சமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வரும் இயற்கை ஆர்வலர் மணிகண்டன். கடந்த 2 வருடங்களாக இலவசமாக விதைப் பந்துகளை வழங்கி வருகிறார்.

விதைப்பந்துகளை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது, ஏன் வந்தது உள்ளிட்ட கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த மணிகண்டன், ``முன்பு குருவிகள் அதிகமா இருந்தது. அதுங்க பழம் சாப்பிட்டு அந்த பழத்தோட விதைய தன் எச்சத்தோட சேர்த்து எங்கேயாவது போட்டுட்டுப் போய்டும். அந்த விதை முளைச்சு மரமா ஆகி மீண்டும் பழம் தரும். காகம் ஒரு காட்டையே உண்டாக்குன கதையெல்லாம்கூட நாம் கேட்டிருப்போம். இப்போ குருவிகளோட எண்ணிக்கை குறைஞ்சு வர்றதை நம்ம கண்முன்னே பார்க்கலாம். அதற்கு மனிதர்கள்தான் முதல் காரணம். விவசாய நிலங்களுக்கு பக்கத்துல உயர் மின் கோபுரம், நம்ப வீடுகள்ல பழ வகை மரங்களை விட்டுட்டு அழகுக்காகப் பூச்செடிகள் மட்டும் வளர்ப்பது, குருவிகளின் முக்கிய உணவான சிறுதானிய சாகுபடியின் சரிவு எனப் பல காரணங்களை அடுக்கிகிட்டே போகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தண்ணீர் தட்டுப்பாடு, புவி வெப்பமடைதல்னு பல பிரச்னை, மரங்கள் இல்லாததால்தான். அந்தச் சிட்டுக்குருவிகளோட பணியை நாம் செய்யணும்னு தோனுச்சு. அப்போதான் காற்று, எறும்புகள் மற்றும் பறவைகள் மூலம் விதைகள் சேதம் அடையாம இருக்க களிமண் மற்றும் இயற்கை உரங்களோட பந்துகளா செஞ்சு அதுக்கு நடுவுல விதைகளை வெச்சு நீர் நிலைகளுக்குப் பக்கத்துல வீசலாம் என்கிற எண்ணம் வந்தது. சில குடும்ப நிகழ்வுகளில் மரக்கன்றுகள் கொடுப்பது வழக்கமா இருக்கு. அப்படிக் கொடுக்குற மரங்களை யாரும் சரியாக நட்டு பராமரிப்பதில்லை.
ஆனால், விதைப் பந்துகள் வீணாவதில்லை. பராமரிப்பு இல்லாமலே நல்லா வளர்ந்து நிழல் மற்றும் பழம் கொடுக்கும். புன்னை, புங்கை, வேப்பம், நாவல், கொன்றை, இலுப்பை போன்ற வகை விதைகளைத்தான் விதைபந்துக்குப் பயன்படுத்துறோம். வலியது வெல்லும் என்பதுதான் இயற்கையின் தத்துவம். விதைப்பந்துகள் அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்தவுடன் தானாக முளைத்து விருட்சமாகும்" என்றார்.

இதுமட்டுமன்றி பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகள் செய்யப் பயிற்சி அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு தன் குறிக்கோளான ஒரு கோடி மரக் கன்றுகளை கடலூர் மாவட்டம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் நடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக இதுவரை 2 லட்சம் மரக் கன்றுகளை வைத்துள்ளார். தனது அடையாளம் அறக்கட்டளை மூலமாக நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து மணிகண்டன் இதைச் செய்து வருகிறார்.