Published:Updated:

`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!
`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதுபோல் இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவோம் வாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரம் நடுவோம், மழை பெறுவோம். 

இந்த வாசகத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இன்றைய தேதியில் ஒருவர் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேவை என்று இறங்கிவிட்டாலே அவர் முதலில் செய்ய வேண்டியதாகப் பரிந்துரைக்கப்படுவது மரம் நடும் வேலையைத்தான். அரசியல்வாதிகளும்கூட இப்போதெல்லாம் லட்சக்கணக்கான மரங்களை நட்டோம், கன்றுகளை வழங்கினோம் என்று அடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. 

உண்மையிலேயே மரம் நட்டால் மழை வருமா? 

மழை வருவதால் மரம் வளர்கிறதா, மரம் வளர்ப்பதால் மழை பெய்கிறதா? 

முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதுபோல் இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். குழப்பத்திலிருந்து தெளிவு பெறுவோம் வாருங்கள். 

ஒவ்வொரு மரத்திலும் இலைகள் இருக்கும். அந்த இலைகளில் துளைகள் இருக்கும். துளைகள் என்றால் ஓட்டைகள்தானே என்று இலைகளில் எங்கே ஓட்டைகளைக் காணோமென்று தேடத் தொடங்கிவிடாதீர்கள். அது நுண்ணோக்கியில் பார்த்தால் மட்டுமே தெரிந்துகொள்ளும் அளவில் மிக நுண்ணியதாக இருக்கக்கூடிய நுண்துளைகள். அது இலைகளில் மட்டுமில்லை, மரத்தின் தண்டுகளிலும் இருக்கும். விளக்க எளிமையாக இருப்பதற்காக நாம் இப்போதைக்கு இலைகளை வைத்தே பேசுவோம். அந்த நுண்துளைகளின் மூலம்தான் மரம் தனக்குத் தேவையான வாயுக்களை கிரகித்துச் சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது. 

இலைகளிலுள்ள துளைகள் மரம் சுவாசிப்பதற்கு மட்டும் உதவுவதில்லை. மரங்களின் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. என்ன, மரங்களுக்கு வியர்க்குமா? 

`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

கேட்பதற்கே விசித்திரமாக இருக்கின்றதா! ஆம், மரங்களுக்கும் வியர்க்கும். நம் உடலிலிருந்து ஏன் வியர்வை வடிகின்றது? மனித உடல் வியர்வையை வெளியேற்றுவதன் மூலம் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்கின்றது. அதுபோலத்தான் மரங்களும். மரங்கள் தாம் உறிஞ்சும் நீர்ச் சத்து முழுவதையும் வைத்துக்கொள்வதில்லை. அதைத் தன் ஆற்றல் தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாக வெளியேற்றிவிடுகின்றன. அப்படி வெளியேறும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்துகின்றது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும் மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. ஆனால், இந்தச் செயல்முறை மழையாக மாறுவதற்குத் திரும்பிய பக்கமெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே போனால் மட்டும் போதாது. 

மரங்கள் மழையைக் கொடுக்க வேண்டுமென்றால், நமக்குத் தேவை காடுகள். நகரங்களில் வெயில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும். அதிலிருந்து தப்பிக்க நகரவாசிகள் தேர்தெடுக்கும் விஷயங்களில் சமீபகாலமாக அதிகமாகியுள்ள ஒன்று காடுகளுக்குப் பயணிப்பதும் மலையேற்றம் மேற்கொள்வதும். இங்கும் அதே வியர்வைதான். அங்கும் அதே வியர்வைதான். பின்னர் ஏன் மலையேற்றம் செல்கிறார்கள். எல்லாம் அங்கு கிடைக்கும் குளிர்காற்றைச் சுகிப்பதற்குத்தான். அது எப்படி, நகரங்களில் வெப்பம் தாங்காமல் நாம் தவிக்கும்போது அங்கு மட்டும் அவ்வளவு குழுமையாக இருக்கலாம்! என்ன செய்வது அதுதான் காடுகளின் மகிமை. 

ஒற்றை மரம் ஒரு நாளைக்குத் தோராயமாகச் சுமார் 300 லிட்டர்கள் வரை தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. ஒரு மரத்துக்கே சில நூறு லிட்டர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள் அது ஒரு காடு. அங்கு எத்தனை ஆயிரம் மரங்கள் இருக்கின்றன! அத்தனை ஆயிரம் மரங்களும் வியர்வை சிந்தும்போது அந்தக் காற்று எவ்வளவு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்படித்தானே இருக்கிறது. அமேசான் காட்டில் நினைத்த நேரமெல்லாம் மழை பெய்யும் என்று கூறுவார்கள். சொல்லப்போனால், அங்கிருக்கும் மரக்கூட்டங்கள் வெளியிடும் நீரைச் சேமித்து வைக்க முடியாமல், "இந்தாங்கடா உங்க தண்ணிய நீங்களே வச்சுக்கங்க" என்ற பாணியில் மேகமே கொட்டித் தீர்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

மரங்கள் எப்போதுமே தனக்குத் தேவையான நீரைவிடப் பல மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக்கொள்ளும். அந்த உபரி நீர் அவ்வளவும் வெளியாகி ஈரப்பதமாகக் காற்றில் கலந்துவிடுகிறது. உதாரணத்துக்கு ஒரு மரம் 10,000 லிட்டர்கள் நீரை உறிஞ்சினால் அதில் அதற்குத் தேவையான நீர் என்னவோ ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர்கள் மட்டும்தான். அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் 8,000 லிட்டர்களை காற்றுக்குக் கொடையளித்துவிடும். அந்த உபரி நீர்தான் காற்றைக் குளிர்வித்து நம்மையும் குளிர்விக்கிறது. அந்த உபரி நீரைக் கிரகித்துக்கொண்டுதான் மேகங்களும் மழையை நமக்குக் கொடையளிக்கின்றன. 

சரி, அப்படியென்றால் மரங்களை நட்டால் மழை பெய்துவிடுமா! அப்படிப் பெய்யும் என்றால், நம் நாட்டின் நடிகர்களும் அரசியல்வாதிகளும் நட்டுவைத்த மரக்கன்றுகளுக்கு இந்நேரம் எவ்வளவு மழை பெய்திருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வற்ற வற்றச் சுரக்கும் தண்ணீர் சுரங்கமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்! 

ஒவ்வோர் ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு அ.தி.மு.க-வினர் 60 லட்சம், 70 லட்சம் என்று நட்டுக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வினர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கு 80 லட்சம், 90 லட்சம் என்று நட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக மேலும் பல சிறு குறு கட்சிகள் சில பல லட்சங்களில் மரங்களை அவ்வப்போது நடுகிறார்கள். இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேறு மரக்கன்றுகளை நட்டு செல்ஃபி எடுத்துப் போடுங்கள் என்று சொல்லியுள்ளார். பொதுவாக 100 மரக்கன்றுகளை நட்டால் அதில் ஐம்பது முதல் அறுபதுவரைதான் முழுமையாகப் பிழைத்து வளரும். அரசியல் கட்சிகளும் சில நடிகர்களும் இதுவரை நட்ட மரங்களைக் கணக்குப் போட்டு அதில் பாதியைத் தேடிப் பார்த்திருந்தால்கூட இந்நேரம் தமிழகம் முழுவதும் கானகச் சோலைகளாக அல்லவா காட்சியளித்திருக்க வேண்டும். எங்கே சென்றன அந்தக் காடுகள், எங்கே சென்றன அந்த மரங்கள்? 

`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

வடிவேலு காமெடியில் வரும் கிணற்றைக் காணோம் என்ற கதையாகத்தான் போய்விடுகிறது இவர்கள் நட்ட மரத்தைக் காணோம் என்ற செய்திகளும். இந்த மரம் நடும் திருவிழாக்களை அரசியல் கட்சிகள் ஒருவித பிரசார யுக்தியாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாம் செய்த கொலைகளுக்கு ஒருவிதப் பிராயச்சித்தமாகவும்தான் செய்துவருகின்றன. உண்மையில் மழை வேண்டுமென்றால், மரங்கள் வளர்ப்பதைவிடக் காடுகளை வளர்க்க வேண்டும். தேசிய அளவில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்களுக்குக் காடழிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அழித்த காடுகள் அனைத்துக்கும் அழித்தவர்கள் சொன்ன மாற்று அதற்கு நிகராக மரங்களை வளர்ப்போம் என்பதுதான். அழிக்கப்பட்ட காடுகளுக்கு நிகராக வேண்டாம், அதில் பாதியையாவது வளர்த்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும். அல்லது பணப் பயிர்கள் மற்றும் எந்தப் பயனுமற்ற விரைவில் வளரும் அயல்தாவரங்கள் நிறைந்த உயிரற்ற சடலமாகத்தான் காடு என்று பெயருக்கு வளர்க்கப்படும். 

இதில் பன்னாட்டு நிறுவனம், உள்நாட்டு நிறுவனம், அரசாங்கம் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற பொன்மொழியைத் தூக்கிக்கொண்டு நிற்கும் பல நிறுவனங்கள் மத்தியிலும் இதே கதைதான். மதுரையில் ஊர்வனம் என்ற தன்னார்வ அமைப்பு, கோவையைச் சேர்ந்த யோகநாதன் போன்றோர் நாட்டு மரங்களை வளர்ப்பதிலும் அதைப் பராமரிப்பதிலும் முனைப்பு காட்டுகின்றனர். கன்றுகளை நட்டபின் அதைத் தொடர்ச்சியாகப் பராமரித்து முழுமையாக வளர்ப்பதில் இவர்களைப் போன்ற தன்னார்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் முழுவீச்சில் செயல்படுகின்றன. 

மழை வர, மரத்தை நட்டால் மட்டும் போதாது. அதைப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, காடுகளை அழித்துவிட்டு மரங்கள் வளர்த்துப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் என்ற கார்ப்பரேட் மனநிலை வளர்ந்துகொண்டிருக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமென்றால், ஏன் யானைகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன? ஏன் களைச்செடிகளால் சாப்பிட உணவின்றி மான்கள் குறைந்துவிட்டன? இரை கிடைக்காமல் சிறுத்தைகள், புலிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன? 

`மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!

காடுகள் உயிர்த்திருக்க இவற்றின் இருப்பு அவசியம். அதன் உயிர்ப்புதான் நமக்கு மழையைப் பெற்றுத்தரும். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற பதாகையைத் தூக்கி நிற்கும் எத்தனை நிறுவனங்கள், அரசுகள் அழிக்கப்படும் காடுகளைக் காப்பாற்றப் பேசியுள்ளார்கள். தன்னார்வலர்களின் மரம் நடும் முயற்சிக்கும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் மரம் நடும் முயற்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நாம் உணர வேண்டும். 

தன்னார்வலர்கள், ஊர்களுக்குள் மரம் நடுவது மழை வருவதற்காக மட்டுமல்ல. வெயில் காலங்களில் மக்களின் வெப்பத்தைக் குறைக்க அவற்றின் இருப்பு தேவை என்பதால். அவை, அதுபோக மழை பெய்வதிலும் ஓரளவுக்குப் பங்கு வகிக்கின்றன. அதுதவிர்த்துக் காடுகளின் குரலாக அவர்கள் ஒலித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், நிறுவனங்களின் மரம் நடும் பதாகைக்குப் பின்னால் பல லட்சம் காடுகளைக் கொலை செய்ததற்குச் செய்யும் பிராயச்சித்தம் மறைந்திருக்கிறது. அந்தப் பிராயச்சித்தம் முழுமையடைவதுமில்லை, அதனால் நாம் மழை பெறப்போவதுமில்லை. 

இது போகும் வழியெல்லாம் தங்கள் நீண்ட கைத்தடிகளால் சின்ன குழிதோண்டி விதை போட்டே பல காடுகளை உருவாக்கியவர்கள் வாழும் நிலம். இந்நிலத்தில் லாப நோக்கோடு மரம் வளர்க்காமல் சூழலியல் நோக்கோடு நிலத்துக்குரிய மரங்களை வளர்ப்போம். வெப்பத்தில் சாம்பலாகிக்கொண்டிருக்கும் நகரங்களைக் குளிர்விப்போம். அதேசமயம், இந்தியக் காடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்து மழை பெய்யவும் வழிவகுப்போம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு