Published:Updated:

`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை

`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை
`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை

பலம்வாய்ந்த அணுக்கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் விலங்குகளுக்கு ஆபத்தானவன் என்றால் நம்புவீர்களா? ஆம், என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

லகின் மிக மோசமான அணுஉலை விபத்து அது. 1979-ம் ஆண்டு அமெரிக்காவின் த்ரீ மைல் தீவு அணுமின் உலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் நிகழ்ந்த இரண்டாவது அணுஉலை விபத்து, செர்னோபில் அணுஉலை விபத்துதான். அப்போதைய சோவியத் ரஷ்யாவில் இருந்த உக்ரைன் பிரிப்யாட் அருகில் உள்ள செர்னோபில் நகரத்தில்தான் இந்த அணுஉலை அமைந்திருந்தது. அதில் 4 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி சரியாகத் திட்டமிடப்படாத ஆராய்ச்சியால் 4-ம் அணு உலை வெடித்துச் சிதறியது. அணுஉலை விபத்துகளில் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய கோரமான விபத்தாக அது அமைந்தது. 1945-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா அணுகுண்டின் கதிரியக்கத் தன்மைபோல 400 மடங்கு கதிர்வீச்சைக் கொண்ட விபத்து எனச் சொன்னால் அதன் வீரியம் எளிதில் புரியும்.

`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை

Photo - Germán Orizaola

ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் விளைவாக இன்றும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கிறார்கள் என்று சொன்னால், அதைப்போல 400 மடங்கு கதிர்வீச்சைக் கொண்ட விபத்திற்கு என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும். இதுபற்றிய விவரங்களை சோவியத் ரஷ்யா தெளிவாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து நடந்து கடந்த ஏப்ரல் 26-ம் தேதியுடன் 33 ஆண்டுகள் கடந்தும், இப்பகுதி அணு உலை விபத்தால் ஏற்பட்ட கோர விபத்துக்குச் சாட்சியாக நிற்கிறது. விபத்து நடந்த 2-ம் நாள்தான் மக்கள் அந்தப் பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இன்னும் அந்தப் பகுதியில் மக்கள் குடியேறவில்லை. இதை `மறக்க முடியாத மனிதக் குற்றம்' என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்கள் தவிர, சுற்றுச்சூழலில் இந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம் மிகவும் மோசமானது. அந்தப் பகுதிகளில் ஆலைக்கு அருகில் பைன் மரக்காடுகள் இருந்தன. விபத்து நடந்த உடனே மரங்கள் கருகி, சிவப்பு நிறமாகி இறந்துவிட்டன. அந்த விபத்திற்குப் பின்னால் அது பாலைவனம் போலத்தான் ஆகும் எனப் பலரும் நினைத்திருந்தனர். கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விலங்குகள் குடியேறவும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனால், செடிகள் கொடிகள் இறந்தாலும் சில விலங்குகள் அந்தக் கதிர்வீச்சையும் தாங்கி தப்பிப்பிழைத்தன. 

`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை

Photo - Proyecto TREE / Sergey Gaschack

தற்போது 33 ஆண்டுகளுக்குப் பின், உக்ரைன் மற்றும் பெலாரஸ் பகுதிகளையொட்டிய செர்னோபில் பகுதியில் விலங்குகள் அதிகமாகி வருகின்றன. பழுப்புக் கரடிகள், காட்டெருமைகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், பிரிவால்ஸ்கி குதிரைகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 2019-ம் ஆண்டு, செர்னோபில் பகுதிகளில் உள்ள உயிரினங்களை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் குழு, இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) சந்தித்தனர். அந்தக் குழுவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே, ஸ்பெயின் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து 30 ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவுகளைச் சமர்ப்பித்தனர். அதில் பெரிய பாலூட்டிகள், கூடுகட்டும் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மீன்கள், பம்பிள் வகை தேனீகள், மண்புழுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் தாவர இலைச் சிதைவுகள் ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்த ஆய்வுகள், செர்னோபில் பகுதியில் பரவலான பல்லுயிர்ப் பெருக்கம் இருப்பதைக் காட்டியது. இப்போது கதிர்வீச்சின் அளவு குறைந்திருப்பதாகவும், அதனால் தாவர மற்றும் விலங்குகளின் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கை காட்டுகிறது. மேலும், பல்லுயிர்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர். 

இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து சுற்றுச்சூழல் மற்றும் ஹைட்ராலஜி மையத்தின் உதவியுடன் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பகுதியின் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. சில பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் நேரடியாகவும் ஆய்வுசெய்தனர். இந்த கேமராக்களில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமாகப் பழுப்புக் கரடிகள், ஓநாய்கள் மற்றும் பிரிவால்ஸ்கி குதிரைகள் அதிகமாகத் தென்பட்டிருக்கின்றன. செர்னோபிலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்களும் பரவலாக தென்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தவளைகள் அடர்த்தியான நிறம்கொண்டதாக இருக்கின்றன. கதிர்வீச்சில் இருந்து தன்னைப் பாதுகாத்து, அதனுடன் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை தற்போதைய தவளைகள் பெற்றுவிட்டன. 

`கதிர்வீச்சை விடவும் மனிதன்தான் ஆபத்தானவன்!' செர்னோபில் ஆய்வு உணர்த்தும் உண்மை

Photo - Germán Orizaola

இதனுடன் முக்கியமான ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். உயிரினங்களில் கதிர்வீச்சுகள் பாதிப்பை ஏற்படுத்துவதையும் உறுதிசெய்திருக்கிறார்கள். உதாரணமாக சில பூச்சி வகைகள் வழக்கமான ஆயுட்காலத்தை விடக் குறைவான ஆயுட்காலம் மட்டுமே இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அதிக கதிர்வீச்சு கொண்ட இடங்களில் வாழும் பறவைகளின் மரபணுக்களில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், கதிர்வீச்சுகள் உயிரினங்கள் பெருகுவதைத் தடுக்கவில்லை. இதுபோக அந்த மண்டலங்களுக்குள், மனித இனம் இல்லாததால்தான் பல உயிரினங்கள் குடியேறி பெருகிவிட்டன. ``கதிர்வீச்சுகளை விடவும் மனிதத் தலையீடுகள் மிக ஆபத்தானது. கதிர்வீச்சில் தங்களை தகவமைத்துக் கொண்ட உயிரினங்கள், மனிதர்கள் வாழும் பகுதியில் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் போகின்றன'" என்கிறது, அந்த ஆராய்ச்சி முடிவு. 

ஆனால், இப்போதோ உக்ரைன் செர்னோபில்லில் மனிதத் தலையீடுகளை அதிகப்படுத்துவதைச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு 70,000 சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதியைப் பார்வையிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இன்னொருபுறம் வன உயிரினங்களைக் காப்பதற்கான பணிகளிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. 

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான். ``இது கேட்க விசித்திரமாக இருக்கலாம். எதிர்காலத்தில் செர்னோபில் பகுதியை இயற்கை வாழும் வனமாக விட்டுவிடுவதுதான் சரி. இவ்வளவு பெரிய வனத்தைச் செயற்கையாக உருவாக்க முடியாது. அதனால் இயற்கையாக இருப்பதை அப்படியே விட்டு விடுங்கள்.'"

Vikatan
பின் செல்ல