Published:Updated:

``வயலை 5 கோடிக்குக் கேட்டாங்க; ஆனாலும் மறுத்துட்டேன்!" - இளைஞரின் இயற்கை விவசாய ஆர்வம்

``வயலை 5 கோடிக்குக் கேட்டாங்க; ஆனாலும் மறுத்துட்டேன்!" - இளைஞரின் இயற்கை விவசாய ஆர்வம்

இயற்கை விவசாயம் செய்வதில் இருக்கும் ஆர்வம் காரணமாக, நிலத்தை விற்கமாட்டேன் என்பதில் விடாப்பிடியாய் இருக்கிறார் ராசகணபதி.

``வயலை 5 கோடிக்குக் கேட்டாங்க; ஆனாலும் மறுத்துட்டேன்!" - இளைஞரின் இயற்கை விவசாய ஆர்வம்

இயற்கை விவசாயம் செய்வதில் இருக்கும் ஆர்வம் காரணமாக, நிலத்தை விற்கமாட்டேன் என்பதில் விடாப்பிடியாய் இருக்கிறார் ராசகணபதி.

Published:Updated:
``வயலை 5 கோடிக்குக் கேட்டாங்க; ஆனாலும் மறுத்துட்டேன்!" - இளைஞரின் இயற்கை விவசாய ஆர்வம்

ளர்ச்சி மோகத்தில் விளைநிலங்களை எல்லாம் பிளாட்களாக மாற்றி, கட்டடக் காடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனக்கிருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தை பிளாட் போட பலர் ஐந்து கோடி ரூபாய்க்குக் கேட்டும், தராமல் அந்த நிலத்தில் இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பு என்று கலக்கி வருகிறார் இளைஞர் ராசகணபதி. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது மணல்மேடு கிராமம். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 7-ஐயொட்டி இந்தக் கிராமம் இருப்பதால், இங்கு நிலத்தின் மதிப்பு அதிகம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராசகணபதிக்கு, அந்தச் சாலையையொட்டி இரண்டு ஏக்கர் நிலமிருக்கிறது. இந்த நிலத்தில்தான் ராசகணபதி இப்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``இந்த இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுத்தியுள்ள இடங்கள் எல்லாம் பிளாட்களாக மாறிட்டு. என் நிலத்தையும் பலர், அஞ்சு கோடிக்கு மேல தர்றோம். கொடுத்துருங்கனு இப்பவரைக்கும் கேட்கிறாங்க. அதுல ஒருத்தர் மிரட்டியே கேட்டார். நான் எதுக்கும் அசரலை. இப்படியே காசுக்கு ஆசப்பட்டு இடங்களை கட்டடங்களாக்கினா, வரும் சந்ததிக்கு விவசாயத்தை மியூசியத்துலதான் காட்டணும்னு சொல்லி  மறுத்துட்டேன்" என்றவர், அங்கிருந்த வேலை ஆள்களுக்கு சில வேலைகளைச் சொல்லி செய்யச் சொன்னார். பிறகு தொடர்ந்து பேசினார்.

 ``நான் எம்.சி.ஏ படிச்சுருக்கிறேன். படிக்கிற காலத்துல எனக்கு விவசாயத்து மேல பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அதனால், 2005-ம் வருஷம் கோயம்புத்தூர்ல உள்ள ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அப்பவே 20,000 வரை சம்பளம் வாங்கினேன். ஆனா, அந்த வாழ்க்கை எனக்கு ஒட்டலை. அப்போதான், கிராமத்து வாழ்க்கையின் அருமை தெரிஞ்சுச்சு. கிராமத்து உணவின் மகத்துவம் புரிஞ்சுச்சு. உடனே, 2011-ல் அந்த வேலைக்கு முழுக்குப் போட்டுட்டு, கிராமத்திற்கு வந்துட்டேன். இதற்கிடையில், எனக்கு திருமணம் ஆச்சு. மேற்கொண்டு என்ன பண்றதுன்னு புரியலை. பையன் பொறந்தான். அவனுக்கு கடை பால் ஒத்துக்கலை. அதனால், அவனுக்காக நாட்டுமாடு ஒண்ணு வாங்கினேன். அந்தப் பால் குடிச்ச அவன் நலமானான். அதனால், `இருக்கிற இரண்டு ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம், நாட்டுமாடுகள் வளர்ப்போம்'னு இறங்கிட்டேன். வானகத்துல நம்மாழ்வாருக்காக நடக்கும் விழாக்களில் கலந்துகிட்டேன். கொஞ்சம் அனுபவம் கிடைச்சது. 2015-ம் ஆண்டு தரிசா கிடந்த இந்த நிலத்தைச் சரிபண்ணினேன். முதல்ல, அஞ்சு காங்கேயம் பசுக்கள், ஒரு காளை மாடுன்னு வாங்கினேன். தண்ணீர் வசதிக்காக போர் போட்டேன். நிலத்துல ஒரு பகுதியில கத்திரி, மிளகாய், வெண்டை, அவரை, பீர்க்கங்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தக்காளி, முருங்கை, நாட்டு வெங்காயம்னு இயற்கை முறையில் பயிர் செஞ்சேன். 

தவிர, தோட்டத்தில் நிறைய நாட்டுமரக்கன்றுகளை நட்டு, வளர்த்துவருகிறேன். ஆரம்பத்துல பெருசா வெள்ளாமை கிடைக்கலை. இருந்தாலும், விடாப்பிடியா விவசாயம் பண்ணினேன். ஓரளவு இப்போ கையைக் கடிக்காத மகசூலை தர ஆரம்பிச்சிருக்கு. பசுமை விகடன் பத்திரிகையும், நம்மாழ்வார் காட்டிய வழியும், அதுக்கு துணையா இருக்கு. அதேபோல், இன்னொருபக்கம் கொஞ்சம் கொஞ்சமா நாட்டு மாடுகளை அதிகப்படுத்தி, இப்போ 20 மாடுகள் வச்சுருக்கிறேன். இதைத்தவிர 5 கன்றுக்குட்டிகள் நிக்குது. இருபது மாடுகள்ல, 14 மாடுகள் பசுமாடுகள். ஆறு மாடுகள் கிடாரிகள். 14 பசுக்கள்ல ஆறு மாடுகள் இப்போ பால்கறவை தருது. ஆறு மாடுகள் சினையா இருக்கு. ஒவ்வொரு மாடும் காலை மூணு, மாலை மூணுன்னு தலா ஆறு லிட்டர் பால் தருது. எல்லாப் பாலையும் லோக்கலிலேயே விற்பனை செஞ்சுருவேன். எங்க ஊரு மக்களுக்கு நல்ல பால் கிடைக்கணும்னுதான் அப்படிப் பண்றேன். பருத்திக்கொட்டை, தவிடுன்னு ஒரு மாட்டுக்கு தினமும் 50 ரூபாய் மேனிக்கு, மாதம் ஒன்றுக்கு 1,500 வரை செலவாகுது. பால் விற்பனை வகையில், மாசம் இருபத்தஞ்சாயிரமும், காய்கறி விற்பனை வகையில பத்தாயிரம்ன்னு வருமானம் கிடைக்குது. 

அடுத்த கட்டமா, ஆத்தோரமா இருக்கும் நிலத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி பண்ணலாம்னு இருக்கேன். கோயம்புத்தூர்ல வேலையில இருந்தப்ப, விடுதியிலதான் தங்கியிருந்தேன். எவ்வளவு சம்பாதிச்சாலும், 1000 ரூபாய் செலவு பண்ணி ஹோட்டல்ல சாப்பிட்டாலும், இங்க சாப்பிடுற திருப்தி வராது. அங்கே ருசி நல்லா இருக்கும். ஆனா, உடம்புக்கு கெடுதலா மாறும். ஆனா, இப்போ இயற்கையான பால், காய்கறின்னு நல்ல உணவுப் பண்டங்களை உற்பத்தி பண்ணி, என் குடும்பத்திற்கும், மக்களுக்கும் கொடுத்து, நல்ல சாப்பாடு கிடைக்க வழிசெய்ய முடியுதேங்கிற திருப்தி ஏற்பட்டிருக்கு. என் நிலத்தைச் சுத்தி உள்ள நிலங்களை பிளாட் போட்டு விற்கிறாங்க. ஆனா, எனக்கு எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் சரி, எவ்வளவு கோடிகளை கொட்டி வாங்க நினைச்சாலும் சரி, எனது இந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை யாருக்கும் தாரை வார்க்கமாட்டேன். இயற்கை விவசாயம் செய்ய மட்டுமே பயன்படுத்துவேன். இன்னும் நாட்டுமாடுகளை அதிகப்படுத்தி பெரிய அளவில் பால் பண்ணை வைக்கவும், அதில் கிடைக்கும் பாலைக் கொண்டு மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும் ஏற்பாடு பண்ணப் போறேன். இயற்கை விவசாயத்தையும் விஸ்தரிக்கப் போகிறேன். 

இதெல்லாம் தேவையா, அஞ்சு கோடிக்கு நிலத்தை வித்துப்புட்டு, கால்மேல கால் போட்டு ராஜா மாதிரி வாழ வேண்டியதுதானே, இந்த விவசாயத்தை ஏன் கட்டிக்கிட்டு அழுற? பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியேன்னு ஊர்க்காரங்க மட்டுமல்ல, என்னோட சொந்தக்காரங்களே என்கிட்ட கேட்கிறாங்க. அவங்களுக்கு பதில் சொல்லாம, சிரிச்சுக்கிட்டு போயிருவேன். என்னைப் பார்த்து, நாலு பேர் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினாலும் போதும். அவங்களை கொண்டு, இந்தப் பகுதி விவசாயிகளையே இயற்கை விவசாயத்திற்குத் திருப்பிருவேன். அந்த உறுதியையும், நம்பிக்கையையும் நம்மாழ்வார் தினம் தினம் எனக்கு கொடுத்துக்கிட்டே இருக்கிறார்" என்று முடிக்கிறார்.