Published:Updated:

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

க.சுபகுணம்

வன உரிமைச் சட்டப்படி என்னென்ன அம்சங்கள், உரிமைகள் பழங்குடிகளுக்கு வழங்கப்படுகின்றனவோ அனைத்துமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுடைய நிலங்களின் எல்லைகள், சர்வே எண், பட்டா எண் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!
மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு வாக்குறுதிகள் பாரதிய ஜனதா கட்சியால் கொடுக்கப்பட்டன. தேர்தலுக்கு முன்னும்கூட பல பிரச்னைகளில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. தேர்தல் முடிந்து வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இனி செய்துகொடுத்த சத்தியங்களை நிறைவேற்ற வேண்டிய நேரம். மக்களவைத் தேர்தலில் பட்டியல் பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்திய வன உரிமைச் சட்டத்தின்படி பழங்குடியின மக்களின் வன உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் முன்வைத்த வாக்குறுதியே. அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றும்போது கருத்தில் எடுக்கவேண்டிய சில முக்கியமான அம்சங்களை அலசுவோம். அவையனைத்துமே லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வன உரிமைப் பாதுகாப்பில் ஆளுங்கட்சி பூர்த்தி செய்யவேண்டியவை. 

வன உரிமைப் பாதுகாப்பின் முதல் கட்டமாக உரிமை மறுக்கப்பட்ட 19 லட்சம் மனுக்கள் கவனிக்கப்பட வேண்டும். பிப்ரவரி 13-ம் தேதி பழங்குடிகள் வெளியேற்றத்திற்கு மத்திய அரசு தற்காலிக தடை உத்தரவு வாங்கியது. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை மாதம் வரவுள்ளது. அந்த விசாரணையின்போது மறுக்கப்பட்ட உரிமைகளைத் திரும்பப் பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் மத்திய அரசு மூன்று முக்கிய விஷயங்களை முன்வைக்க வேண்டும்.  

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள பழங்குடிகள் வெளியேற்ற உத்தரவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும். 

மையப்படுத்தப்படாத, பரவலாக்கப்பட்ட நிர்வாக முறையின் மூலமாக மறுக்கப்பட்ட மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மற்ற காரணங்களுக்காகக் காட்டு நிலத்தைப் பயன்படுத்தக் கோரிய மனுக்களும் அது தொடர்பான வழக்குகளும் அப்படியே நிலுவையில் வைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் இந்திய வன உரிமைச் சட்டம் முற்றிலுமாக அமல்படுத்தப்பட்ட பிறகே அவை விசாரிக்கப்பட வேண்டும். கடைசிக்குச் சமூகங்களின் உரிமை கோரிய மனுக்கள் உறுதிசெய்யப்படும் வரையாவது பொறுமை காக்கவேண்டும். 

நிர்வாகங்கள் தனிமனித மனுக்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், தனிமனித உரிமை மனுக்களைவிடச் சமூகங்களின் உரிமை கோரும் மனுக்களில் கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால் சமூக மனுக்கள் குறைந்தபட்சம் 15 லட்சம் வனம் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வில் பயனளிக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தில் பங்கு வகிக்கும் நாற்பது மில்லியன் ஹெக்டேர் நிலம் பாதுகாக்கப்படும். அதனால் இந்த நிலத்தைச் சார்ந்துள்ள 1,70,000 பழங்குடி கிராமங்கள் பயன்பெறும். 

வன உரிமைச் சட்டப்படி என்னென்ன அம்சங்கள், உரிமைகள் பழங்குடிகளுக்கு வழங்கப்படுகின்றனவோ அனைத்துமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுடைய நிலங்களின் எல்லைகள், சர்வே எண், பட்டா எண் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். உரிமைகள் பதிவு செய்யப்பட்டால்தான் பழங்குடியின உரிமைகள் தொடர்பான நிர்வாகச் செயற்பாடுகள் முழுமையடையும் என்று குறிப்பிட்டுள்ளது பழங்குடியின அமைச்சகம். அப்போதுதான் அவர்களால் நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறமுடியும். தங்கள் நிலத்தில் விளையும் பயிர்களுக்குக் காப்பீடு இழப்பீட்டுத் தொகைகளைப் பெறமுடியும். 

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

தங்கள் உற்பத்திக்குச் சரியான விலையைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் அவர்களிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு விற்கிறார்கள். இவற்றைக் களைய வேண்டுமென்றால் முதலில் அவர்களின் உரிமைகள் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் இந்தச் செயற்பாடு முழுமையடையும். அதேசமயம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு அவர்களுக்கும் அதே பதினெட்டு சதவிகிதம்தான் என்ற நிலையில் இருப்பது சரியல்ல. அதில் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

வன உரிமைப் பாதுகாப்பில் சமூக உரிமைகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும். அதுதான் கிராம சபைகளுக்கு முழு அதிகாரத்தையும் வழங்குகின்றது. உரிமை கோரும் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம், உற்பத்தி, தற்சார்பு, சூழலியல் பாதுகாப்பு என்று அனைத்திலும் அந்தக் கிராம சபைதான் முக்கியமானது. 

உரிமைகளை அங்கீகரிக்கும் கிராம சமைகளின் அதிகாரங்கள் மிக முக்கியமானது. அதன் அதிகாரம் வன உரிமைகளை வழங்குவதோடு நிற்கவில்லை. கிராம மக்கள் வன நிலங்களை அதன் வளங்களைப் பயன்படுத்துவது, அதை நிர்வகிப்பது என்று அனைத்திலுமே பங்கு வகிக்கின்றது. ஆனால், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் கிராம சபைகளின் அதிகாரங்கள் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. வன உற்பத்திப் பொருள்கள், வன வளங்கள் ஆகியவற்றின் மீதான கிராம சபைகளின் அதிகாரங்கள் வனத்துறையால் பல இடங்களில் பிடுங்கப்பட்டுவிட்டன. இந்திய வன உரிமைச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துள்ள இந்த விஷயங்களில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால், கிராம சபைகளின் அதிகாரம் வன உரிமைச் சட்டத்தின் கவசம் போன்றது. 

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

இந்தச் சட்டம் வந்ததிலிருந்து இன்று வரை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாழும் மக்களின் ஆயிரக்கணக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் மனுக்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. வன உரிமைச் சட்டப்படி எந்த வகையான காடாக இருந்தாலும் சரி (தேசியப் பூங்கா, சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காடுகள் என்று எதுவாக இருந்தாலும்) அங்கு இந்த உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். 

ஆனால், நடைமுறையில் ஒரு சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் அப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லை. நியமகிரி, அதிரப்பள்ளி என்று வன ஆக்கிரமிப்புகளை அழிவுகளைத் தடுத்து நிறுத்திய போராட்டங்களில் முக்கிய ஆயுதமாக விளங்கிய சட்டத்தைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதல்ல. மத்திய அரசு இந்தச் சட்டத்தை நாட்டின் அனைத்து வனப்பகுதிகளிலும் அமலாக்கவேண்டும். அமலாக்குவதோடு நிற்காமல் அது தொடர்பான அதிகாரிகளுக்குப் பயிற்சியும் அளிக்கப்படவேண்டும். இன்னமும் இந்தச் சட்டத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலே அரசு அதிகாரிகளில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். அதன் அம்சங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்கள், அந்தச் சவால்களைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் என்று அனைத்திலும் முறையான பயிற்சி அளிக்கப்படவேண்டும். யாருடைய அறியாமையும் எளிய மக்களின் உரிமைகளுக்குப் பாதகமாக வந்துவிடக் கூடாதென்பதில் மத்திய அரசு மிகக் கவனமாக இருக்கவேண்டும். அதேசமயம், இதில் தேவைப்படும் அளவுக்குப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். 

மீண்டும் வாய்ப்பளித்த பழங்குடிகள்... பிரச்னைகளைத் தீர்க்குமா புதிய அரசு?!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசு ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். அது இரண்டு அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க வேண்டும். ஆம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் பழங்குடியின அமைச்சகமும் வன உரிமைச் சட்டம் குறித்துத் தொடர்ச்சியாக மோதிக்கொண்டே இருக்கின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தச் சட்டத்தை மழுங்கடிப்பதிலேயே குறியாக இருந்துவந்தது. இனி அப்படியில்லாமல் இரண்டு அமைச்சகங்களும் இணைந்து இந்தியப் பழங்குடிகளின் வன உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஆவன செய்யவேண்டும். போட்டி போட்டுச் செயல்படுவதைவிட ஒருங்கிணைந்து செயல்பட்டால் பலன்கள் அதிகம் என்பதை மத்திய அரசு உணர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும். 

பழங்குடியின மக்களின் வனம் சார்ந்த உரிமைகள் வனப் பாதுகாப்புக்கு எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். மத்திய அரசும் அதை உணர்ந்து தன் வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நம்பி 38 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை ஆளும் கட்சி காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikatan