Published:Updated:

அமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்?

அமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்?
அமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்?

செர்னோபில், புகுஷிமா என அணுஉலை விபத்துகள் அனைத்தும் உணர்த்துவது அணுக்கழிவுகளைக் கையாளுவதில் உள்ள சிக்கல்களைத்தான். இப்போது ரூனட் தீவில் உள்ள அணுக்கழிவு கிடங்கிலும் அதே நிலைதான்.

லகம் முழுவதிலும் பல அணு உலைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் மின்சாரத் தேவைக்காகவே இவை இயங்கினாலும், கூடுதல் இணைப்பாக அணுக்கழிவும் உருவாகிறது. இப்படி உருவாகும் அணுக்கழிவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளிடம் இருப்பதுகூட தற்காலிகத் தீர்வுகள்தான். இது ஒரு சிக்கல் என்றால், பல வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனைகளின்போது உருவான கழிவுகளும் தற்போது அதன் தீவிரத்தை உணர்த்தத் தொடங்கியிருக்கின்றன. தீவு ஒன்றில் சேமிக்கப்பட்ட அணுக்கழிவுகள் பசிபிக் பெருங்கடலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும் சூழல் உருவாகியிருக்கிறது.

அமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்?

பசிபிக் பெருங்கடலை மாசுபடுத்தும் அணுக்கழிவுகள்

கடந்த வாரம் பிஜி தீவில் மாணவர்களிடையே பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ், இது தொடர்பாகவும் அவர்களிடையே உரையாற்றியிருக்கிறார். அணுக்கழிவுக் கிடங்கைப் பற்றி குறிப்பிட்ட அவர் அதனால் பசிபிக் பெருங்கடல் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ரூனட் தீவில் இந்த மிகப்பெரிய அளவிலான அணுக்கழிவு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் யூனியனுக்கு அமெரிக்காவுக்கும் இடையே மறைமுகமான முறையில் போட்டி இருந்து வந்தது. இரு நாடுகளுமே அவரவர்களின் பலத்தை நிரூபிக்க ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்து வந்தார்கள்.

அந்த வகையில் அமெரிக்கா அணுகுண்டு சோதனைகளை தனக்கான பலத்தைக் காட்டப் பயன்படுத்தியது. அதற்கான இடமாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகள் அமைந்திருக்கும் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு முதல் 1958-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 67 அணுகுண்டு வெடிப்புச் சோதனைகள் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டன. ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விடவும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த கேஸ்டல் பிராவோ ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையும் அதில் அடக்கம். இந்த நடவடிக்கைகளின்போது பெரும் சக்தியோடு அணுக்கழிவுகளும் பெருமளவு உருவாகின. சில வருடங்களுக்குப் பிறகு, அதை அகற்ற அமெரிக்கா முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து 1970-களின் இறுதியில் ரூனட் தீவில் (Runit Island) இந்த அணுக்கழிவு கிடங்கு அமைக்கும் பணி தொடங்கியது.

அணுகுண்டு வெடிப்பு சோதனை நடைபெற்ற இடங்களிலிருந்து கதிர்வீச்சு தன்மை கொண்ட, மண் உட்படப் பிற கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதற்காக சுமார் 4,000 பணியாளர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர், கழிவுகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு மட்டுமே சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. பின்னர், அவை மொத்தமாக ரூனட் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கே அணுகுண்டு வெடிப்பால் தோன்றிய பள்ளத்தில் குவிக்கப்பட்டது. அதைப் பாதுகாக்கும் வகையில் 45 செ.மீ தடிமன் உடைய கான்கிரீட்டாலான கவசம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த கான்கிரீட் கவசத்தில்தான் அண்மையில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காரணமாக புளூட்டோனியம் போன்ற கதிர்வீச்சு பொருள்கள் பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் அமெரிக்கா அதை உறுதிப்படுத்தியது. இயற்கை சீற்றங்கள் காரணமாக கான்கிரீட் கவசத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது. "முன்பு நம்மால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளைப் பசிபிக் பெருங்கடல் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்" அன்டோனியோ கட்டர்ஸ். அவரிடம் பேசிய மார்ஷல் தீவு அதிபர் இந்த நிலைமை மிகவும் கவலைப்படக்கூடிய ஒன்று எனத் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்?

அணுக்கழிவுகள்... உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்!

அணு உலைகளிலிருந்து கிடைக்கும் கழிவுகளை நீண்டகாலம் பாதுகாத்து வைக்க இதுவரை நிரந்தரமான வழிகள் எதுவும் கிடையாது. பல வழிகள் நடைமுறையில் இருந்தாலும் அவை தற்காலிகமானதுதான். அணுக்கழிவுகளை கான்கிரீட் கன்டெய்னர்களில் அடைத்து வைப்பது தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது. அணு உலையில் எரிபொருள்கள் தீர்ந்த பின்னர், மீதமிருக்கும் கதிரியக்க பொருள்கள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு சில காலம் கழித்து பூமிக்குள் புதைத்து வைக்கப்படுகின்றன. இவை பல காலத்துக்கு வீரியம் இழக்காமல் அப்படியே இருக்கும் என்பது இதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. அடைத்து உள்ளே வைக்கப் பயன்படும் கான்கிரீட் எத்தனை வருடங்களுக்குப் பாதிப்பில்லாமல் இருக்கும் என்பது தெரியாது. அப்படி ஒரு வேளை பாதிப்படைந்தால் அது மிகப்பெரிய பேரழிவாகவே இருக்கும். செர்னோபில், புகுஷிமா என அணுஉலை விபத்துகள் அனைத்தும் உணர்த்துவது அணுக்கழிவுகளைக் கையாளுவதில் உள்ள சிக்கல்களைத்தான். இப்போது ரூனட் தீவில் உள்ள அணுக்கழிவு கிடங்கிலும் அதே நிலைதான். எதிர்காலத்தில் இதே நிலைமையை உலகம் முழுக்க இருக்கும் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்குகளும் எதிர்கொள்ளலாம். ஆனால், அதைச் சமாளிக்கும் திறன் இப்போது வரை உலக நாடுகளிடம் இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு