Published:Updated:

அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை

அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை
அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை

மாற்றுத்திறனாளி என்கிற அடையாளம் சதீஷுக்குப் பிடித்ததில்லை. யாரும் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அது பற்றிய பேச்சுகளைப் பெரும்பாலும் தவிர்ப்பவர். எல்லோரையும்போல நாம் நடத்தப்பட வேண்டும் என்றால் எல்லோரையும்போல நாம் இருக்கப் பழக வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் சதீஷ்.

'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' என்ற வாக்கை நினைவாக்கும்படியாக இருக்கிறது திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்குமாரின் செயல்பாடுகள். ஒரு மாற்றத்தை நோக்கி, மாற்றுச்சிந்தனையோடு களமாடும் மாற்றுத்திறனாளி இளைஞர் இவர். அத்திக்கடவு, அவினாசி திட்டத்துக்காகத் தொடர்ந்து களம் கண்டுவருபவர் என்பதால், 'அத்திக்கடவு சதீஷ்' அல்லது 'களம் சதீஷ்' என்கிற அடையாளம், கொங்கு மக்களிடம் பரிச்சயம். மூன்று வயதிலேயே கால்கள் செயலிழந்துபோனதால், ஊன்றுகோல்தான் மூன்றாவது கால். ஆனால், மாற்றுத்திறனாளி என்கிற அடையாளம் சதீஷுக்குப் பிடிப்பதில்லை. யாரும் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதுபற்றிய பேச்சுகளைப் பெரும்பாலும் தவிர்ப்பவர். எல்லோரையும்போல நாம் நடத்தப்பட வேண்டும் என்றால், எல்லோரையும்போல நாம் இருக்கப் பழக வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் சதீஷ். 60 ஆண்டுக்கால தொடர் மக்கள் போராட்டத்தின் விளைவாகத் தற்போது அவினாசி அத்திக்கடவு திட்டம் ஒரு வடிவம் பெற்றிருக்கிறது. சுமார் 1,652 கோடி ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தமிழக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு முக்கியக் காரணங்களாகப் பல்வேறு காலகட்டங்களில் நடந்த பலவடிவப் போராட்டங்களைக் கூறினாலும், மிக முக்கியமான ஒன்றாகக் கூறப்படுவது, 2016-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம். மொத்தம் 14 பேர், 12 நாள்கள் சமரசமின்றி நடத்திய போராட்டம்தான் அரசையே அடிபணியவைத்தது. அந்தச் சமரசமற்ற களப்போராளிகள் 14 பேரில், ’களம்’ சதீஷும் ஒருவர்.

அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை

2014-ம் ஆண்டு முதல் 'களம்' என்ற அறக்கட்டளையைத் தொடங்கி இன்றுவரை மரம் நடுதல், அடர்வனம் உருவாக்குதல், சாலையோரப் பூங்கா அமைத்தல், வெட்டப்படவிருக்கும் மரங்களைக் காப்பாற்றி, வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் மறுநடவு செய்து பராமரித்தல் என்று தனது அறக்கட்டளையின்மூலம் பல பணிகளைச் செய்துவருகிறார். அவினாசி, அன்னூர், கருவலூர், கருமத்தம்பட்டி, அங்கேரிபாளையம் எனத் திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், கிட்டத்தட்ட 12,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். அவினாசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தைச் சுற்றி சுமார் 700 மரக்கன்றுகளை இருபுறங்களிலும் நட்டு, நடுவே நடைப்பயிற்சி செய்யும்படியாகத் தடத்தை ஏற்படுத்தி பள்ளி மாணவர்களைக்கொண்டே அழகுபடுத்தியிருக்கிறார்.

அடர்வனம் அமைத்தல் இவரது பணிகளில் டாப் ஸ்டார். 'மியாவாகி' ஜப்பானிய முறையைப் பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கேற்ப சுமார் 60 வகையான நாட்டு மரக்கன்றுகளை நட்ட அவரது புது முயற்சி, பலரின் கைத்தட்டல்களைப் பெற்றது. அவினாசிக்கு அருகில் உள்ள குள்ளேகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் முட்புதர்களால் புதர் மண்டிய குட்டையைத் தூர்வாரி, கரை அமைத்து, அதன் அருகே 20 சென்ட் நிலத்தில் சுமார் 2,500 மரக்கன்றுகளை நட்டுள்ளார். 2016-ம் ஆண்டு ஏற்படுத்திய இந்த அடர்வனம், தற்போது பெரிய காடாகி அங்கு பறவைகள், சிட்டுக்குருவிகள், தும்பிகள், முயல்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கை வாழிடமாக அமைந்துள்ளது. வேம்பு, அரசு, பூவரசு, அத்தி, நொச்சி முதலான பல மூலிகைச் செடிகளும் கலந்து நடப்பட்டிருப்பதால் தூய்மையான காற்றும் அக்கிராம மக்களுக்கு ஆரோக்கியமானதாகக் கிடைக்கிறது. இந்தச் செயற்பாடுகளின் தாக்கத்தால் அருகிலுள்ள கிராமமான கோட்டுப்புல்லாம் பாளையத்திலும் இதுமாதிரியான அடர்வனத்தை அந்தக் கிராம மக்கள் அமைத்துள்ளனர்.

அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை

கோவை - ஈரோடு நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் சுமார் 180 மரங்கள் வெட்டப்படுவதாக இருந்தது. இதைக் கண்டு பொறுமை இழந்த சதீஷ், முன்முயற்சியாகத் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக்கொடுத்தார். அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 140 மரங்கள் காப்பாற்றப்பட்டன. 34 மரங்கள் அவினாசி மேல்நிலைப்பள்ளி அருகில் மறுநடவு செய்யப்பட்டது. இது குறித்து சதீஷ் கூறுகையில், “ 'மரத்தை வெட்டக் கூடாது'னு முதல் வழக்கே நெடுஞ்சாலைத்துறை மேலதான் அப்போ போட்டோம். 'இப்ப வெட்டுங்க'னு சொன்னாலும்கூட அவங்க மரத்தை வெட்டுறது இல்ல. மாறாக, 'சாலையோரம் மரத்தை நடுங்க'னு சொல்லி ஒரு ஜே.சி.பி இயந்திரத்தையே வழங்கி முழு ஆதரவு தர்றாங்க. இதுதான் எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றியா நாங்க பாக்குறோம்!” என்றார்.

அத்திக்கடவு திட்டத்தின் அறியப்படாத முகம்! - மரங்களின் காவலன் சதீஷின் கதை

'வெறுங்கை என்பது மூடதனம், விரல்கள் பத்தும் மூலதனம்' என்பதைச் செயலில் காட்டி சூழலியல் செயற்பாட்டாளராக, இயற்கை விரும்பியாக உள்ளதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஈழத்தமிழர்களுக்கான களப்போராட்டம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், விவசாயப் போராட்டங்கள் முதலான இன உணர்வுப்போராட்டங்களிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் சதீஷ். கஜாபுயல் நிவாரணத்துக்காகப் பல பயணங்களை மேற்கொண்டு களவேலைகளைச் செய்திருக்கிறார். இருகால்கள் செயலிழந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாது பயணிக்கத் தன்னம்பிக்கை, ஊன்றுகோலாக இருக்கிறது அவரிடம். இந்தத் தமிழனின் பயணம் ஆரவார வெற்றி அடையட்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு