Published:Updated:

நிபா வைரஸுக்குப் பழந்தின்னி வௌவால்களை பழி சொல்வது சரியா?!

க.சுபகுணம்
நிபா வைரஸுக்குப் பழந்தின்னி வௌவால்களை பழி சொல்வது சரியா?!
நிபா வைரஸுக்குப் பழந்தின்னி வௌவால்களை பழி சொல்வது சரியா?!

டந்த 2018-ம் ஆண்டு, ஆபத்தான உயிரைப் பறிக்கக்கூடிய நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 18 பேர் இறந்தனர். இந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதைக் கேரள அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஒருவரைத் தவிர நிபா வைரஸ் அறிகுறிகளோடு சிகிச்சைக்கு வந்த மற்றவர்களிடம் அதன் பாதிப்பு இல்லையென்று கேரள அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 18 பேரின் மரணங்களுக்குக் காரணமான இந்த வைரஸ் மீண்டும் கேரள மக்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் அது மீண்டும் பரவத் தொடங்கிவிட்டதாகத் தெரிந்தது. கேரள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டுவிட்ட நிபா வைரஸ் தற்போது வேறு எங்கும் இருப்பதுபோல் தெரியவில்லை. 

கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டில் அதன் தாக்கம் இருப்பது தெரிந்த தொடக்கத்திலும் சரி அதைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக இயங்கியுள்ளது கேரள அரசு. இருப்பினும் எர்ணாகுளம் பகுதிகளின் நிலைமை வைரஸ் இன்னமும் இருப்பதாகக் கூறுகிறது. வௌவால், பன்றி போன்ற உயிரினங்களிடம் இன்னமும் அது பரவிக்கொண்டிருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்றும் கூறப்படுகிறது. 

கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உலகளவில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் இது முதல் முறையல்ல; இரண்டாவது முறை. இந்தியாவில் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடிய ஒரு மாநிலத்தில் எப்படி இது நேர்ந்தது என்ற ஆய்வுகளைத் தொடங்கியுள்ளார்கள். விடை மிகவும் எளிமையானது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் இப்படியான பிரச்னையைச் சந்திக்கக் காரணம் அவர்களிடம் சுகாதாரத்திற்கெனத் தனிக்குழு இல்லை என்பதுதான். இதுபோன்ற தொற்று நோய்க் கிருமிகளைக் கண்டறிய பொது சுகாதார நிபுணர்கள் போதிய அளவுக்கு அவர்களிடம் இல்லை. 

நிபா வைரஸ் போன்ற தொற்று நோய்க்கிருமிகளைக் கண்டறிய தொடர்ச்சியான தீவிரமான ஆய்வுகள் அவசியம். அது மக்கள் மத்தியில் பரவும் முன்னரே கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். கடைசியாக எச்சரிக்கையாவது வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகள் இல்லாமல் தவிர்க்கமுடியும். உயிருக்கு ஆபத்தாகப் பரவக்கூடிய  வைரஸ் பாதிப்புதான் இந்த நிபா. இது பழந்தின்னி வௌவால்கள் இடையே அதிகம் பரவுகிறது. இந்த வைரஸால் பாதிப்படைந்த வௌவால்கள் சாப்பிட்ட பழங்களின் மிச்சத்தைச் சாப்பிடுவதால், இது மனிதர்களுக்குப் பரவலாம். சுவாசப் பிரச்னைகளில் தொடங்கி மூளையில் கட்டி ஏற்படுவதுவரை இதன் அறிகுறிகள் இருக்கலாம். இப்போதுவரை நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைய எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. முதல்கட்ட சிகிச்சைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 1998-ம் ஆண்டு முதல், 477 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் 252 பேர் இறந்துள்ளனர். உலக சுகாதார மையம், அதன் ஆராய்ச்சித் துறையிடம் முதன்மையான முக்கியத்துவம் கொடுத்து இதை ஆய்வு செய்யக் கூறியுள்ளது. 

நிபா வைரஸுக்குப் பழந்தின்னி வௌவால்களை பழி சொல்வது சரியா?!

இதனால் ஏற்படும் நரம்புகள் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றன. நிபா வைரஸ் பரவுவதில் அதிகப் பங்கு பழந்தின்னி வௌவால்களுக்குத்தான் உண்டு. உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையின் படி, பழந்தின்னி வௌவால்கள் மனித வளர்ச்சித் திட்டங்களால் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. காடழிப்பு அவற்றின் உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பழ மரங்களின் அழிவுக்கு வித்திடுகின்றன. கோரப் பசியோடு தவிக்கும் வௌவால்களின் உடலில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வைரஸ் அதிவேகமாகப் பெருகிவிடுகிறது. அப்படி பாதிக்கப்பட்ட வௌவால்களின் கழிவு, எச்சில் போன்றவற்றோடு மனிதர்களுக்குத் தொடர்பு ஏற்படும்போது அதன்மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது. 

சிலர் பழந்தின்னி வௌவால்களை மொத்தமாகக் கொன்றுவிட வேண்டுமென்று கூறி வருகிறார்கள். அதன்மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கலாம் என்பது அவர்களின் வாதம். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. பழந்தின்னி வௌவால்கள் மத்தியில் இந்த வைரஸ் எப்படி வருகிறது என்பதைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். பிரச்னையின் ஆழத்தையும் அதன் வேரையும் கண்டுபிடிக்காமல் வெறுமனே பாதைகளைத் துண்டிப்பது தீர்வாகாது. எப்படியும் அது புதிய பாதையை வகுத்துக்கொண்டு பரவத் தொடங்கலாம். அதுமட்டுமன்றி இந்த மாதிரி செய்வது வௌவால்களின் மத்தியில் அழுத்தத்தை அதிகப்படுத்தும். அந்த அழுத்தம் மேலும் அதிகமாக இந்த வைரஸ் சுரப்பதற்குத்தான் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

நிபா வைரஸ் தொற்றுகளைத் தடுக்க இருக்கும் ஒரே வழி, அது பற்றியும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பழந்தின்னி வௌவால்களை எதிர்கொள்ள நேர்ந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற விவரங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இதுபோன்ற விலங்குவழி நோய்களிலிருந்து தப்பிக்க நாம் எடுத்துவைக்க வேண்டிய முதல் படி, அதைப் பற்றிய முழுமையான அறிவியல்பூர்வ விவரங்களை நாம் தெரிந்துவைத்துக் கொள்வதே. அதில், `உலகளவில் விலங்கு வழியாக மனிதர்களுக்குப் பரவக்கூடிய இதுபோன்ற நோய்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கின்றன' என்பதுதான் முதல் தகவலாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியதாகும். மேலும், அவற்றின் பாதிப்பு மனிதர்கள் மத்தியில் அதிகமாகி வருவதற்கு முக்கியக் காரணம், காடழிப்பு. அதன் விளைவுதான் இந்தப் புதிய நோய்கள். 

இயற்கையின் கண்ணில் எதுவுமே தனியல்ல; எந்தவோர் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், இன்னோர் இடத்தில் அதன் விளைவுகள் எதிரொலிக்கும்.

Vikatan