Published:Updated:

`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'

`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'
`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'

இவர்களின் இந்தக் கோரிக்கை, பயணம் செய்பவர்கள் எங்கு சென்றாலும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

யற்கையால் படைக்கப்பட்ட அனைத்துமே சிறப்புதான். அதில் வனவிலங்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. காரணம், அவற்றால்தான் இந்த உலகில் உள்ள காடுகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன. அவற்றைவிட முன்னேறிவிட்டோம் எனச் சொல்லிக்கொள்ளும் மனித இனமோ, காடுகளைக் காப்பாற்றாமல் வனவிலங்குகளுக்கும் காடுகளுக்கும் தொந்தரவு கொடுத்துவருகிறது. இன்று பெரும்பாலானோர் விரும்பி பயணம் செய்யும் இடங்களில் ஒன்று காடு. காரணம், அவற்றின் அமைதியும், இயற்கை எழிலும்தான். ஆனால், அவற்றையே கெடுக்கும்விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் நாம். அப்படிப் பயணங்களில் மனிதர்களால் அதிகம் பாதிக்கப்படும் விலங்குகளில் ஒன்று குரங்குகள். அவற்றை அச்சுறுத்துவது, விரட்டுவது, வாகனங்கள் மூலம் மோதுவது, உணவுகள் கொடுத்து அவற்றை சீரழிப்பது என அந்தக் கொடுமைகள் நிறையவே உண்டு. அண்மையில் சில நாள்களுக்கு முன் கீழ் கோத்தகிரியில் சில மர்ம நபர்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்துக்கொன்ற சம்பவம் இயற்கை மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவத்தில் தாய் தந்தையை இழந்த குரங்குக் குட்டிகளின் படங்கள் இன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் சூழலில், அந்தக் குரங்குகளைக் காப்பாற்றவும் சிலர் இருக்கவே செய்கின்றனர். அப்படிக் குரங்குகளைப் பாதுகாக்கத் தனியார் தொண்டு நிறுவனத்தின் இரு ஊழியர்கள் வால்பாறை செல்லும் வழியில் உள்ள புதுத்தோட்ட பகுதியில் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்தில் உதவி வருகின்றனர். இவர்களின் செயல் மக்களிடையே அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது. குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள களக்காடு, முண்டந்துறை வால்பாறை வளைவுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு அதிகம் வாழும் சிங்கவால் குரங்குகள் அடிக்கடி விபத்தில் அடிப்பட்டு இறந்து வருகின்றன.

`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'

வனத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட அறிக்கையின்படி கிட்டத்தட்ட 20,000 குரங்குகள் இம்மலையில் வசிக்கின்றன. அதிலும் வால்பாறை சுற்றுகளில் 5 குடும்பங்களாக வசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகம் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடங்களாக வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை, பொள்ளாச்சி செல்வோர் இக்குரங்குகளைப் பார்த்து அவற்றைத் தொந்தரவு செய்வது, வீடியோக்கள் எடுப்பது, சம்பந்தமில்லாத உணவுகளைத் தருவது, புகைப்படங்கள் எடுப்பது, துன்புறுத்துவது என்று நாளுக்கு நாள் சோகச் சம்பவங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. வேட்டையாடுவது போன்றவற்றைத் தடுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதைத் தடுக்கவே ஒரு இயற்கை தன்னார்வ அமைப்பு புது முயற்சி ஒன்றை செய்துவருகிறது. 

`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'

இதுபற்றித் தெரிந்துகொள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கண்ணன் மற்றும் தர்மராஜ் அவர்களிடம் பேசினோம். "இயற்கை அழகாகப் போர்த்தியுள்ள இடம்தான் வால்பாறை - பொள்ளாச்சி சாலை. இது சிங்கவால் குரங்குகள் அதிகமாக வாழக்கூடிய இடம். அதிக உயரத்தில் வாழக்கூடிய இவ்வகையினங்கள் சில நாள்களாக உணவுக்காகச் சாலைகளுக்கும் வர ஆரம்பித்துவிட்டன. அதனால் சில உயிரிழப்புகளும் நடக்கின்றன.அதைத் தடுக்கவே பெங்களூரைச் சார்ந்த NCF (Nature Conservation Foundation) தன்னார்வ அமைப்பு எங்களை பணியமர்த்தியுள்ளார்கள். காலை 8 மணி முதல் மாலை 6.30 மணிவரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்புப் பலகை மூலம் அறிவுறுத்துகிறோம். ஆண்டு முழுவதும் இப்பணி இருக்கும். சைக்கிளில் அறிவிப்பு பலகை வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

`வால்பாறை வர்றவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை!' குரங்குகளைக் காப்பாற்றும் `இருவர்'

சில காலமாகக் குரங்குகள் சாலை கடக்கும்போது ஆபத்துகளைச் சந்திக்கின்றன. அதைத் தடுக்க அவை சாலையைக் கடக்கும்போது குரங்குகள் படம் கொண்ட Stop/Go slow போன்ற அறிவிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஓர் உயிரினத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்குக் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம். இங்கு வரும் பயணிகளிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த விலங்குகள்தான் காட்டின் வளம், அவற்றிற்கு எந்தவிதத்திலும் தொந்தரவு செய்ய வேண்டாம்" எனக் கூறுகிறார்கள் இந்த நல்ல உள்ளங்கள்.

இந்த இரு மனிதர்களுக்கு உள்ள அக்கறை நம்மில் அனைவருக்கும் இருந்தால் வனவிலங்குகளை அழிவின் பட்டியில் இருந்து தடுக்கலாம்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு