Published:Updated:

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

அந்த நீரை வெளியேற்றினர். நிலத்தில் இருந்த நச்சுத்தன்மையைப் போக்கவே அவ்வாறு செய்தனர். அடுத்தது விவசாயம்தான் என ஆர்வமாக இருந்தவர்களுக்குப் பெரிய அடி அங்குதான் காத்திருந்தது.

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!
45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

கேரளாவில் உள்ள, எர்ணாகுளம் மாவட்டம், பெரியாற்றின் கரையில் அமைந்திருக்கிறது, டினி (tiny) எனும் சிறிய கிராமம். இந்தக் கிராமத்தைச் சுற்றிலும், ஏலூர், அலுவா மற்றும் கலமசேரி (Eloor, Aluva and Kalamassery) ஆகிய நகராட்சிகள் அமைந்துள்ளன. மொத்தமாக 200 ஏக்கர் நிலங்களுடன் 35,000 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். 

20 ஆண்டுகளுக்கு முன்னர் டினி கிராமம், நெல் வயல்களைப் பசுமைப் போர்வையாக போர்த்தியிருந்தது. இது போக முந்திரி பயிர் மற்றும் காடுகளைக் கொண்டிருந்தது. இது எல்லாமே நகரமயமாவதற்கு முன்னர் மட்டுமே. நகரமயமாக்கலின் ஒட்டுமொத்த கோரத்தையும் சந்தித்தது அந்தக் கிராமம். 

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

1990-களின் தொடக்கத்தில் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து மற்ற தொழில்களுக்கு மாற ஆரம்பித்தனர். விவசாயம் குறைந்த லாபத்தை ஈட்டியது, நிலத்தடி நீர் அளவு கடுமையாகக் குறைந்தது மற்றும் நீரின் பி.ஹெச் மதிப்பு குறைந்தது எனப் பல காரணிகள் விவசாயத்தைக் கைவிட காரணமாகின. கைவிடப்பட்ட அந்த விவசாய நிலங்கள் கழிவு நீர் தேங்கும் குட்டைகளாகவும், சாக்கடைப் புதர்களாகவும் காட்சியளித்தன. சுமார் 200 ஏக்கர் நிலம் நெல் விளைந்த பகுதி, கழிவு நிலமாக இருந்தது. நகரத்தின் குப்பைக் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகள் என ஒட்டுமொத்தமாகக் கிராமத்தின் கட்டமைப்பைச் சீர்குலைத்தது. தொழிற்சாலைகள், புதர் செடிகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கு முன்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்து வந்தது. மண்வாசம் வீசும் பூமியாக இருந்த நிலங்களைக் கடந்து செல்லும்போது, மூக்கைப் பிடித்துக்கொண்டு போகும் நிலை ஏற்பட்டது.
ஆனால், குப்பைக் கழிவுகளால் நிறைந்திருந்த நிலங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாறிக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 45 ஏக்கர் நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இந்த நிலங்களில் நெல், காய்கறிகள், மலர்கள், முந்திரி எனப் பல பயிர்கள் விளைய வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு 18 பேர் கொண்ட 'அடையாளம்' எனும் இளைஞர் குழுவே காரணம். 

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

இந்தக் குழுவின் பயணம் கொஞ்சம் கடுமையானது. 200 ஏக்கர் நிலமும் சிறிய நில உரிமையாளர்களைக் கொண்டிருந்ததால், அவர்களை இணைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்திருக்கிறது. இதற்காக 2008-ம் ஆண்டு இந்தக் குழுவினர் உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளைச் சந்தித்தபோது, எந்த நடவடிக்கைக்கும் தங்கள் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு தேவை என அதிகாரிகள் பாரபட்சமாக இருந்துள்ளனர். அப்போதுதான் இதை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்ற யோசனை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக 150 நில உரிமையாளர்களுடன் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர், அந்தக் குழுவினரின் இரண்டாவது சந்திப்பிலேயே 100 விவசாயிகளுக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. மூன்றாவது கூட்டத்தில் 15 நில உரிமையாளர்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அதனால் பொறுமை இழந்த குழுவினர் தாமாகவே இதற்கான மாதிரியை வடிவமைக்க வேண்டும் என நினைத்து செயலில் இறங்கினர்.

முதலில் 1.5 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து நெல்லை விதைத்தனர். மொத்த நிலங்களோடு ஒப்பிடும்போது, இது அதிகமான நிலம் அல்ல. ஆனால், நல்ல தொடக்கமாக அந்தக் குழுவினர் நினைத்தனர். ஆனால், நினைத்தவுடன் சீரமைக்கும் நிலையில் அந்த நிலம் இல்லை. அந்த நிலத்தில் கோழிக் கழிவுகள், கழிப்பறைக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குவியல்கள் எனப் பல்வகை கழிவுகள் நிறைந்திருந்தன. அந்தக் கழிவுகளைப் பல நாள்கள் முயற்சிக்குப் பின்னர், அந்தக் கழிவுகளை அகற்றினர். அதற்கு மட்டும் செலவான தொகை சுமார் 1,50,000. இதற்காக மக்களிடமே நன்கொடை வாங்கி, மூன்று ஜே.சி.பி-களை வாடகைக்கு எடுத்து நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்தனர். அருகிலிருந்த கால்வாய்களிலிருந்து நீரை எடுத்து, சீரமைத்த நிலத்தில் முழுமையாக நிரப்பினர். அதன் பின்னர் அந்த நீரை வெளியேற்றினர். நிலத்தில் இருந்த நச்சுத்தன்மையைப் போக்கவே அவ்வாறு செய்தனர். அடுத்தது விவசாயம்தான் என ஆர்வமாக இருந்தவர்களுக்குப் பெரிய அடி அங்குதான் காத்திருந்தது. அருகில் இருந்த கிணறுகளில் இருந்த நீரைத்தான் முதலில் விவசாயம் செய்ய திட்டமிட்டிருந்தனர். நீரைப் பரிசோதித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'அந்த நீரை வைத்து விவசாயம் மட்டுமல்ல, எதையும் செய்ய முடியாது' என நீர் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டது.

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

அடுத்ததாகக் கால்வாய்களை நம்பியாக வேண்டிய நிலை. பக்கத்தில் இருக்கும் சிறிய ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வர வேண்டும். ஆனால், குப்பைகள் கொட்டப்பட்டு கால்வாய்களும் குறுகி இருந்தன. அதனால், சிறிய கால்வாய்களையும் புனரமைக்க வேண்டி இருந்தது. 20 வருடங்களாகப் பாழ்பட்டுப்போயிருந்த கால்வாய்களைக் கஷ்டப்பட்டு சீரமைத்தனர். இதைச் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்று மற்ற அனைத்தும் மாறியிருக்கிறது. எதற்கும் பயன்படாது என்று சொன்ன தண்ணீர்கூட இன்று குடிநீர் ஆதாரமாக மாறியிருக்கிறது. 

இந்தக் குழுவில் இருக்கும் 18 பேரும் வெவ்வேறு வேலைகளில் இருப்பவர்கள். அதனால் இவர்கள் வேலை நேரம் தவிர, மீதம் இருந்த நேரங்களில்தான் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் பல காலமாகப் பல காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டன. ஆனால், இறுதியாக 2015-ம் ஆண்டு முதலே வேகம் எடுக்க ஆரம்பித்தது. 'அடையாளம்' என்ற பெயரில் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் குழுக்களாகப் பதிவு செய்யப்பட்டது. இத்தனை வேலைகளைச் செய்த பின்னர் நிலத்தில் நெல்லைப் பயிரிட்டனர். விளைச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதை வைத்தே பஞ்சாயத்து குழுவினரிடம் மீண்டும் தங்களது திட்ட விபரங்களைச் சமர்ப்பித்தனர். இந்த முறை நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்தனர். முதல் முறையாக 15 ஏக்கர், இரண்டாம் முறை 30 ஏக்கர் நிலமாக அதிகரித்தது. மூன்றாம் முறை 45 ஏக்கர் நிலங்களாக மாறி பசுமை போர்த்தி நிற்கிறது. 

45 ஏக்கர் நிச்சயம்... 200 ஏக்கர் லட்சியம்... நஞ்சு நிலங்களை மீட்கும் 'அடையாளம்' குழு!

இதன் பின்னர், இந்தக் குழு முன்னெடுக்கும் விவசாயப் பணிகளுக்கு மாநில அரசிடமிருந்து 89 சதவிகிதம் மானியம் கிடைத்திருக்கிறது. இந்தக் குழு, தாம் பயிர் செய்த நெல் அறுவடையில் கிடைத்த நெல்லை, பஞ்சாயத்து மக்களுக்கு விற்பனை செய்திருக்கிறது. இதில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிட்டியிருக்கிறது. இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், விவசாயிகள். பாழ்பட்டுப் போயிருந்த நிலம் இன்று நெல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. நெல் தவிர, வயலைச் சுற்றிலும், காய்கறிகள், மலர்கள் எனப் பல பயிர் விவசாயத்தையும் செய்ய திட்டங்களை வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆச்சர்யம் கொடுக்கும் விஷயம், விவசாயம் முழுவதும் இயற்கையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள், விவசாயிகள். காய்கறிகளையும் நேரடியாகச் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்து, விவசாயிகளுக்கு லாபம் வர ஏற்பாடு செய்து கொடுக்கிறது, அடையாளம் குழு.

மூக்கைப் பிடித்துக்கொண்டு மூச்சுக்காற்றை அடக்கி அந்த இடங்களைக் கடந்து சென்றவர்கள், இப்போது தூய காற்று வாங்க வருகிறார்கள். வயலைப் பார்க்க வரும் மக்களுக்கு எப்போதும் அனுமதி கொடுக்கப்படுகிறது. 

Vikatan