Published:Updated:

`விநாயகனுக்கு என்ன நடந்துருக்குமோனு பதறிட்டோம்!'- முதுமலையில் யானையைத் தேடிய வனத்துறையினர்

ரா.சதீஸ்குமார்
`விநாயகனுக்கு என்ன நடந்துருக்குமோனு பதறிட்டோம்!'- முதுமலையில் யானையைத் தேடிய வனத்துறையினர்
`விநாயகனுக்கு என்ன நடந்துருக்குமோனு பதறிட்டோம்!'- முதுமலையில் யானையைத் தேடிய வனத்துறையினர்

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் விளை நிலங்களைச் சேதப்படுத்தியதாகக் கூறி விநாயகன் என அப்பகுதி மக்களால் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த காட்டு யானையை கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டனர். மற்ற யானைகளைப்போல வனப்பகுதியில் உணவு தேடும் குணம் இதற்கு இல்லை எனவும் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளையொட்டிய பகுதிகளில் உலவும். இதனால் இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டது.

அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த யானையின் கழுத்தில் போடப்பட்டிருந்த ரேடியோ காலரிலிருந்து வந்த சிக்னல், ஒரே இடத்தைக் காட்டியுள்ளது. இரண்டு நாள்களாக ஒரே இடத்தில் காட்டியது, யானைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற பதறிய வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். ஆனால், அந்த இடத்தில் யானை இல்லை. ரேடியோ காலர் மட்டும் இருந்தது. தொடர்ந்து, காட்டிற்குத் தேடிப் பார்த்த போது, விநாயகன் யானை வனப்பகுதிகளுக்குள் மேய்ந்து கொண்டிருந்து தெரியவந்தது.

இதனால், கீழே கிடந்த ரேடியோ காலரை வனத்துறையினர் மீட்டனர். வனத்துறையினர் தெரிவிக்கையில், ``கடந்த சில மாதங்களாக இந்த யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். மிகவும் அமைதியாகவே உள்ளது. முதுமலை மற்றும் அருகே உள்ள பந்திப்பூர் வனப்பகுதிகளில் உலவும். கடந்த சில நாள்களாக முதுமலை காட்டிற்குள் சுற்றித் திரிந்து வருகிறது. தற்போது மற்ற யானைகளைப் போல் உணவை உட்கொண்டு பழகிவிட்டது. இனி விளை நிலங்கள், மக்கள் வாழும் பகுதிகளுக்கு வர வாய்ப்பு குறைவு. எனவே, இதற்கு இனி ரேடியோ காலர் அவசியம் இருக்காது. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றனர்.