Published:Updated:

'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்

'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்
'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்

21-ம் நூற்றாண்டில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்று மனிதர்களை ஆட்கொண்டிருக்கிறது. காரும் டிவியும் சாதாரணமாகக் கிடைக்கும் அமெரிக்காவில், அதை நாள்தோறும் உபயோகிக்கும் மக்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் போதிலும், தன்னிச்சையாக மின்சாரத்தையோ காரையோ உபயோகிக்காமல் ஆமிஷ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது விசித்திரமான விஷயம்தான். 

மெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள்தான். அந்த நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடிக் கட்டடங்களும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் உலக சிறப்பு வாய்ந்தது. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தியில்லாத சுவாரஸ்யமான பல விஷயங்களும் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது, ஆமிஷ் மக்களைப் பற்றியும், அவற்றின் பழக்க வழக்கங்கள் பற்றியும்தான். 

'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்

ஆமிஷ் மக்கள் (Amish) தீவிர கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் மக்கள். இவர்கள் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா, ஒஹையோ மற்றும் இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் அதிக அளவு வாழ்ந்து வருகின்றனர். மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்களின் முதன்மையான கொள்கை, பைபிளில் குறிப்பிட்டிருப்பதைத் தவறாமல் பின்பற்றுவது, அதில் கூறப்படாத எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான். இதனால் இவர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனித்து வாழ்கின்றனர். இதனால் அதில் சொல்லப்படாத புதுமைகளான அறிவியல் வளர்ச்சியின் விளைவுகளான மின்சாரப் பொருள்கள், பெட்ரோல் வாகனங்கள் போன்ற நவீன அறிவியல் உபகரணங்கள் எதையும் இவர்கள் பயன்படுத்துவது இல்லை.

கி.பி.1690-களில் ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினர் சக கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துவ மதத்தை சரியாகப் பின்பற்றவில்லை என்று தனியாகப் பிரிந்து சென்றனர். ஜேகோப் அம்மான் என்பவர் தலைமையில் இப்படி உருவான இந்த கிறிஸ்துவப் பிரிவானது பிற்காலத்தில் ஆமிஷ் என்ற பெயரை பெற்றது. இந்த மக்கள் 18-ம் நூற்றாண்டில் போர், பஞ்சம், வேலை தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் குடியேறி அங்கேயே வாழத் தொடங்கினர்.

'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்

பொதுவாக இவர்களின் பிள்ளைகள் இவர்களே நடத்தும் பள்ளியில் 8-ம் வகுப்புவரை படிக்கின்றனர். இதுவரை படிப்பு போதும் எனக் கருதி படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்திவிடுகிறார்கள். இந்தக் குழந்தைகள் 16 வயதிலேயே வேளாண்மை, குதிரை வளர்த்தல், தச்சுத் தொழில், இரும்புப் பட்டறை போன்ற தொழில் கல்வியைக் கற்றுக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கிவிடுகின்றனர். அவர்கள் வாழ்க்கைமுறை பற்றி ஆராய்ந்துகொண்டிருந்த ஆய்வாளர் ஒரு முறை ஆமிஷ் முதியவரிடம், “நீங்கள் என்னதான் சொன்னாலும், உங்கள் மகனை நீங்கள் எட்டாவதோடு பள்ளியிலிருந்து நிறுத்தியது எனக்குச் சரியாகப் படவில்லை“ என்று சொன்னார். அதற்கு அந்த முதியவர் “இதோ இங்கே பார்க்கிறீர்களே இது என் குடும்பத்தின் நிலம். அதோ அங்கே தெரிவது ஆங்கிலேய வீட்டுக்காரர் நிலம். அவர் மகன் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறான். என் மகன் என்னுடன் என்னுடைய பண்ணையில் ஒரு வருடமாக வேலை செய்து வருகிறான். பார்த்துக்கொண்டே இருங்கள். சில வருடங்களில் என் மகன் அவர்களுடைய நிலத்தையும் வாங்கிச் சேர்த்து விவசாயம் செய்யப்போகிறான்” என்றாராம்.

 சமூகக் கட்டுப்பாட்டை மீறும் மக்கள் சமூகத்தைவிட்டு விலக்கி வைக்கப்படுகிறார்கள். இச்சமூக மனிதர்கள் சமூகத்தைவிட்டு வெளியில் சென்று வாழ்வது கடினம் என்பதால் சமூகக் கட்டுப்பாட்டை பெரும்பாலும் மீறாமல் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை முறையைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பாரம்பர்ய முறையில் உணவு விடுதியையும் இந்த மக்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்துக்காக டிராக்டர்களைப் பயன்படுத்துவது இல்லை. குதிரைகளைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கின்றனர். 

பொதுவாக ஆண்கள் கறுப்பு நிறத்திலும், பெண்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலும் எளிமையான உடைகளை அணிகிறார்கள். ரெடிமேடாகக் கிடைக்கும் துணியை இவர்கள் அணிவதில்லை. ஒரே நிறமாகத் துணிகளை வாங்கித் தைத்து அணிகின்றனர். கோடுகளோ, பூக்களோ அச்சடித்த துணிகளை அணிவது இல்லை. பளீர் வண்ணங்களும் வடிவங்களும் உடைகளில் இருந்தால் அது அந்தத் தனிநபர் பற்றிய கவன ஈர்ப்புக்குக் காரணமாக அமைகிறது. எந்த ஒரு தனிமனிதரையும் உயர்த்தியோ தனித்தோ காட்டக்கூடாது என்பதற்காகத்தான் அந்த உடை விதிமுறையாம். 

'மின்சாரம், ஸ்மார்ட்போன்லாம் வேண்டவே வேண்டாம்!' அமெரிக்காவின் ஆமிஷ் மக்கள்

21-ம் நூற்றாண்டில், ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்று மனிதர்களை ஆட்கொண்டிருக்கிறது. காரும் டிவியும் சாதாரணமாகக் கிடைக்கும் அமெரிக்காவில், அதை நாள்தோறும் உபயோகிக்கும் மக்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கும்போதிலும், தன்னிச்சையாக மின்சாரத்தையோ காரையோ உபயோகிக்காமல் ஆமிஷ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது விசித்திரமான விஷயம்தான். 
அதே சமயம் ஓட்டுநர் வைத்து தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அதேபோல் சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதில்லை. பேருந்து, ரயில் முதலியவற்றில் பயணிப்பதில்லை என்றாலும், ஒரு அவசரத்துக்கு யாருடைய காரிலாவது ஒரு பயணியாகப் பயணிப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தாங்கள் கைபேசி வாங்கி வைத்துக்கொள்ளுவதில்லை என்றாலும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு அவசரங்களுக்காக ஊருக்கு வெளியே ஒரே ஒரு பொதுத் தொலைபேசி வைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள், ஒரு சில ஆமிஷ் மக்கள். 

அதே சமயம் ஆமிஷ் மக்கள் மீது சில கட்டுக்கதைகளும் உள்ளன. 

சமையலுக்கு விறகுகளையும் பயணத்துக்குக் குதிரை வண்டிகளையும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இரவில் வெளிச்சத்துக்கு எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது அவர்களும் மாறிவிட்டனர். வீட்டுக்கு அரசிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கவிட்டாலும், ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்களாம்.

அவர்கள் விவசாயம் மட்டுமே செய்வதாகவும் ஒரு கதை இருக்கிறது. ஆனால், அவர்கள் மர வேலைப்பாடுகளில் கை தேர்ந்தவர்கள் என்கின்றன ஆமிஷ் மக்களைப் பற்றி எழுதும் இணையதளங்கள். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு