Published:Updated:

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

காடு, சால்காடோ ஜோடி இருவருமே இணைத்திற உறவுக்காரர்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர். இப்போது இருவருமே செழிப்பாக வாழ்கின்றனர். அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே மிக நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர். இதுதான் காடு.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

காடு, சால்காடோ ஜோடி இருவருமே இணைத்திற உறவுக்காரர்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர். இப்போது இருவருமே செழிப்பாக வாழ்கின்றனர். அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே மிக நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர். இதுதான் காடு.

Published:Updated:
"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

"கவான்! மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. இவை மொத்தமும் சேர்ந்ததுதான் காடு. எப்படி உங்களால் ஏதாவது ஒன்றை மட்டும் தனியே பிரித்து ரசிக்கமுடியும்! நாம் மொத்த காட்டையுமே ரசிக்கவேண்டும்."

நக்கீரன் எழுதிய காடோடி நூல் வாசித்தவர்களுக்கு இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்திருக்கும். போர்னியோ காடுகளில் அவருடைய நெருங்கிய நண்பரும் முருட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான ஜோஸ் காடு பற்றி அவரிடம் விளக்கும்போது கூறியதுதான் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 

உண்மைதான், உடலில் எப்படி கை, கால்கள், முகம், கண்கள், நரம்புகள், எலும்புகள் அனைத்தும் முக்கியமோ அப்படியே காட்டிலும் புற்கள், மரங்கள், வேர்கள், பறவைகள், விலங்குகள் அனைத்துமே முக்கியம். ஒரு காடு உயிர்த்திருக்க வேண்டுமென்றால் அதில் மரங்கள் மட்டுமில்லை, அந்த மரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களில் தொடங்கி அந்த மரத்தைத் தாங்கி நிற்கும் மண்ணைச் சார்ந்து வாழும் புழுக்களிலிருந்து பூச்சிகள்வரை அனைத்துமே முக்கியம். அவையனைத்துமே நம் உடற்பாகங்களைப் போலவே ஏதாவதொரு பணியைக் காடு உயிர்த்திருப்பதற்காகத் தொடர்ச்சியாகச் செய்கின்றன. காடு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டேயிருக்க, உயிரோடிருக்க மிக முக்கியமான உறுப்பு ஒன்றிருக்கிறது. அது நம்முடைய இதயத்தைப் போன்றது. அதுதான் காடுகளின் இதயமும்கூட. அதன் சுவாசத்தை நாம் நிறுத்துகையில் காடுகளும் உயிரிழந்துவிடுகின்றன. அதைச் சார்ந்திருந்த உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன. ஆம், நீங்கள் கணிப்பது சரிதான். மரங்கள்தான் அதன் இதயம்.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

பிரேசில் நாட்டில் ஒரு காடு தன் இதயத்தை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதைக் காப்பாற்ற வந்த, பல்லாண்டுகள் முயற்சியால் அதன் உயிரைக் காப்பாற்றிய ஆதாம் ஏவால் பற்றிய கதைதான் இது. சொல்லப்போனால் காடு உயிர்த்தெழ உதவியது இந்த ஆதாம் என்றால், ஆதாம் உயிர்த்தெழ உதவியது அந்தக் காடு. இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இருவரும் ஒருவொரையொருவர் காப்பாற்றிக் கொண்டார்கள்.

ஆதாமின் பெயர், செபாஸ்டியோ சால்காடோ. சர்வதேச ஒளிப்படக்காரர். தம் ஒளிப்படங்களுக்காகப் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். அவருடைய மனைவி ஏவாலின் பெயர், லேலியா டிலூஸ் வானிக் சால்காடோ. வாழ்வில் இருவரும் இணைந்ததிலிருந்து இன்றுவரை எதுவாயினும் சேர்ந்தே பணி செய்துகொண்டிருக்கும் காதல் ஜோடி.  இருவருமே சமுதாயத்திற்காக உழைக்க வேண்டுமென்ற வேட்கையோடு ஓடிக் கொண்டிருக்கும் ஒத்த மனசுக்காரர்கள்.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

Photo Courtesy: Sebastiao Salgado

அரக்கத்தனமாக ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டபோது, அங்கு நடந்த கொடூரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் செபாஸ்டியோ சால்காடோ. அந்தப் பிரச்னைகளைப் பதிவு செய்தது அவரை மனதளவில் கடுமையாகப் பாதித்தது. நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்கிறீர்கள். ஒரு கட்டத்திற்குமேல் சாலை மிகவும் கரடுமுரடாக இருக்கிறது. தொடர்ச்சியாக எதன் மீதோ உங்கள் சக்கரங்களை ஏற்றிக்கொண்டே போவதுபோல் உணர்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரிந்த வரைக்கும் அந்தச் சாலையொன்றும் அவ்வளவு கரடுமுரடானது இல்லை. வண்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறீர்கள். சாலை நிரம்பப் பிணங்கள் குவிந்துகிடக்கின்றன. அந்தப் பிணங்களின் மீதுதான் நீங்கள் வாகனத்தை ஓட்டி வந்துள்ளீர்களென்று தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

ருவாண்டாவின் இனப்படுகொலையை விவரிக்க இதைவிடக் கொடூரமான சம்பவம் தேவைப்படுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவு மோசமான சம்பவங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில்தான் செபாஸ்டியோ முனைந்திருந்தார். அந்த முயற்சியின்போது தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டதைத் தன் கண்களால் பார்க்கவேண்டிய சூழ்நிலையிலும் சிக்கினார். திரும்பிய திசையெல்லாம் மரணங்களும் மரண ஓலங்களும் மட்டுமே. அந்தச் சூழல் மனதளவில் செபாஸ்டியோவை வெகுவாகப் பாதித்திருந்தது. அதிலிருந்து வெளிவர வேண்டிய தேவை அவருக்கிருந்தது. வாழ்நாள் முழுவதும் அதே அதிர்ச்சியோடு அவரால் வாழமுடியாது.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

Photo Courtesy: Sebastiao Salgado

அவருக்குச் சிகிச்சை தேவைப்பட்டது. அது வழக்கமான சிகிச்சையல்ல. அவருக்குத் தேவை மன அமைதி. தாம் பார்த்த கொடூரங்களில் அதிர்ச்சிகளிலிருந்து மீண்டுவருவதற்குத் தேவையான அமைதியான வாழ்விடம். அதைத் தேடித் தம் சொந்த நாடான பிரேசில் வந்தார். கவலையான விஷயம் என்னவென்றால் அங்கும் அவருக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கும் ஒரு இனப்படுகொலை நடந்திருந்தது. அந்தப் படுகொலை ருவாண்டாவில் நடந்ததைப் போன்றதில்லை. அதேசமயம் ருவாண்டா இனப்படுகொலைக்குச் சற்றும் சளைத்ததுமில்லை. ஜெராரிஸ் மாகாணத்திலிருக்கும் ஐமோரேஸ் என்ற கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். அங்கு லட்சக்கணக்கான ஏக்கர்களில் அமைந்திருந்த வனப்பகுதி மொத்தமும் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டு செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. அந்தச் செம்மண் வெறும் நிலமாக அவருக்குத் தோன்றவில்லை. அங்கு முன்பிருந்த காடு இனப்படுகொலை செய்யப்பட்டு, அந்தக் கொலைகளின் விளைவாகச் சிந்திய குருதியின் உறைவிடமாகவே அந்தச் செம்மண் நிலம் அவருக்குத் தெரிந்தது. அது அவரை மேலும் பாதித்தது. மேன்மேலும் வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தன் கணவரை நினைத்து வேதனைப்பட்ட செபாஸ்டியோவின் மனைவி ஒரு முடிவுக்கு வந்தார். "ருவாண்டாவில் நடந்ததைச் சரிசெய்ய நம்மால் முடியாது. ஆனால், இங்கு நடத்தப்பட்டிருக்கும் இந்த இனப்படுகொலையை நம்மால் சரிசெய்ய முடியும். அதைச் செய்வோம். அதன்மூலம், அவரையும் சரிசெய்வோம். இந்தக் காடு மீண்டும் உயிர்பெற்றால் அவரும் குணமாவார்" என்று அவர் நம்பினார்.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

Photo Courtesy: Sebastiao Salgado

அழிந்துபோன காடு முழுவதும் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதை நாமே செய்வோம், தம்மால் செய்யமுடியுமென்ற நம்பிக்கையை செபாஸ்டியோவின் மனதில் விதைத்தார். வெறும் முப்பதே வேலையாட்களை வைத்துக்கொண்டு தொடங்கினார்கள். நாற்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டார்கள். அவற்றிலிருந்து பாதிக்குப் பாதி இருபது லட்சம் கன்றுகள் இன்று மரமாகி நிற்கின்றன. எத்தனை லட்சம் மரங்களை நட்டாலும், நீங்கள் நடுவது அந்த நிலத்துக்குரிய மரங்களாக இருக்கவேண்டும். எந்த மரத்தை வேண்டுமானாலும் நடலாமென்று நினைத்தால் அந்தக் காடு உயிர்பெறாது. அங்கு என்னென்ன மரங்கள் முன்பு இருந்தனவோ அவையே அங்கு வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான் அங்குப் பாம்புகளும் பூச்சிகளும் ஊர்ந்துசெல்லும். பறவைகள் விதைப் பரவலில் பங்குவகித்து மேலும் செழிக்க வைக்கும். காட்டுப்பன்றிகள் தோண்டித் தோண்டி கிழங்கெடுத்துச் சாப்பிடும், தாவரப் பெருக்கத்தில் ஈடுபடும். இல்லையேல் நிசப்தமாக எந்த உயிரோட்டமுமற்ற மரப் பண்ணையாகவே அந்த இடம் விளங்கும். பிரேசிலின் இந்த ஆதாம் ஏவால் அதை நன்றாகவே புரிந்திருந்தனர். அதற்குத் தகுந்த மரங்களையே அவர்கள் நட்டு வளர்க்கவும் செய்தனர்.

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

Photo Courtesy: Weverson Rocio

இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அங்கு 172 வகையான பறவைகள், 33 வகையான பாலூட்டிகள், 293 வகையான தாவரங்கள், 15 வகையான ஊர்வனங்கள், 15 வகையான நீர்நில வாழ்விகள் என்று அந்தக் காடு உயிர்த்தெழுந்துவிட்டது. அங்குக் கொற்றவை குடிகொண்டுவிட்டாள். காட்டுயிர்கள் அங்கு மீண்டும் வந்துவிட்டன. பறவை ஒலிகளைக் கேட்கமுடிகிறது. காட்டுவண்டுகளின் ரீங்காரங்கள் அவர்களை வரவேற்கின்றன. 

காற்றில் மரங்கள் உராயும்போது ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையான இசையை உண்டாக்கும். அந்த இசைகளின் வித்தியாசங்களைக் காடோடிகளால் மட்டுமே உணரமுடியும். அந்தக் காடோடிகளில் ஒருவராக செபாஸ்டியோ மாறி நின்றார். அந்தக் காட்டின் ஒவ்வொரு மரமும் அவருடைய குரலைக் கேட்டிருக்கின்றன. அந்தக் காட்டின் ஒவ்வொரு இலையுடைய இசையையும் தொடக்கத்திலிருந்து அவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காட்டின் மொழியைப் புரிந்துகொள்வது அவருக்கு இனி கடினமாக இருக்காது. ஏனென்றால், காடு அவரால் எப்போது குணமானதோ அப்போதே அவருடைய பிரச்னைகளிலிருந்தும் அவரைக் குணப்படுத்திவிட்டது. அந்தக் காடு அவரைத் தன்னுள் ஒருவராக ஏற்றுக்கொண்டது. 

"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!" பிரேசிலின் காடோடி

Photo Courtesy: YASUYOSHI CHIBA

காடு, சால்காடோ ஜோடி இருவருமே இணைத்திற உறவுக்காரர்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர். இப்போது இருவருமே செழிப்பாக வாழ்கின்றனர். அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே மிக நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர். இதுதான் காடு. அதற்குப் பழிவாங்கவெல்லாம் தெரியாது. காடு கண்ணாடியைப் போன்றது. நாம் என்ன செய்கிறோமோ அதுதான் அதனிடமிருந்து பிரதிபலிக்கும். செபாஸ்டியோ விஷயத்திலும் அதே கதைதான். காடு அவர் செய்ததைப் பிரதிபலித்துள்ளது அவ்வளவே.

"எங்களுடைய இருபது ஆண்டுகால முயற்சியில் காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்" பிரேசிலின் காடோடி செபாஸ்டியோ சால்காடோ.