Published:Updated:

250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

மு.ராஜேஷ்

தாவர இனங்கள் சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தன என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் வேறொரு கோணத்தை உலகுக்குக் காட்டுகின்றன

250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

ரு குறிப்பிட்ட விலங்கினம் முற்றிலுமாக அழிந்துவிட்டது அல்லது அழியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி அவ்வப்போது வெளியாவது வழக்கம். கடந்த சில வருடங்களில் அது போன்ற செய்திகளை அதிகமாகவே பார்க்க முடிகிறது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வேட்டை என உயிரினங்களின் அழிவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் விலங்குகளின் அழிவு இருக்க மறுபுறம் உலகம் கவனிக்க மறந்த ஒன்றாக இருக்கிறது தாவரங்கள் அழிந்து வரும் விஷயம். மனிதர்களின் மோசமான செயல்பாடுகளால் தாவர இனங்களும் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இதுவரை தாவரங்கள், இந்தச் சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைத்து வந்தன என்றே கருதப்பட்டு வந்தன. ஆனால், தாவரங்களின் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது என நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கை.

250 ஆண்டுகளில் காணாமல் போன 571 தாவர இனங்கள்

250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

தாவரங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் கேட்பது சற்று விநோதமாக இருக்கலாம். அதைப் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை என்பதுதான் அதற்கான காரணமாக இருக்கிறது. உண்மையில் அது உலகம் கவலை கொள்ளத்தக்க விதத்தில் அமைந்திருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ராயல் பொட்டானிக் கார்டன் மற்றும் ஸ்டாக்கோம் (Stockholm University) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி இப்போது வரை அழிவுக்கு உள்ளாகியிருக்கும் தாவர இனங்களின் எண்ணிக்கை 571 என்ற அதிர்ச்சியான தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். உலகில் இருக்கும் தாவர இனங்கள் முழுவதுமாக இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. இன்றைக்கும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆய்வாளர்கள் குறிப்பிட்டது வகைப்படுத்தி வைக்கப்பட்ட தாவர இனங்களிலிருந்து அழிந்தவற்றை மட்டும்தான். அதைத் தவிர்த்து இன்னும் பல இனங்கள் அழிவுக்குள்ளாகியிருக்கலாம்.

தாவரங்களே சுற்றுச்சூழலின் முதுகெலும்பு

250 வருடங்களில் அழிந்துபோன 571 தாவர இனங்கள்... மனித இனத்தை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

``தாவரங்கள்தான் இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்குப் பேருதவியாக இருந்து வருகின்றன. தாவரங்களே நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனைக் கொடுக்கின்றன. அவையே நமக்குத் தேவையான உணவைத் தருகின்றன. இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. எனவே இந்த அழிவு என்பது நிச்சயமாகக் கவலைப்படக் கூடிய ஒன்றுதான்" என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் எய்மர் நிக் லுகாதா (Dr Eimear Nic Lughadha). சில தாவரங்கள் மறைவதும், புதிதாக உருவாவதும் இயற்கையாகவே நடக்கும் ஒரு செயல்பாடாகவே இருந்து வருகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு தாவர இனம் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்து போயிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு செயல்பாடு நடக்க அதிக காலம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது நடப்பது வேறு விதமாக இருக்கிறது. மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள் அழியும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இயல்பை விடவும் 500 மடங்கு வேகத்தில் இந்த அழிவு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்போது பூமியிலிருந்து காணாமல் போன விலங்குகள், பாலூட்டிகள், மற்றும் நீர் வாழ் உயிரினங்களை விடவும் இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தாவரங்கள்  அழிந்து போயிருக்கின்றன என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார்கள். இது நிச்சயமாக உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காரணம் உலகில் பலரின் உணவுத் தேவையைத் தீர்த்து வைப்பது தாவரங்கள்தான். அது மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களின் உணவுக் கட்டமைப்பில் பிரதானமாக இருப்பது தாவரங்கள்தான். இப்படி தாவரங்கள் அதிவேகத்தில் அழிந்து வருவது உணவுச் சங்கிலியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் விளைவாகப் பூமியில் வாழும் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகலாம். அப்படிப் பாதிக்கப்படும் உயிரினங்களின் பட்டியலில் மனிதனும் அடங்கியிருக்கிறான். மனிதனை நம்பி இயற்கை இல்லை, இயற்கையை நம்பித்தான் மனிதன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் இது.

Vikatan