள் எதுவும் முயற்சியே செய்யவில்லையென்று அப்பட்டமாகக் குற்றம்சாட்ட முடியாது. சில நாடுகள் அதற்கான முயற்சிகளை எடுத்தாலும் அதில் எந்தவிதப் பலனுமில்லை. ஏனென்றால் அவர்கள் செய்வதெல்லாம், மலையளவு சேதங்களும் மடுவளவு பரிகாரங்களுமே. இவற்றைச் சரிசெய்ய வேண்டுமென்றால் உலகளவிலான அரசியல் சித்தாந்தங்களிலும் ஆட்சிமுறைகளிலும் மாற்றம் வரவேண்டும். இல்லையேல் முன்னரே கூறியதுபோல் சில சீர்திருத்தங்களாவது செய்யப்பட வேண்டும். சமுதாயத்தில் சூழலியல் சமத்துவமிக்கப் பொருளாதார மற்றும் அரசியல் முறையே இப்போது தேவைப்படுவது. தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகளால் அது நிச்சயமாகச் சாத்தியப்படப் போவதில்லை. அது செய்வதெல்லாம், ஏதோவொரு வளர்ந்த நாட்டில் அமர்ந்திருக்கும் பெருமுதலாளியை ஏதோவொரு வளரும் நாட்டிலிருக்கும் வளங்களைச் சுரண்ட ஊக்குவிப்பது மட்டுமே.

இப்போது நம்முன் இருக்கும் அபாயங்களை ஒரே வீச்சில் ஒரே திட்டத்தில் ஒரே முயற்சியில் நிச்சயமாகச் சரிசெய்துவிட முடியாது. அதற்குப் பல்நோக்குத் திட்டங்களும் பலகட்ட முயற்சிகளும் நீண்டகாலச் செயற்பாடுகளும் தேவை. அத்தகைய அரசியல் சீரமைப்புகளைச் செய்தாகவேண்டிய அவசியத்தைக் காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. நம்முன் நிற்கும் கேள்வி, அதையுணர்ந்து திருந்தப் போகிறோமா இல்லையா என்பதுதான்.