Published:Updated:

திமிங்கிலங்களை உளவாளிகளாகப் பயன்படுத்துகிறதா ரஷ்யா?! புதிய சர்ச்சை

இதற்கு நார்வே நாட்டு விஞ்ஞானிகள் மட்டுமல்ல; உலகின் பல்வேறு விலங்குகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளை ராணுவத்திற்காகப் பயன்படுத்துவது அவற்றின் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது அவர்களின் கருத்து.

நார்வே நாட்டின் ஆர்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு பெல்ட் பொருத்தப்பட்ட பெலூகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்புள்ளது என்றும், நார்வே நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

``அந்தத் திமிங்கிலத்தின் கழுத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்தது. பெல்ட்டில் இருந்த அடையாளம் ஒன்று, அந்தத் திமிங்கிலம் ரஷ்யாவைச் சேர்ந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், என் சக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்தும் கருவி அல்ல என்று கூறுகிறார்" என்கிறார் நார்வே நாட்டு கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன்.

நார்வே நாட்டிற்கு அருகே ரஷ்யாவுக்குச் சொந்தமான கடற்படைத் தளம் ஒன்று இருக்கிறது. அங்கிருந்து இந்த வெள்ளைத் திமிங்கிலம் வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கோயா எனும் சிறிய நார்வே மீன்பிடி கிராமத்தில் கடந்த வாரம் விசித்திரமான கருவியைக் கொண்ட வெள்ளைத் திமிங்கிலம் ஒன்று மீனவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவதாக அந்தக் கிராம மீனவ மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கிராமம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்திலிருந்து 415 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த வெள்ளைத் திமிங்கிலங்கள் பெலூகா வகையைச் சேர்ந்தவை. இவை ஆர்டிக் கடலைத் தாயகமாகக் கொண்டவை.

பெலூகா திமிங்கிலத்தின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவி அகற்றப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்றையும் என்.ஆர்.கே. எனும் நார்வேயின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அந்தத் திமிங்கிலத்தின் தலைப்பகுதியையும், துடுப்புப்பகுதியையும் சுற்றி கேமரா தாங்கி இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மீனவர் கழற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். கோப்ரோ கேமராவுக்கான கேமரா தாங்கி மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், அதில் கேமரா இல்லை. 

``இதுமாதிரியான பரிசோதனைகளை பெலூகா திமிங்கிலம் மூலம் ரஷ்யா சில ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படுத்தியது. அதில் சில திமிங்கிலங்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்போது இருந்த திமிங்கிலங்களில் ஒன்றாக இது இருக்கலாம்" என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1980-களில் சோவியத் ரஷ்யாவில், இராணுவப் பயிற்சித் திட்டத்திற்காகக் கூர்மையான பார்வை மற்றும் நல்ல நினைவாற்றல் கொண்ட டால்பின்களை தேர்ந்தெடுத்து ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதற்காக அவற்றை நீருக்கடியில் பயன்படுத்தியது. பின்னர், இந்தத் திட்டம் 1990-களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான Zvezda தொலைக்காட்சி 2017-ம் ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் ரஷ்ய கடற்படை பெலூகா திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. 

வடக்கு ரஷ்யாவிலுள்ள முர்மான்ஸ்க் கடல் உயிரியல் ஆய்வு மையம் (Murmansk Sea Biology Research Institute) கடற்படையில் பெலூகா திமிங்கிலங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி முடித்துள்ளது. இதன்மூலம் ஆர்டிக் பகுதியிலுள்ள ரஷ்ய கடற்படை தளங்களின் நுழைவு வாயில்களில் இந்தத் திமிங்கிலங்கள் பாதுகாப்பு அரணாக இருக்கும் எனவும் அந்த ஆய்வு முடிவுகள் அவர்களுக்குத் தெரிவித்தது. ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகவும், ஆழ்கடலில் அத்துமீறும் யாரையும் கண்காணிப்பதற்காகவும் எதிரிகளை உளவுபார்க்கவும் இவை அப்போது பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

முன்று வயது முதல் 5 வயதுடைய, டால்பின்கள் மற்றும் நீர் நாய்களைக் கொண்டு 120 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ள திரைகள், வெடிக்கப்பல்கள், சுரங்கங்கள், வெடி பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இதன்பின்னர், 2016-ம் ஆண்டில் 18,000 பவுண்ட் செலவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை பாதுகாப்புக்காக 5 கூர்மையான மூக்குகளுடைய டால்பின்களை வாங்கியது. இந்தப் பயிற்சியின் முடிவை முர்மான்ஸ்க் கடல் உயிரியல் ஆய்வு மையம் வெளியிட்டது. அதில், பெலூகா திமிங்கிலங்களை விட டால்பின்களும், நீர் நாய்களும் வேகமாகக் கடற்படை பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதுடன் சிறப்பாகச் செயல்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 

நார்வே நாட்டு குற்றச்சாட்டுக்கு, ரஷ்யா அரசின் தரப்பில் இதுவரை எந்த விளக்கமோ, அறிக்கையோ கொடுக்கப்படவில்லை. 
இதற்கு முன்னர், அமெரிக்கா பனிப்போர் காலத்தில் டால்பின்களுக்கும், கடல் சிங்கங்களுக்கும் கலிபோர்னியா மாகாணத்தில் வைத்து கடற்பயிற்சி கொடுத்திருந்தது. அமெரிக்கக் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம நபர்கள், மர்ம பொருள்கள் கடலுக்கு அடியில் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்க இத்தகைய கடல் வாழ் உயிரினங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கக் கடற்படை இணையதளம் தெரிவிக்கிறது. 

உயிரினங்கள் அவற்றுக்கான இயல்பான வாழ்வைச் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. மனித இனம் மற்ற உயிரினங்களைத் தன்னுடைய தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. ஓர் உயிரினம் அதன் இயல்பிலிருந்து தடம் மாறி வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்போது, அந்தச் சூழல் அதைச் சுற்றிவாழும் மற்ற உயிரினங்களையும் பாதிக்கும். இது உயிரியல் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதுமட்டுமன்றி மனிதர்கள் தம்முடைய தேவைகளுக்காக இயந்திரங்களை உருவாக்குவது போல், உயிரினங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடலின் உயிரினச் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் திமிங்கிலம் போன்ற உயிரினங்களை அப்படிக் கட்டுப்படுத்துவது கடல் சுற்றுச்சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்துமென்று சூழலியலாளர்கள் இதை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு