Published:Updated:

நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!
நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

போலவரத்திலும்கூட கிட்டத்தட்டப் பாதிக்கும் மேலாகப் பணிகள் முடிந்துவிட்டன. இது முடிவுபெறும் தறுவாயில்தான் மத்திய அரசு (பி.ஜே.பி) வசம் வருகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டந்த மே 25-ம் தேதி, தமிழக பா.ஜ.கவின் ட்விட்டர் பக்கத்தில் ``தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை" என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாகப் பதிவிடப்பட்டிருந்தது. அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நன்றி தெரிவித்திருந்தார். 

உண்மையிலேயே இது நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்குமா? இதனால் தமிழகத்துக்குப் பலன் கிடைக்குமா?

நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது என்ன?

பொதுவாக ஆந்திராவுக்கு உயிராதாரமாக இருப்பது கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள்தான். இதில் கிருஷ்ணா, மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகி, ஆந்திராவுக்குள் நுழைந்து இறுதியாக வங்கக்கடலில் கலக்கிறது. இந்த 1,400 கி.மீ தூரப் பயணத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறிதும், பெரிதுமாக ஒன்பது நீர்த் திட்டங்களை (அணைகள், நீர்த் தேக்கங்கள் போன்றவை) கட்டமைத்திருக்கின்றன. இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, டெல்டா பகுதிக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு. விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதிகள், ஒவ்வொரு வருடமும் வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன.

மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்திலிருக்கும் திரிம்பகேஷ்வர் பகுதியில், 1,067 மீட்டர் உயரத்தில் ஊற்றெடுக்கும் கோதாவரி, ஆந்திராவில் இறுதியாக வந்து தன் ஓட்டத்தை முடித்துக்கொள்கிறது. இந்த நதியின் பயண தூரம் 1,465 கி.மீ. கிருஷ்ணா போல அல்ல கோதாவரி. இதன்மீது அத்தனை பெரிய நீர்த் திட்டங்கள் ஏதுமில்லை என்பதால், ஆர்ப்பரித்து, காட்டுத்தனமாகச் சீறிப்பாய்ந்து ஓடும் குணம் கொண்டது. வருடத்துக்குக் கிட்டத்தட்ட 3,000 டி.எம்.சி. அளவுக்கான கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. எனவே கோதாவரியிலிருந்து, கிருஷ்ணா நதிக்குத் தண்ணீரைப் பிரித்துக்கொடுப்பதுதான் `கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு' திட்டம். 

நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

இத்திட்டத்தை பி.ஜே.பி உரிமை கொண்டாடலாமா?

கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை என்று சொல்லியிருப்பதில்தான் இங்குச் சிக்கல் இருக்கிறது. ஏற்கெனவே பட்டிசீமா நதிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ் கிருஷ்ணா - கோதாவரி நதிகள் இணைக்கப்பட்டுவிட்டன. கோதாவரி ஆற்றின் உபரி நீரை விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதிக்கு அனுப்பும் இத்திட்டம் 2015-ம் ஆண்டே நிறைவேறியுள்ளது. 2015-ம் ஆண்டு செப்டம்பரிலேயே கோதாவரி ஆற்றுநீர் கிருஷ்ணா நதியை அடைந்துள்ளது. இது தற்காலிகமான ஒன்றுதான். பட்டிசீமாவிலிருந்து 5 கி.மீ தொலைவில், பிரமாண்டமான முறையில் நதிநீர் இணைப்பிற்கான பணிகள் நடந்துவருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இப்பணிகள் முழுமையாக முடிவடையும். நடந்து கொண்டிருக்கும் ஒரு பணியை `நாங்கள் நிறைவேற்றுவோம்' என பி.ஜே.பி உரிமை கொண்டாட முடியாது. 

நதிநீர் இணைப்புத் திட்டம் (போலவரம்) என்பது எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

இந்தக் கதை, இந்தியச் சுதந்திரக் காலத்திலிருந்து தொடங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.எல். சாவேஜ் தலைமையில், அன்றைய உலகின் மிகச்சிறந்த பொறியாளர்களான கார்ல் தெர்சாகி, ஹார்ப்பர், முர்டாக் மெக்டொனால்டு ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆந்திராவில், கிருஷ்ணாவையும், கோதாவரியையும் இணைப்பதற்கான சாத்தியங்களை ஆராய்வதுதான் இவர்களின் பணி. பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் போலவரம் எனும் ஊரைத் தேர்ந்தெடுத்தனர். ``இருவேறு பாதைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் மடையை மாற்றுவது, மலைகளை உடைத்து அணையைக் கட்டுவது,  மூழ்கவிருக்கும் கிராமங்களைக் காலி செய்வது போன்ற சில கடினமான வேலைகளைக் கடந்து, இந்த இரு நதிகளையும் இணைப்பது சாத்தியம்தான்’’ என்ற அறிக்கையை அவர்கள் கொடுத்தனர். 

நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

அந்த அறிக்கை, 1980-ல் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் அறிவிப்பாக உருவெடுத்தது. அன்றைய ஆந்திர முதல்வர் தங்குத்ரி அஞ்சையா, `இந்திரா சாகர் போலவரம் திட்டம்’ என்ற பெயரில் இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். அதன்பின்னர், எந்த முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 24 வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் காலத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி (இப்போதுள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை) இந்தத் திட்டத்தைத் தூசு தட்டினார்.

அதாவது போலவரம் எனும் பகுதியில் ஒரு மிகப்பெரிய நீர்த்தேக்க அணையைக் கட்டுவது. 150 அடி உயரம் உள்ள அதில், பாய்ந்துவரும் கோதாவரி நீரைச் சேமித்துவைத்து, பின்னர் இடம் மற்றும் வலமாக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்களில் புவிஈர்ப்புச் சக்தியின் அடிப்படையில் அந்த நீரைப் பாய்ச்சி, அதைக் கிருஷ்ணாவோடு இணைத்து, ஆந்திராவின் மூலை முடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. 2004-ல் இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவாக 14,000 கோடி ரூபாய்களை ஒதுக்கி, வேலைகளை ஆரம்பித்தது ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. இந்தக் காலகட்டத்தில்தான் நதிநீர் இணைப்புப் பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின. 

நதிநீர் இணைப்புக்காகக் கால்வாய் வெட்டும் பணியில் 80 சதவிகிதப் பணிகள் ராஜசேகர ரெட்டியின் காலத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டன. எதிர்பாராதவிதமாக ராஜசேகர ரெட்டியின் மரணம், அதைத் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆந்திரா - தெலங்கானா பிளவு எனப் பல பிரச்னைகளின் காரணமாக இந்தத் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. ஆந்திரா - தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், போலவரம் நீர் இணைப்புத் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்கான முழுச் செலவையும் தானே ஏற்பதாகக் கூறியது. 2014-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பேற்றதும் மிகத் துரிதமாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். முதலில் மொத்தத் திட்டத்துக்கான செலவுத்தொகையாக 40,000 கோடி ரூபாய் வேண்டும் என்றவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் அதை 60,000 கோடியாக அதிகப்படுத்திக் கேட்டார். (இதில் சந்திரபாபு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கொஞ்சம் அதிகமாக வைக்கப்பட்டன) போலவரத்திலும்கூட கிட்டத்தட்டப் பாதிக்கும் மேலாகப் பணிகள் முடிந்துவிட்டன. இது முடியும் தறுவாயில்தான் மத்திய அரசு (பி.ஜே.பி) வசம் வருகிறது. 

நதிநீர் இணைப்பெல்லாம் இருக்கட்டும்... முதலில் இதைச் செய்யுங்கள் கட்கரி!

போலவரம் திட்டம் முடிவுபெறக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ஆகும் என்ற நிலையில், அதற்கிடையில் `பட்டீசீமா ஏற்றுப்பாசனம்’ (Pattiseema Lift Irrigation) எனும் புதுத் திட்டத்தை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு. போலவரம் கிராமத்துக்கு முன்னர் பட்டீசீமா என்ற இடத்தில் ஒரு பெரிய நீரேற்று நிலையத்தை நிறுவினார். மிகப் பெரிய அளவில் மொத்தம் 24 பம்புகள் அங்கு நிறுவப்பட்டன. கோதாவரியிலிருந்து ஒவ்வொரு பம்பும் 354 கியூசெக்ஸ் அளவிலான நீரை உறிஞ்சி, 12 பைப்களின் வழியே போலவரம் வலது கால்வாயில் கொண்டு சேர்க்கும். அந்தக் கால்வாயில் போகும் நீர், பவித்ரசங்கமம் என்னுமிடத்தில் கிருஷ்ணாவோடு கலந்து, கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்குப் பாயும். இந்த நீரேற்று நிலையம் ஐந்து மாதம் 15 நாள்களில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2015-ம் வருடம் 8.98 டி.எம்.சி. கோதாவரி நீர் கிருஷ்ணாவுக்குத் திருப்பி விடப்பட்டது. 2016-ல் 15 டி.எம்.சி. தண்ணீரும், இந்த வருடம் இப்போதுவரை 28 டி.எம்.சி. தண்ணீரும் கிருஷ்ணாவுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆந்திரா கொடுக்க வேண்டிய தண்ணீரையே முழுமையாகக் கொடுப்பதில்லை. இந்த ஆண்டும் கொடுக்கவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்வதுபோலவே கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு நிறைவேற்றினாலும், தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீர் கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான். இந்தத் திட்டம் முடியவே இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இப்போது முதல்வராகப் பதவியேற்கும் ஜெகன்மோகன் ரெட்டியும் தமிழகத்திற்குச் சாதகமாக முடிவெடுப்பாரா என்பது சந்தேகமே. அதனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், நமக்குத் தண்ணீர் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். இதற்காக பி.ஜே.பி அரசை மட்டும் குற்றம் சொல்லவில்லை. இப்போது தமிழகமே வறட்சியில் இருக்கும் நிலையில், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவை முறையாகப் பெற்றுத் தந்துவிட்டு, அதன் பின்னர் திட்டத்தை நிறைவேற்றி தண்ணீரைக் கொண்டு வாருங்கள். காரணம், அதெல்லாம் எதிர்காலத் திட்டங்கள். இது தற்போதைய தேவை.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு