Election bannerElection banner
Published:Updated:

'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்

'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்
'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்

செல்போன் தொடர்பு கிடைக்காத இடங்களில்கூட, நம் மொழியைப் பயன்படுத்தலாம், அதனால் விசில் மொழியை அழிய விடாதீர்கள் என்பதுதான் அம்மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.  

``ஹேய்” - ஒரு விசில்
"என்ன?” - இதற்கு வேறொரு விசில்
``இருட்டுறதுக்குள்ள வா” - மீண்டும் விசில்
``சரி வர்றேன்..." இதற்கு பதில் விசில்
``பார்த்து பத்திரமா வா...” - மீண்டும் விசில்
"சரி..." - பதில் விசில்... இதுதான் அந்த மக்களின் விசில் மொழி... அவர்களின் கலாசாரத்தைப் பறைசாற்றத் தனித்துவமாக இன்றும் நிலைத்து நிற்பது இந்த மொழியால்தான்.

'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்

எத்தனை நாள்களாக இந்த மொழியைப் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த மக்களுக்கு தெரியாது. துருக்கியில் உள்ள வட மாகாணத்தில் அழகிய பான்டிக் (Pontic) மலைப்பிரதேசத்தில் உள்ள குஸ்கோய் (Kuşkoy) மக்கள்தான் இந்த 'விசில்' மொழியைப் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு எல்லாவற்றிற்குமே விசில் மொழிதான். மொத்தம் 250 வகையான விசில் சப்தம். ஒவ்வொரு தினுசு விசிலுக்கும் ஒவ்வோர் அர்த்தம். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே விசில் மொழிகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

முஜாஸிஸ் கொக்கெக் (Muazzez Kocek) 46 வயதான பெண்மணிதான் மிகச்சிறந்த மொழி பேசுபவராகக் கொண்டாடப்படுகிறார். அவரது விசில் பரந்த தேயிலைப் பகுதிகள், பழத்தோட்டம் ஆகியவற்றில் பல மைல் தூரங்களுக்குக் கேட்கிறது. 2012-ம் ஆண்டு துருக்கியின் ஜனாதிபதி, ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குஸ்கோயிக்கு சென்றபோது, அவரை வரவேற்றது, முஜாஸிஸ் கொக்கெக் எனும் பெண்தான். "எங்கள் கிராமத்துக்கு வருக!" என்று விசில் மொழி மூலம் வரவேற்றபோது, ஜனாதிபதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இந்த மொழியை 'பறவைகளின் மொழி' என்று அழைக்கிறார்கள், அந்த மக்கள். துருக்கி மொழியின் சொற்களையே அதிகமாகப் பயன்படுத்தி இந்த மொழியின் மூலம் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த மொழி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த மக்களால் பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக விவசாய சமூக மக்கள் கால்நடை வளர்ப்புக்கு இந்த மொழியை அதிகமான அளவில் பல காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன்களின் வருகைக்கு முன்னரே தொலைத்தொடர்புக்காக விசில் மொழியை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். 

'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்

Pictures -  TurkinesiaNET

இன்றும் 10,000-க்கும் அதிகமான மக்கள் பறவை மொழியைப் பேசிவருகிறார்கள். ஆனால், இப்போது அதிகமான செல்போன்களின் பயன்பாட்டால் இம்மொழியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பறவை மொழி அழியும் என்கிறார்கள், மொழி ஆர்வலர்கள். 

முஜாஸிஸ் கொக்கெக் "இது நம் பாரம்பர்யம். நாங்கள் அதைப் பாதுகாக்க வேண்டும். அதைக் காக்கத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்" என்று தன் மக்களுக்குக் கோரிக்கையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருக்கிறார். முஜாஸிஸ் கொக்கெக் 6 வயதில் தன் தந்தையுடன் வயலில் இறங்கி வேலை செய்து வருகிறார். அப்போதிருந்தே பறவை மொழியைப் பயன்படுத்தி வருகிறார். இதைத் தன் மூன்று மகள்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரின் நடுக்குழந்தைக்கு மட்டுமே விசில் மொழி நன்றாகத் தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தை துருக்கி தேசியகீதத்தையே விசில் மொழி மூலம் பாடுகிறது. மற்ற இருவருக்கும் அவ்வளவாக விசில் மொழி பிடிபடவில்லை. 

இதேபோல கிரீஸ், மொசாம்பிக், மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளிலும் தொடர்பு கொள்வதற்கு பறவை மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் துருக்கி மக்கள் பேசும் மொழிக்குத் தனி வரவேற்பு உண்டு. இம்மொழியைப் பாதுகாக்க குஸ்கோய் கிராம மக்கள் 1997-ம் ஆண்டு முதல் 'பறவை மொழி கலாசார கலைவிழா'வை நடத்துகிறார்கள். அவ்விழாவில் பறவை மொழியைச் சரியாகப் பயன்படுத்தி பேசுபவரைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கி வருகிறார்கள். இக்கிராமத்தில் தங்கும் விதிகள் ஏதும் இல்லை. அதனால் கலைவிழா நேரத்தில், தங்களது கிராமத்தில் உள்ள பள்ளியில் தனியாக அறை ஒதுக்கி, சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றனர்.      
2017-ம் ஆண்டு, "பறவை மொழியை" அருகிவருவதால் அவசர பாதுகாப்பு தேவைப்படும்  பாரம்பர்ய மொழியாக, ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரங்களுக்கான அமைப்பு அறிவித்தது. அப்போதே, செல்போன்களால்தான் இம்மொழி அழிந்து வருவதாகவும் குறிப்பிட்டது ஐ.நா சபை. 

'விசில் ஒலிதான் எங்களின் மொழியே!' மொழியை மீட்கப் போராடும் மலைவாழ்மக்கள்

ஆனால், அந்தக் கிராம மக்கள், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தங்களது மொழியை அழியாமல் பாதுகாத்துக்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதன் முயற்சியாகக் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்குச் சிறப்பு பயிற்சியாக விசில் மொழி கற்றுக் கொடுக்கும் பயிற்சி நடைபெற்று வருகிறது. இம்மொழிக்காகத் தனி அகராதியே இருக்கிறது. முதல் பயிற்சியாக நாக்கை மடித்து, சுவாசத்தை நிறுத்தி மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னர்தான் அகராதிப்படி மொழியைப் பேசக் கற்றுக்கொள்கிறார்கள். மின்சாரம் உள்ளவரை தொலைபேசி பயன்படலாம். ஆனால், உங்கள் மூச்சு உள்ளவரை நம் மொழி பயன்படும் என்பது அவர்களது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். செல்போன் தொடர்பு கிடைக்காத இடங்களில்கூட, நம் மொழியைப் பயன்படுத்தலாம், அதனால் நம் மொழியை அழிய விடாதீர்கள் என்பதுதான் அந்த மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.  

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு