Published:Updated:

`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை

மு.ராஜேஷ்

கடந்த வாரம் நிலக்கரியின் தேவையின்றி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது பிரிட்டன். இதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை
`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை

பிரிட்டன் கடந்த வாரம் செய்த ஒரு செயலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் உலகம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழலியலாளர்கள். அப்படி பிரிட்டன் என்ன சாதனை செய்தது என்று பார்த்தால், மின்சாரம் தயாரித்திருக்கிறது. `ஆமாம் சாதாரண மின்சாரம்தான் உற்பத்தி செய்தோம். ஆனால் கொஞ்சம் கூட நிலக்கரியைப் பயன்படுத்தாமல்' என்று பெருமைப்படுகிறது பிரிட்டன். கடந்த சில நாள்களுக்கு முன்னால் தொடர்ந்து ஒரு வாரம் நிலக்கரியே இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது பிரிட்டன்.

கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை

`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை

அனல்மின் நிலையங்கள் மூலமாகக் கிடைக்கும் மின்சாரத்தைத் தவிர்ப்பது என்பதை கேட்க வேண்டுமானால் எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும். பிரிட்டனில் 1881-ம் ஆண்டில், முதல் அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கிப் பல வருடங்களுக்கு நாட்டின் மின்சாரத் தேவைக்கு அனல்மின் நிலையங்களின் பங்களிப்பு அதிக அளவிலிருந்து வந்தது. தற்போது முழுமையாக, அது இல்லாமலே மின்சாரம் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மூலமாகவே கிடைத்து வந்தது. அதன் பின்னர் மாற்று ஆற்றல் மூலங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தது பிரிட்டன். விளைவு முற்றிலும் அனல் மின்சாரம் இல்லாமலேயே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலையை உருவாக்கியிருக்கிறது. கடந்த 1-ம் தேதி மின்சாரம் பெறும் இணைப்பிலிருந்து கடைசி நிலக்கரி ஜெனரேட்டரும் நீக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் புதன்கிழமை வரையிலான ஒரு வார காலத்தை அனல் மின்சாரம் இல்லாமல் நிறைவு செய்திருக்கிறது.

`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை

Credit NationalGridESO

இதை நேஷனல் கிரிட் எலக்ட்ரிசிட்டி ஆபரேட்டர் (National Grid ESO) அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் அதிகபட்சமாக மின்சாரம் இயற்கை எரிவாயு மூலமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 57 சதவிகித மின்சாரம் பெறப்பட்டுள்ளது. அடுத்ததாக அணு மின் நிலையங்கள் மூலமாக 20.5 சதவிகித மின்சாரம் கிடைத்துள்ளது. காற்று, சூரிய ஒளி மூலமாக 10 சதவிகித ஆற்றல் கிடைத்துள்ளது. ``இன்னும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள், மின்சாரம் வழங்கும் அமைப்பில் சேரும்போது, இதுபோல நிலை வழக்கமான ஒன்றாகிவிடும்" என ESO அமைப்பின் இயக்குநர் Fintan Slye தெரிவித்திருக்கிறார். கார்பன் வெளியீடு இல்லாமல் மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. வரும் 2025-ம் ஆண்டு அதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பிறகு நிலக்கரியை பிரிட்டன் முழுமையாகக் கைவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்குமா இதுபோன்ற முயற்சிகள்?

`கடந்த 137 வருடங்களில் இதுவே முதல்முறை!' மின்உற்பத்தியில் பிரிட்டன் செய்த சாதனை

மின்சாரம் அறிமுகமான புதிதில் அதற்கான தேவை என்பது குறைவான அளவுக்கே இருந்தது. பின்னர் உலகமயமாக்கலின் காரணமாகத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமானது. மேலும், மக்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் தேவையும் அதிகரித்தது. இப்படி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க நூற்றாண்டுகளுக்கும் மேலாக உதவிசெய்து வருவது நிலக்கரிதான். இன்று உலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அனல் மின் நிலையங்களே அதிக அளவில் பங்களிக்கின்றன. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின் வெளியீடு ஆபத்தான அளவில் உயர்ந்தது. மற்ற தொழிற்சாலைகளைப் போல இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் உள்ள ஜெனரேட்டர்கள் தொடர்ச்சியாக இயங்க வேண்டிய தேவையிருக்கும். அதுவே அதிக அளவு நிலக்கரி எரிக்கப்படுவதற்கான தேவையும் உருவாக்குகிறது. இது போன்ற அனல் மின் நிலையங்கள் அதிகளவு கார்பனை வெளியிடுகின்றன. இது உலக வெப்ப மயமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலை மாற்றம் பற்றிய விவாதம் தற்போது உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் கார்பன் வெளியீட்டளவை குறைக்க வேண்டியது அவசியமானதாகிறது. ஒவ்வொரு நாடும் மின்சாரத் தேவைக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக கார்பன் வெளியீட்டைப் பெருமளவு குறைத்துவிட முடியும். எனவே பிரிட்டன் தற்போது எடுத்திருக்கும் முயற்சி அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Vikatan