Published:Updated:

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

"அரசை எதிர்பார்த்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாராமல் தாமதித்தால், அடுத்து வரும் பருவமழையிலும் தண்ணீரை நம்மால் சேகரிக்க முடியாது. தண்ணீரின்றி ஊரைவிட்டு காலி செய்யும் நிலையும் உருவாகிவிடும்."

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்
`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

ட்சங்கள் செலவு செய்து ஆயிரம் அடி வரையில் போர்வெல் அமைத்தாலும், தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் தண்ணீர் வருவதே இல்லை. வெறும் காத்து மட்டும்தான் வருகிறது என தினம் தினம் போர்வெல் அமைத்தவர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தையே புரட்டிப்போட்டுச் சென்ற கஜா புயலின்போது குறைந்த அளவு மழை பதிவானது. அதிலும், மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் புதர்கள் மண்டி தூர்வாரப்படாமல் இருந்ததால், பெய்த குறைந்த அளவு மழை நீரும் சேகரிக்கப்படவில்லை. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆறுகள், குளங்கள், கிணறுகள் என எவற்றிலும் தண்ணீர் இல்லை. மாவட்டம் முழுவதுமே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் ரூ.10 முதல் 15 வரை பணம் கொடுத்து வாங்கும் அவலநிலை கிராமங்களிலும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து இளைஞர்கள் தற்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளைஞர்கள் நற்பணி மன்றம் ஒன்றை உருவாக்கியதோடு, `நீர்நிலைகள் பாதுகாப்பு' என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அதில் அந்த கிராமத்து இளைஞர்களை ஒன்றிணைத்து, அனைவரிடமும் நிதி வசூல் செய்து அந்தப் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றிலிருந்து குளம், ஏரிகளுக்குச் செல்லும் புதர் மண்டிக்கிடந்த வாய்க்கால்கள் அனைத்தையும் தங்களது சொந்தச் செலவில் தூர்வாரி அசத்திவருகின்றனர்.

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

புதர் மண்டி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த அம்புலி ஆறு, இளைஞர்களின் முயற்சியால் இன்று புதுப்பொலிவு பெற்றுவருகிறது. இளைஞர்களிடம் பேசினோம், ``எங்கள் ஊரில் ஆறுகள், குளங்களை நம்பி விவசாயம் செய்து வந்த பலரும், தண்ணீர் இல்லாததால், விவசாயத்தைக் கைவிட்டனர். தற்போது 1200 அடி போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால், மட்டுமே தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும். எனவே, நீர்நிலைகளைத் தூர்வாரி பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றுதான் நீர்நிலைகளைத் தூர்வார முடிவுசெய்தோம். இதற்காக, வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கினோம். அதில், உள்ளூர் இளைஞர்கள் தொடங்கி வெளிநாடுவாழ் இளைஞர்கள் அனைவரையும் இணைத்தோம். தொடர்ந்து இளைஞர்கள் கூட்டம் நடத்தி விவாதித்தோம். 

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

ஆரம்பத்தில், அரசு செய்யவேண்டிய பணிகளை நாம் செய்தால், ஏதாவது பிரச்னை வருமோ என்று எண்ணினோம். இதையடுத்து ``எங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். ஆனால், நாங்கள் கொடுத்த மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகளைப் பார்ப்பதற்குக் கூட அதிகாரிகள் வரவில்லை. இனியும் அரசை எதிர்பார்த்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாராமல் தாமதித்தால், அடுத்து வரும் பருவமழையிலும் தண்ணீரை நம்மால் சேகரிக்க முடியாது. தண்ணீரின்றி ஊரைவிட்டு காலி செய்யும் நிலையும் உருவாகிவிடும். எனவே, உடனே கூட்டம் நடத்தி அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

அம்புலி ஆறுதான் எங்கள் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவந்தது. எனவேதான் அம்புலி ஆற்றைச் சுத்தம் செய்து, அதிலிருந்து குளங்களுக்கு மழைநீர் செல்லும் வாய்க்கால்களைச் சீரமைக்க முடிவு செய்தோம். அதன்படி, கடந்த வாரம் சொந்தச் செலவில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு காமராசர் காலத்தில் கட்டிய மாங்குளம் அணைக்கட்டிலிருந்து தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். ஒரு வாரத்தில் சுமார் 4 கி.மீ வரையிலும் முழுமையாகத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். தொடர்ந்து ஆற்றின் கரைகளை பலப்படுத்த உள்ளோம். கரைகளை பலப்படுத்துவதுடன், கரைகளில் மரக்கன்றுகள் நட்டு அதைப் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக உள்ளூரில் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி தண்ணீரைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

`இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்புறது வீண்!' நீர்நிலைகளைத் தூர்வார களமிறங்கிய இளைஞர்கள்

எங்களது இந்த முயற்சிக்கு வெளிநாடுவாழ் இளைஞர்கள் தேவையான நிதியுதவி அளிப்பதுடன் தொடர்ந்து எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். மேலும், தற்போது இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது மற்றும் தண்ணீர்ச் சிக்கனத்தின் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இந்த முறை பருவமழை பெய்யும்போது நிச்சயம் எங்கள் பகுதியில் மழைநீர் சேகரமாகும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல், அருகருகே உள்ள கிராமத்து இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து நீர்நிலைகளைத் தூர்வாரினால், வரும் காலங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்கமுடியும்" என்றனர். 

Vikatan