Published:Updated:

453 வகை தாவரங்கள், 92 வகை பட்டாம்பூச்சிகள்... கோவை நகருக்குள் இப்படியொரு குளம்!

453 வகை தாவரங்கள், 92 வகை பட்டாம்பூச்சிகள்... கோவை நகருக்குள் இப்படியொரு குளம்!
453 வகை தாவரங்கள், 92 வகை பட்டாம்பூச்சிகள்... கோவை நகருக்குள் இப்படியொரு குளம்!

நகருக்கு நடுவே இந்தக் குளம் இத்தனை உயிரினங்களுக்கு இடம் தருவதோடு, பல்லுயிர் சமநிலையைப் பேணவும் உதவிவருகிறது.

கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ளது சிங்காநல்லூர் குளக்கரை. 288 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மீன்கள், ஆமைகள், ஊர்வனங்கள் ஆகியவை இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இங்கே பல பல்லுயிரிகள் வாழ்வதால் கடந்த 2017-ல் கோவை மாநகராட்சி இதைப் பல்லுயிரி மண்டலமாக அறிவித்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. மாநகராட்சியுடன் நகர்ப்புற பல்லுயிரி பாதுகாப்பு மற்றும் கல்வி மையமும் (CUBE) இணைந்து இயற்கை சார்ந்த கல்வியை இங்கே முன்னெடுத்து நடத்திவருகின்றனர். பறவைகள், பட்டாம்பூச்சிகள், ஊர்வனங்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பைப்போல், தாவரங்கள் கணக்கெடுப்பும் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இங்கே மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள், மரங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளைக் கவரக்கூடிய செடிகள் இருப்பதாகத் தற்போது தெரியவந்துள்ளது. 

தாவரங்கள் பற்றிய ஆய்வை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், கோவை மாநகராட்சி மற்றும் பல்லுயிரி பாதுகாப்பு அமைப்பு சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2019 ஜனவரி மாதம் வரை நடத்தினார்கள். இந்திய வன மரபியில் மற்றும் மரப்பெருக்கு நிறுவன பல்லுயிர் தலைவர் குண்ணிகண்ணன் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``இக்குளமானது 2017-ஐ காட்டிலும் 2019-ல் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இரு வருடங்கள் ஆராய்ச்சியில் மூலிகைத் தாவரங்கள், மரங்கள், அதிக நாள்கள் வளரக்கூடிய மரங்கள் எனப் பிரித்து ஆய்வை மேற்கொண்டோம். அதன் அடிப்படையில் 453 வகையான தாவரங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. அதில் 328 தாவர வகைகள் மருத்துவ குணமும் 46 தாவரங்கள் தீவனத்துக்காகவும் 86 வகையான தாவரங்கள் அழகுக்காகவும் உள்ளன. இதில் உப்பிலி, நச்சறுப்பான், செங்காந்தள், அம்மம், துரட்டி போன்ற மூலிகைச் செடிகளும் அடங்கும். நாங்கள் ஆய்வு நடத்தும்போதே தாவரங்களின் மாதிரிகளைச் சேகரித்து `ஹெர்பேரியன் முறையில்' பதப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த ஆய்வறிக்கையானது மத்திய அரசின் தகவல் களஞ்சியத் திட்டத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது 100 ஆண்டுகள்வரை இருக்கும். பிற்காலத்தில், சிங்காநல்லூர் குளக்கரையில் இந்தத் தாவரங்கள் இருந்ததற்கு அடையாளமாக அவை இருக்கும். மூலிகை அதிகம் கொண்ட பகுதியாக இருப்பதால் பாதுகாப்பது அவசியமாகும். கழிவுநீர், மாசுபட்ட குப்பைகளை இங்கு கொட்டுவதால் குளத்தில் வாழும் மீன்கள் இறக்கக் காரணமாகிறது. அதைமட்டும் சரிசெய்தால் இங்குள்ள பல்லுயிரிகளைக் காப்பாற்றலாம்" என்கிறார்.

453 வகை தாவரங்கள், 92 வகை பட்டாம்பூச்சிகள்... கோவை நகருக்குள் இப்படியொரு குளம்!

தாவரங்கள் எண்ணிக்கை

மூலிகைத் தாவரங்கள்: 328

பூண்டுத் தாவரங்கள்: 19

புதர் தாவரங்கள்: 56

இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள நகர்ப்புற பல்லுயிரி பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தை (CUBE) சார்ந்த ஜோசப் அவர்களிடம் பேசினோம். "மியாவாக்கி முறையில் குறுங்காட்டை உருவாக்க மாநகராட்சியும் தன்னார்வலர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 453 தாவரங்களில் 75 சதவிகிதம் மூலிகைத் தாவரங்கள் ஆகும். குப்பை என்று தூக்கிப்போட்ட தாவரங்கள் இன்று வளர்ந்து நல்ல சூழலைக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இயற்கை பற்றிய புரிதல்களை ஏற்படுத்தக் களப்பயணங்களை ஏற்படுத்திவருகிறோம். அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பங்கு கொள்ளலாம். இது மாதத்துக்கு இருமுறை நடக்கும். இப்பயணத்தில் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரை வரவழைத்துச் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7 மணிமுதல் 10 மணிவரை நடக்கிறது. குளத்தைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டருக்கு நடைப்பயணம். அதன்மூலம் இயற்கையைப் புரிய வைத்தல், பறவைகளையும் பட்டாம் பூச்சிகளையும் காணுதல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.

453 வகை தாவரங்கள், 92 வகை பட்டாம்பூச்சிகள்... கோவை நகருக்குள் இப்படியொரு குளம்!

குளத்தைச் சுற்றி வலசைச் செல்லும் பறவைகள் இங்கு வருவது மிகவும் ஆச்சர்யம்தான். கூழைக்கடா (pelicans), கரண்டிவாயன் (Eurasian spoon bill), பாம்புத்தாரா(oriental darter), வெள்ளை அரிவாள் மூக்கன் (black headed ibis), கறுப்பு அரிவாள் மூக்கன் (black ibis) போன்ற பறவைகளை இக்குளத்தில் பார்க்க முடியும். மேலும், வலசை செல்லும் காலத்தில் 42 பறவைகளை இங்கு பதிவு செய்திருக்கிறோம். மேலும் இக்குளத்தைக் காக்க மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், தடையைமீறி மீன்பிடிப்பதன் மூலம் சில உயிரினங்கள் அழியவும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் பறவைகளையும் வேட்டையாடுகிறார்கள். கழிவுநீரைக் குளத்தினுள் கலப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று பல காரியங்களைச் செய்கிறார்கள். இதை மாநகராட்சி நிர்வாகம் கருத்தில்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களின் கோரிக்கையாக உள்ளது.

இங்குள்ள பட்டாம்பூச்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆனந்த் அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், "இந்தக் குளத்தில் 92 வகையான பட்டாம்பூச்சிகளைப் பதிவு செய்திருக்கிறோம். மேற்குத்தொடர்ச்சி மலையில் இல்லாத பட்டாம்பூச்சி (black spotted pierrot) வகை ஒன்றை இங்கு பதிவுசெய்திருக்கிறேன். சில சமூக விரோதிகளால் சில உயிரினங்கள் பலியாகின்றன. அவசியமில்லை என்று ஒருசில தாவரங்களுக்குத் தீ வைப்பதால் அதிலுள்ள பட்டாம் பூச்சிகளின் முட்டைகள் எரிந்துவிடுகின்றன. இப்படிச் செய்வதால் அந்த உயிரினத்தின் வகையைத் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது" என்கிறார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு