Published:Updated:

`இனி குப்பை கொட்டவும் அசுத்தப்படுத்தவும் முடியாது!' - ஊட்டி ஏரியைப் பாதுகாக்கும் இரும்புவேலி

ரா.சதீஸ்குமார்
`இனி குப்பை கொட்டவும் அசுத்தப்படுத்தவும் முடியாது!' - ஊட்டி ஏரியைப் பாதுகாக்கும் இரும்புவேலி
`இனி குப்பை கொட்டவும் அசுத்தப்படுத்தவும் முடியாது!' - ஊட்டி ஏரியைப் பாதுகாக்கும் இரும்புவேலி

சர்வதேச சுற்றுலா நகரான ஊட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிளாஸ்டிக் தடை அமலில் இருந்தாலும் இன்றளவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. தொட்டபெட்டா வனப்பகுதியில் உற்பத்தியாகி ஊட்டி நகரின் மையப்பகுதியில் ஓடும் கோடப்பமந்து கால்வாய் கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக மாசடைந்துவருகிறது.

ஊட்டி நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் கோடப்பமந்து கால்வாயில் கலந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தக் கால்வாயின் நீரை ஆதாரமாக உள்ள ஊட்டி ஏரியில் படகு இல்லம் செயல்பட்டுவருகிறது. சுற்றுலா வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியைப் புனரமைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகளை ஏரிக்கரையில் வீசிச் செல்கின்றனர். மேலும், சில தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்பு வாசிகள் எனப் பலதரப்பு மக்களும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை ஊட்டி ஏரிப் பகுதியில் கொட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஏரியைப் பாதுகாக்கும் வகையில் ஏரி பாதுகாப்புக் குழு ஒன்று அமைத்து சுற்றுலா வளர்ச்சித்துறையும் இணைந்து பிரமாண்ட தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். முதல் கட்டமாக சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் 1 கி.மீட்டருக்கு ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் இரும்புத் தடுப்புகள் அமைத்துவருகின்றனர்.

சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் காந்தள் பகுதி மக்கள் இந்தத் தடுப்பு வேலியால் பாதிப்படைந்துள்ளனர். கஸ்தூரிபாய் காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் கிடையாது. சில வீடுகளில் கழிப்பறை கட்டி மூன்று ஆண்டுகளாக இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் உள்ளது. அதுவும் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது. பெரும்பாலானவர்கள் ஊட்டி ஏரியின் அருகில் உள்ள வனப்பகுதியைத் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்தனர். தற்போது இந்தப் பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ள நிலையில் இந்தப் பகுதி மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.