Published:Updated:

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?
`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

இந்தச் சமுதாயம் இயங்குவதே அதற்கு அடித்தளமாக நிற்கும் குடும்பப் பெண்களின் செயற்பாடுகளால்தான். அவர்களைவிடச் சிறப்பாக யாராலும் நம் நீர்த்தேவைகளைப் புரிந்திருக்க முடியாது.

கோடைக்காலத்தின்போது எவ்வளவு தூரமானாலும் யார் குடங்களைத் தூக்கிச்சென்று நமக்கான தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள்? அதை வீட்டில் யார் சேமித்து வைக்கிறார்கள்? நம் சிறுவயதில் மழை பெய்யும்போது குடங்களையும், அண்டாக்களையும் மழைநீரால் நிரப்பி வைப்பதைப் பார்த்திருப்போம். அதைச் செய்வது யார்? குடும்பத்திற்கான தண்ணீர்ப் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரிந்துவைத்திருப்பவர்கள் யார்? பல சமயங்களில் பற்றாக்குறையான காலகட்டத்தில்கூட இழுத்துப்பிடித்துக் கடைசிவரை தண்ணீர் கிடைக்கும் வகையில் நம் வீட்டில் நமக்காக நீர் மேலாண்மை செய்வது யார்? 

தண்ணீர் மேலாண்மை. இதைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அதிலுள்ள பெண்களின் பங்கு குறித்த பேச்சைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது, பேசவே கூடாது. நீர் மேலாண்மையில் இரு பாலினங்களின் பங்கும் முக்கியம் என்பதைப் பெரும்பாலும் நாம் மறந்துவிடுகிறோம். நமக்கான தண்ணீரை தேடிப்பிடித்துக் கொண்டுவருபவர்கள், இருக்கும் நீரைச் சேமித்து வைக்கவேண்டிய அவசியத்தைப் புரிந்திருப்பவர்கள், மழையின்போது ஆறுகளில் நீர் நிரம்புகிறதோ இல்லையோ நம் வீட்டு அண்டாக்களில் நீர் நிரம்புவதற்குக் காரணமாக இருந்தவர்கள் அனைவரும் நம் குடும்பத்துத் தாய்மார்களே. ஒரு நீர் மேலாண்மைத் திட்டம் வெற்றியடைய வேண்டுமென்றால் அதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம். கடந்த சில ஆண்டுகளில் அதை மறந்து செயல்படுகிறோம் என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள், முடிவுகள், அமலாக்கம், சிக்கல்கள், பயன்கள் என்று அனைத்திலுமே அவர்களின் பங்கு மிக முக்கியமானது. 

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

ஆண், பெண் இரண்டு பாலினத்தவர்களுக்கும் நீர் பயன்பாட்டில் இருவேறு பார்வைகள் இருக்கும். நீர் விநியோக முறைகளை, தத்தம் குடும்பத்திற்கான நீர் மேலாண்மையைப் பெண்கள் தாம் வாழும் வீட்டுக்கு அருகிலேயே ஏற்பாடு செய்துகொள்வதில் முனைப்பு காட்டுவார்கள். தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் அதைத் தேடிக் கொண்டுவரும் சுமை அவர்கள் தோளிலும் இடுப்பிலும்தானே விழுகின்றது. இதனால் இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் இடம் மாறுவது, உடல் நலிவடைவது, குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்னைகளை அனுபவிப்பவர்களும் அவர்களே. அந்த வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே அந்தச் சிரமங்களின்றிச் செயலாக்கக்கூடிய எளிமையான நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கமுடியும். தாய்மார்கள் அந்த வலியை உணர்ந்தவர்கள். அப்படியொரு திட்டம் வந்தால் மட்டுமே நேரம் மற்றும் உடல் உழைப்பு விரயமின்றி நீர் விநியோகத்தையும் பயன்பாட்டையும் அவர்களால் மேற்கொள்ள முடியும். பொதுவாக ஆண்கள் ஓரிடத்திலேயே இருப்பவர்கள் அல்லர். அவர்கள் பல இடங்களுக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு நீர் எங்கே கிடைக்கிறது, எப்படிக் கிடைக்கிறது போன்ற பிரச்னைகள் இல்லை. தண்ணீர் கிடைக்காமல் போகும்போதுதான் அதைத் தேடிச் செல்லும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அதை முன்கூட்டியே உணர்ந்து, ஒரு குடும்பப் பயன்பாட்டிற்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டுச் சேமித்து வைக்கும் வழக்கம் பெண்களிடம் உண்டு. 

பெரும்பாலும், பொருளாதார ரீதியிலான வியாபார ரீதியிலான விவசாயத்தில் ஆண்களின் கவனம் சென்றுகொண்டிருக்கும். ஆனால், அதிகபட்சமாகப் பெண்கள்தான் பிழைப்புக்கான விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகும் வெவ்வேறு வகையான தேவைகளைப் புரிந்து, கிடைக்கும் நீரை திறம்பட மேலாண்மை செய்து, சிக்கனத்தோடு பயன்படுத்தும் திறமையையும் அது அவர்களுக்குக் கொடுக்கின்றது. 

தண்ணீர் எங்கிருக்கிறதெனக் கண்டுபிடித்துக் கொண்டுவர வேண்டிய கடமை தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பெண்மணிகள் மற்றும் பெண் குழந்தைகளின் தலைகளிலேயே விழுகின்றது. இது அவர்களின் அதிகமான நேரத்தையும் உழைப்பையும் தின்றுவிடுவதால் அவர்களால் கல்வி, வேலை போன்றவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றது. இது, வறுமையிலிருந்து மீண்டுவருவதற்கான வாய்ப்புகளை தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டேயிருக்கிறது. 

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

இந்தப் பிரச்னையை நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. நீர் மேலாண்மையில் பெண்களின் பங்கு என்பது குடும்பங்களோடு நின்றுவிடுவதில்லை. பொருளாதார ரீதியிலான நீர்ப் பயன்பாடுகளிலும் பெண்களின் மறைமுகமான ஆனால், முக்கியமான பங்கு இருக்கவே செய்கின்றது. விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என்று அந்தப் பங்கு நீள்கிறது. உலகின் உணவு உற்பத்தியில் பாதியளவு உற்பத்திக்கு அவர்களே பொறுப்பு. அதிலும் ஆப்பிரிக்காவில் 43 சதவிகிதம் விவசாயத் தொழிலாளர்கள் பெண்களே. அதுவே இந்தியாவில் 47 சதவிகிதம். இந்திய கிராமப் புறங்களைச் சேர்ந்த பெண்களில் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஆண் விவசாயத் தொழிலாளர்களைவிடக் குறைவு. ஆண்களுக்கு ஒரு நாளைய சம்பளம் 281 ரூபாய். பெண்களுக்கு 218 ரூபாய். 

இதன்மூலம் தண்ணீருக்கும் மக்களுக்குமான தொடர்பில் பெண்களின் பங்கு குடும்பம் மட்டுமன்றி தொழில்முறையிலும் அதிகமாகவே இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் நீர் மேலாண்மைக் கொள்கைகளில் பெண்களின் பங்கு பேசப்படுவதே இல்லை. அதிலிருந்தே நீர்ப் பயன்பாட்டையும் அதை விநியோகிக்க வேண்டிய முறைமைகளையும் நாம் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நீர் மேலாண்மை தொடர்பான எந்த ஒரு கொள்கையாக, திட்டமாக இருந்தாலும் அதன் எல்லா அங்கங்களிலும் பெண்களுடைய பங்கையும் கருத்தில் எடுக்கவேண்டும். அதுதான் நம்மிடையே தண்ணீர்ப் பயன்பாடு குறித்த தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும். 

பண்பாட்டு ரீதியாகப் பார்த்தாலும் நீர்ப் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நீர்நிலைகளைப் பராமரித்ததும் கட்டுப்படுத்தியதும் பெண்களே. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் தேவைகளைப் பூர்த்தி செய்வது, மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது போன்றவையும் பெண்களின் கடமையாகவே இருந்துள்ளது. விளைச்சல் குறையும்போது, பலன் தரக்கூடிய வகையில் விவசாய முறைகளை மாற்றியமைப்பதையும் பெண்களே செய்துவந்துள்ளார்கள். இப்போதும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது நம் பக்கத்து வீட்டுக்காரர்களோடு கூடிப் பேசி ஒரு சுமுகமான புரிதலோடு கிடைக்கும் நீரைப் பகிர்ந்து ஆரோக்கியமாகப் பயன்படுத்தும் வித்தைகளை நம் வீட்டு அம்மாக்கள் செய்வதைப் பார்த்திருப்போம். நீர்நிலைகளின் நிலையை வைத்துக் கிடைக்கப்போகும் தண்ணீரை அவர்களால் மதிப்பிட முடியும். விநியோக வடிவங்களை பகுப்பாய்ந்து புரிந்துகொள்வது ஆண்களைவிடப் பெண்களுக்கு எளிதானது. நம் அம்மாக்கள் வருகின்ற தண்ணீர் லாரிகளை பார்த்தே எத்தனை லிட்டர் தண்ணீர் லாரி வருகின்றது, அதில் எவ்வளவு குடங்கள் தண்ணீர் கிடைக்கின்றன, அடுத்தமுறை லாரி வரும்வரை எத்தனை குடங்கள் தண்ணீர் தேவைப்படும் போன்றவற்றைப் பார்த்த மாத்திரத்தில் கணக்கிட்டு விடுவார்கள். வீட்டுக் குழாய்களில் குடிநீர் வாரியம் தண்ணீர் திறந்துவிடும் கால அவகாசத்தைக் கணக்கிட்டு அது எத்தனை நாளைக்கு வரும் என்பதை அம்மாக்கள் கணக்கிட்டு விடுவதை நாம் பார்த்திருப்போம். அதோடு போதுமான நீர் கிடைக்கவில்லை என்றால் அதற்காக முதலில் வீதியில் இறங்கி போராடுவதும் பெண்களே. 

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

முறையான நீர் மேலாண்மைக் கட்டமைப்புக்குள் இவற்றைச் சேர்க்க முடியாதுதான். ஆனால், தண்ணீர்ப் பயன்பாட்டை எளிமையாகப் புரிந்துகொண்டு ஒரு குழு மனப்பான்மையோடு திட்டமிடுவதில் பெண்களின் பங்கு எத்தனை சிறப்பானது என்பதை இவை நமக்குப் புரிய வைக்கின்றன. தண்ணீர் விநியோகம் மற்றும் மேலாண்மை குறித்த திட்டமிடுதல்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களோடு கலந்தாலோசித்து திட்டமிடுவது சிறப்பான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லலாம். தண்ணீர் சார்ந்த எந்தத் திட்டத்தையும் அது செயல்படுத்தப்படும் பகுதியில் வாழும் தாய்மார்களோடு கலந்தாலோசனை செய்தபிறகு கொண்டுவரலாம். அது நீர் மேலாண்மை சிறப்பாக அமைய உறுதுணை புரியும். 

பெண்கள்தான் களத்தில் நின்று சிரமப்பட்டு தத்தம் குடும்பங்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். எவ்வளவு தண்ணீர் பயன்படுகிறது, எவ்வளவு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது, எவ்வளவு பற்றாக்குறை நிலவுகிறது போன்ற விவரங்களை நாம் அவர்களிடமிருந்துதான் சேமிக்கவேண்டும். நீர் மேலாண்மை குறித்த அவர்களின் பார்வைகளையும் திறன்களையும் அரசு பயன்படுத்த வேண்டும். 

நீர் மேலாண்மையில் பெண்களின் பங்கு இருந்தால் இப்போதிருப்பதைவிடச் சிறப்பாகவே நம்மால் தண்ணீர்ப் பிரச்னைகளைக் கையாள முடியும். அதைச் செய்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய உதாரணங்களும் நம்முன் இருக்கவே செய்கின்றன. மொராக்கோவில் உலக வங்கியின் நிதியுதவியோடு நீர் மேலாண்மையில் தாய்மார்கள் பங்கெடுக்கத் தொடங்கினார்கள். அது அவர்களின் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சரிசெய்து சுத்தமான குடிநீர் கிடைக்க வழிசெய்தது. இப்போது அந்த நாட்டில் முன்பிருந்ததைவிட இருபது சதவிகிதம் அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அதேபோன்ற திட்டங்களால் தான்சானியாவில் 12 சதவிகிதம் பெண்கல்வி உயர்ந்திருக்கிறது. 

`அந்த கஷ்டத்தை உணர்ந்தவர்கள் அவர்கள்!' நீர் மேலாண்மையில் பெண்கள் ஏன் முக்கியம்?

நீர் மேலாண்மை தொடர்பான திட்டமிடுதலில், முடிவெடுப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் பங்கு இருப்பதால் ஏற்படும் பலன்களுக்கு உலகம் முழுவதுமிருந்து இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களை அடுக்கலாம். தண்ணீர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளும் கிடைக்கக்கூடிய பலன்களும் மொத்த சமுதாயத்திற்கும் பலனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்தச் சமுதாயம் இயங்குவதே அதற்கு அடித்தளமாக நின்று இயங்கும் குடும்பப் பெண்களால்தான். அவர்களைவிடச் சிறப்பாக யாராலும் நம் நீர்த்தேவைகளை புரிந்திருக்க முடியாது. அதனால், நீர் சார்ந்த திட்டமிடுதலில் அவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை நாம் உணர்ந்து அதில் பெண்களின் பங்கை உறுதி செய்யவேண்டும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு