Published:Updated:

"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை

"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை
"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை

ஒரு மீனுக்கு இரை கிடைத்ததும், மற்ற மீன்களுக்குத் தகவலை ஒலிமூலம் சைகை மூலம் அனுப்பும். பிரான்ஹாக்களின் காதுகேட்கும் திறனும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் ஒலி கிடைத்த திசையை நோக்கி மற்ற மீன்கள் விரைந்து செல்லும்.

யிரினங்களில் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு சிறப்புத் தன்மை உண்டு. அந்தச் சிறப்புக் குணங்களைக் கொண்டு இடத்துக்கு தக்கவாறு தகவமைத்துக்கொண்டு வாழ்கின்றன. சில விலங்குகளில் கொடூரமாகவும் சில விலங்குகள் சாதுவாகவும் இருக்கும். ஆனால், கில்லர் மீன் என்று சொல்லக்கூடிய பிரான்ஹா மீன் கொஞ்சம் வித்தியாசமானது. தன்னைவிட உருவத்தில் பெரிய விலங்குகளைக்கூட பயம் இல்லாமல் தாக்கும் தன்மைகொண்டது. தாக்குதல் என்றால் கடிப்பது, உண்பது என்பதெல்லாம் கிடையாது. மற்ற விலங்குகள் ஒரு விலங்கைத் தாக்கினால் அதைக் கொல்ல சில மணித்துளிகள் எடுத்துக்கொள்ளும். பிரான்ஹா மீன்கள் பல கிலோ எடை கொண்ட விலங்குகளையும், சில நிமிடங்களில் கடித்துக் குதறி, எலும்புக் கூட்டை மட்டும் தனியாக பிரித்துவிடும். இதற்குக் காரணம், பிரான்ஹாக்களின் பற்கள்தான். குத்தூசிபோல பற்கள் அமைந்திருக்கும். தாடைகள் மிகவும் வலிமையானது. 

"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை

இந்த பிரான்ஹா வகை மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் வாழ்கின்றன. அர்ஜெண்டினாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசங்கள் வரையும் பரவிக் காணப்படுகின்றன. இவ்வகை மீன்களில் 20 வகையான இனங்கள் அமேசன் நதியில் வாழ்ந்து வருகின்றன. Serrasalmidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த பிரான்ஹா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரான்ஹா (Red-bellied piranha) என்ற மீன் முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றது. எந்தவொரு பயமும் இல்லாத மீனானது, பார்க்கும் எல்லோருக்கும் சாதுவாக தோற்றமளிக்கும். இந்த மீன்களை மையமாக வைத்து ஹாலிவுட்டில் சினிமாக்களும் எடுக்கப்பட்டுள்ளன. 

நன்னீர் மீன் மத்தியில் மிகவும் ஆபத்தானது. இந்த மீனானது 12 முதல் 35 அங்குலம் வரை வளரும் தன்மை கொண்டது. ஆனால், சிவப்பு நிற பிரான்ஹா மீன்கள் 60 செ.மீ வரைகூட வளரும் தன்மை கொண்டது. சில இனங்களில் வயிற்றுப் பகுதி செம்மஞ்சள் நிறமாகவும், ஏனைய பகுதிகள் வெள்ளி நிறமாகவும் இருக்கும். வேறு சில மீன்கள் முழுவதும் கறுப்பு நிறமாக இருக்கும். பிரான்ஹா மீன்களின் தலை பெரியதாகவும் மழுங்கியும் இருக்கும். உடல் ஆழமானதாக இருப்பதோடு, வயிறு வாள் போன்ற விளிம்புடையதாகக் காணப்படும். இவற்றின் வலிமையான தாடைகளில் முக்கோண வடிவான கூரிய பற்கள் இருக்கின்றன. இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப்போல நறுக்கக் கூடியதாக இந்த மீனின் பற்கள் அமைந்துள்ளன. 

"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை

ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருக்கும் காலங்களில் இந்த மீன்கள் கூட்டமாக இரையைத் தேடிச் செல்லும் பழக்கம் கொண்டவை. இவை 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே கூட்டமாக அலையும். பெரிய விலங்கு இரையாகக் கிடைத்தாலும் அனைத்தும் ஒன்றுகூடி கடித்துக் தின்றுவிடும். பிரான்ஹா வகைகளில் செந்நிற வயிற்று பிரான்ஹா மீன்கள் முற்றிலும் வேறுபட்டது. இவை பெரும்பாலும் இரை தேடும் நேரங்களில் பரவிச் சென்று இரைதேடும் தன்மை கொண்டது.

ஒரு மீனுக்கு இரை கிடைத்ததும், மற்ற மீன்களுக்குத் தகவலை ஒலிமூலம், சைகை மூலம் அனுப்பும். பிரான்ஹாக்களின் காது கேட்கும் திறனும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் ஒலி கிடைத்த திசையை நோக்கி மற்ற மீன்கள் விரைந்து செல்லும். இரை கிடைத்ததும், முதலில் வால் பகுதியையும் கண்களையும் தாக்கும். இவற்றின் தாக்குதலிலும்கூட ஒரு நேர்த்தி உண்டு. ஒரு மீன் கடித்தவுடன், அடுத்த மீனுக்கு வழிவிட்டு விலகிக்கொள்ளும். இதனால் எலும்புக் கூடுகள் மட்டும் எஞ்சி நீரில் மிதந்துகொண்டிருக்கும். மற்றபடி, பிரான்ஹா சில நிமிடங்களில் யானை அளவு இரையைக்கூட விழுங்கிவிடும் என்பதுபோன்ற கதைகள் பெரும்பாலும் கற்பனைதான். அதுவும் செந்நிற வயிற்றுப் பிரான்ஹாவைச் சுற்றியே இந்தக் கதைகள் பின்னப்பட்டுள்ளன.

இனப்பெருக்கக் காலத்தில் நீர் தாவாரங்களில் முட்டையை வைத்துவிடும். முட்டை வைத்த பின்னர், ஆண் மீன்கள் அதை கருவாக மாற்றும். பின்னர், அதன் அருகில் சுற்றிக்கொண்டே சிறிய மீன்களை உணவாகக் கொண்டு முட்டையைப் பாதுகாக்கும். குட்டிகள் தன்னைக் காத்துக்கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்ற பின்னரே வெளியே வரும்.

"தம்மாத்தூண்டுனு நினைக்காத... தவிடு பொடியாயிடுவ!" - பிரான்ஹா மீன்களின் கில்லர் கதை

மற்ற விலங்குகளைத் தாக்கினாலும், மனிதர்களை அபூர்வமாகவே தாக்குகிறது. ஆனால், அண்மைக் காலமாக மனிதர்கள் மீதான பிரான்ஹா மீன்களின் தாக்குதல் சற்றே அதிகமாகி இருக்கின்றன. இதில் பிரேசிலில்தான் அதிகமான மனித-பிரான்ஹா மீன்களின் மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. "ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதும் இந்த அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்" என்கிறார், பிரேசில் நாட்டு விலங்கியலாளர் பேராசிரியர் இவான் சஸிமா. 

பிரான்ஹா கடிக்கும் இடம் வட்டவடிவமாகக் குழிபோல இருக்கும். சதையைப் பெருமளவு இழக்க நேரிடலாம். இதனால் அதிகமாக ரத்த இழப்பு நேரிடும். நதிகளில் குளிக்கச் செல்பவர்களே பெரும்பாலும் பிரான்ஹா மீன்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிரான்ஹா கூட்டங்களால் தின்று தீர்க்கப்பட்ட மனிதர்கள் பற்றிய செய்திகளும் உலவுகின்றன. ஆனால், விஞ்ஞானிகள் இதை முற்றிலுமாக மறுக்கின்றனர். நீரில் மூழ்கி இறந்த பின்னர்தான் பிரான்ஹா மீன்களின் தாக்குதல் இருக்க வேண்டும் என விளக்கம் அளிக்கின்றனர். பெரும்பாலும், பிரான்ஹா இரையைத் தாக்கி உண்ணாமல், ஏற்கனவே இறந்தவற்றையே உணவாகக் கொள்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பிரான்ஹாவின் கொடிய தாக்குதல்கள் அனைத்தும் அதீத கற்பனையே என்கிறார்கள். எது எப்படியோ, மீன்களில் பிரான்ஹா ஆபத்தானவைதான்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு