Published:Updated:

உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?

இன்று நடைபெற்ற விழாவிற்கு, பிரதமர் மோடிக்கு சந்திரசேகரராவ் அழைப்பு விடுக்கவில்லை. எல்லா விழாவுக்கும் பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடந்த 19-ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகர ராவ் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?
உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?

விவசாயத்திற்கு நீர் நெருக்கடியான மாநிலங்களில், தெலங்கானா முக்கியமான மாநிலம். அதேபோல, விவசாயத் தற்கொலைகள் அதிகமாக நிகழும் மாநிலங்களிலும் முக்கியமான இடம் தெலங்கானாவிற்கு உண்டு. இதனைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதுவுமே பயனளிக்கவில்லை. இதனால், 2007-ம் ஆண்டு அப்போதைய பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான்,“பிரனஹிதா செவலா நீர்ப்பாசனத் திட்டம் (Pranahita Chevella Lift Irrigation Scheme)”. இந்த திட்டத்தின்படி, தடுப்பணைகள் கட்டி 16.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்த முடியும். அறிவிக்கப்பட்ட பின்னர், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?

2014-ம் ஆண்டு தெலங்கானா பிரிவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தார், சந்திரசேகர ராவ். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பிரனஹிதா திட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு, புதியதாக ஒரு திட்டத்தைத் தீட்டினார். அந்தத் திட்டம்தான், 'காலேஸ்வர நீர்ப்பாசனத் திட்டம்'. 2016-ம் ஆண்டு, இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.25, 000 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இப்போது ரூ.80,196 கோடி வரை செலவாகியிருக்கிறது. அந்தத் திட்டத்தை இன்று (21.06.2019) திறந்துவைத்தார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். 

கோதாவரி ஆறும் பிரனஹிதா ஆறும் இணையும் ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில் உள்ள மெட்டிகடா அணைதான், இத்திட்டத்தின் ஆரம்ப இடம். இங்குதான் பிரமாண்ட அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கோதாவரி ஆற்றில், எல்லம்பள்ளி, சுண்டிலா, அண்ணபுரம் மற்றும் ஶ்ரீராம் சாகர் அணைகளிலிருந்து இரண்டு மிகப்பெரிய கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மிட் மன்னார் மற்றும் லோவர் மன்னார் ஆகிய நீர்த்தேக்கங்களில் விடப்படுகின்றன. எல்லம்பள்ளி தடுப்பணை நீர், ஶ்ரீராம் கால்வாயில் சேர்க்கப்படுகிறது. இங்கிருந்து இன்னும் பல அணைகளுக்கு இந்தத் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.  

மெட்டிகடா அணையிலிருந்து தெலங்கானா மாநிலத்தின் 70 சதவிகித பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்படும். அதற்காக 1,832 கி.மீ தொலைவுக்கு கால்வாய்கள், குழாய்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்கப் பகுதியின் நீளம் மட்டும் 203 கிலோ மீட்டர். ஜூலை மாதத்திலிருந்து தெலங்கானாவில் 13 மாவட்டங்கள் பயன்பெறத் தொடங்கும். இந்தத் திட்டம் முழுவதும் 7 இணைப்புகள் கொண்ட தொகுப்பாக இருக்கிறது. 7 இணைப்புகள் மூலம் ஒரு அணையிலிருந்து மற்றொரு தடுப்பணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் 180 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும். அதோடு, 20 அணைகள் ஆழப்படுத்தப்பட்டு, 13 மாவட்டங்களில் 145 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படும். 

உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?

தெலங்கானா மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், 13 மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும், 17 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மறைமுகமாகவும் பலனடையும். ஆனால், இந்தத் திட்டம் செயல்பட எடுத்துக்கொண்ட 32,000 ஹெக்டேர். இதில் வனப்பகுதி மட்டும் 3,168 ஹெக்டேர். 

பல கிலோமீட்டர் தூரத்துக்கு தண்ணீரைக் கொண்டுசெல்வது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. ஏனெனில், பூமியின் நில அமைப்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்துவிடாது. அதனால்தான், தரைக்கு அடியில், தரைக்கு மேலே என மொத்தமாக 8 நீரேற்று நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். அதில், ராமடுகு நீரேற்று நிலையம் முற்றிலுமாக பூமிக்கடியில் 330 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரைக்கு அடியில் நீரேற்று நிலையம் எப்படி சாத்தியம் என்று நமக்கு சந்தேகம் வரலாம். இந்தத் திட்டத்தை அறிவிக்கும் முன்னரே, லிடார்(LiDAR) தொழில்நுட்பம் மூலம் முழு மாநிலத்தையும் அளந்துவிட்டனர். இடத்தின் தன்மை, எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது, எப்படி தண்ணீர் கொண்டுசெல்லலாம் என்று அனைத்துவிதமான பணிகளையும் முடித்த பின்னரே இந்தத் திட்டத்தைத் தொடங்கினர். இந்தத் திட்டத்துக்காக 4,000 இன்ஜினியர்கள், 25,000 வேலையாட்கள் 3 ஷிஃப்ட்டுகளில் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். 

இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து மோட்டாரையும் இயக்க, கிட்டத்தட்ட 4,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். வருட மின்சாரக் கட்டணம் 11,000 கோடி ரூபாயாக இருக்கும். அழிக்கப்பட்ட காடுகளுக்கு மாற்றாக ஏழு மாவட்டங்களில் வறண்ட நிலப்பகுதிகளில் 2,153 ஹெக்டேர் நிலத்தை வனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. (அழிக்கப்பட்ட வனப்பகுதி 3,168 ஹெக்டேர்). இதுவரை 1,00,000 மரக்கன்றுகளுக்கும் மேல் நடப்பட்டுள்ளன. திட்டம் ஆரம்பிக்கும்போதே 2019 -ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று சொல்லியதுபோலவே முடித்திருக்கிறார்கள். ஆனாலும், கட்டுமானம் முழுவதுமாக முடிய 2022-ம் ஆண்டு வரை ஆகும். தெலங்கானா மாநிலத்தின் இறுதி நம்பிக்கை இந்தத் திட்டம்தான். ஆனால், இந்தத் திட்டம் தெலங்கானா மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்?

பல நன்மைகள் சொல்லி இந்தத் திட்டத்தை ஆதரித்தாலும், எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. நிலப் பயன்பாட்டு முறைகளைக் கற்றவரும் ஆராய்ச்சியாளரும், பெண்கள் விவசாயிகளுக்கான அமைப்பான மஹிளா கிஷான் ஆதிகார் மஞ்ச் (MAKAM) உறுப்பினருமான உஷா சீதாலட்சுமி, "வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுவந்த பெரிய பகுதிகள், விவசாயம் சாராத பணிகளுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், வீட்டுமனை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ரூ.80,000 கோடியிலான (11 பில்லியன் டாலர்) காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன" என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

காலேஸ்வரம் திட்டம், வனப்பகுதிகளை அழித்திருக்கிறது, அரசு சொல்வதுபோல அதிக நீர்ப்பாசனத் திறனையும் கொண்டிருக்காது என்பதும் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. தொடக்க விழாவிற்குப் பிரதமர் மோடிக்கு சந்திரசேகரராவ் அழைப்பு விடுக்கவில்லை. 'எல்லா விழாவுக்கும் பிரதமரை அழைக்கவேண்டிய அவசியம் இல்லை' என்று கடந்த 19-ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகர ராவ் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Vikatan