Published:Updated:

``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency

``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency
``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency

``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency

`பருவநிலை மாற்றம்’ என நமது பாடப்புத்தகங்களில் மட்டும் படித்து வந்தவற்றை இன்று கண்கூடாகப் பார்க்க நேர்கிற சூழலில் உலகம் இருக்கிறது. பருவநிலை மாற்றம் என்பதையும் தாண்டி பருவநிலை நெருக்கடி என அழைக்கப்படுகிற அளவுக்கு அதன் தீவிரம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் பலவும் படிப்படியாகப் பருவநிலை நெருக்கடியை அதிதீவிரம் வாய்ந்ததாக அங்கீகரித்து வருகின்றன. 

அதிகரித்து வருகிற கடல்மட்டம், சீரற்ற காலநிலைகள், கனிக்க முடியாத புயல்கள், வற்றிப் போகிற நீர்நிலைகள், வரலாறு காணாத தண்ணீர்ப் பற்றாக்குறை எனப் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் இன்று நாம் திணறி வருகிறோம். நிலத்தில் நடைபெறுகிற இத்தகைய பாதிப்புகளுக்கு நடுவே, பருவநிலை மாற்றத்தால் கடலில், மீன்பிடித்தலிலும் நடைபெற்று வருகிற மாற்றங்களைப் பற்றியும் விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி சமீபத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஓய்வுபெற்ற கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் அவர்களிடம் பேசினோம்.

"பருவநிலை நெருக்கடி என்பதனுடைய விளைவு கடல் சுற்றுச்சூழலில் எத்தகைய உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும்?"

"பருவநிலை நெருக்கடியால் முதலில் புயல்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது. புயலின் வேகமும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. அடுத்து கடல் வளத்தின் பன்மைத்தன்மை என்பது குறைந்துகொண்டே வருகிறது. கடல் பவளப்பாறைகளில் வருகிற பாதிப்புகள் ஒருபுறமிருந்தாலும். கடலுக்கு அடியில் உள்ள வெப்பம் அதிகரித்து வருவதால் மீன்கள் உற்பத்தி காலமும் அளவும் நிர்ணயிக்க முடியாத அளவுக்கு மாறிவருகிறது. மீன் வளங்களின் இடப்பெயர்வும் நடைபெற்றுவருகிறது. இயற்கை வளம் மிகுந்த மன்னார் வளைகுடா இதனால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இது சம்பந்தமாக அரசாங்கத்திடம் போதுமான தரவுகள் இல்லை."

"மீன்பிடித்தொழிலில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான உடனடி நடவடிக்கைகள் என்ன?"

"மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் என்பது சாத்தியமே கிடையாது. அவர்களும் முழுவதும் மீன்வளத்தை மற்றுமே சார்ந்திருக்கின்றனர். ஒருங்கிணைந்த, நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கவில்லையென்றால் மீன்பிடித் தொழிலும் மீனவர்களின் வாழ்க்கையும் மீட்க முடியாத இழப்புகளைச் சந்திக்க நேரிடும். அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. வெளிநாடுகளில் எல்லாம் மீன் வளம் தொடர்பான ஆய்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் எடுக்கப்பட்டு அதற்கேற்ப எத்தகைய வகை மீன்களைப் பிடிக்கலாம், எதைப் பிடிப்பதை தடை செய்யலாம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இந்தியாவில் அதுபோன்ற முறையான தரவுகள் எடுக்கப்படுவதில்லை."

``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency

"பருவநிலை நெருக்கடி என்பதன் தீவிரத்தை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றவா?"

"கண்முன் தெரிகிற பாதிப்புகளான புயல், வெள்ளம் இதனால் ஏற்படுகிற உயிரிழப்புகளை எதிர்கொள்ள நாம் முனைப்புடன் தயாராகி வருகிறோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் கடலில் ஏற்பட்டு வருகிற பாதிப்புகளை எதிர்கொள்ள நம்மிடம் போதுமான வழிமுறைகள் இல்லை. இந்தியா மிகச் சிறிய அளவிலே பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள முனைப்புகளை எடுத்து வருகிறது. ஆனால், உலக அளவில் கடல் சார்ந்த பிரச்னைகளில் விவாதிக்கப்பட்டதைவிட விவாதிக்கப்படாதவையே அதிகமாக உள்ளன."

"இந்தியா பருவநிலை நெருக்கடியை எவ்வாறு அணுகுகிறது?"

"இந்தியாவைப் பொறுத்தவரை கொள்கை அளவில் ஒரு செயல்திட்டத்தை வைத்திருந்தாலும், செயலில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இல்லை. அரசும் கோட்பாட்டளவில் மட்டுமே இதை அணுகுகிறது. மற்றபடி பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ளத் தனித்துவமான நடவடிக்கைகள் எதுவுமே இல்லை. கடற்கரைப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மிக வேகமாக உப்புத்தன்மை அடைந்து வருகின்றன. நிலத்தடி நீரிலும் கடல்நீர் கலப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதைப்பற்றி போதுமான தரவுகள் எடுக்கப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும் அவை எல்லோராலும் அணுக முடியாத சூழலில் இருக்கிறது. இதைப் பற்றிய உண்மையான தரவுகள் வேண்டும் மற்றும் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படுகிற பகுதிகள் தொடர்பாகவும் அரசு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். அது போதாமையாக உள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள தரவுகளின் நம்பகத்தன்மை மீதும் மிகுந்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அரசுத் தரவுகளின் உண்மைத்தன்மை காக்கப்பட வேண்டும்."

"பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?"

பருவநிலை அகதிகள் என்பது கடந்த சில பத்தாண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. விவசாயம் பொய்த்துப்போன பிறகு, அதில் ஈடுபட்டு வந்தவர்கள் மாற்று வேலைவாய்ப்பைத் தேடி நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர். அந்த நெருக்கடியை நாம் சரிவர சமாளித்தோமா என்பதே விவாதிக்கப்பட வேண்டியது. தற்போது அதே போன்ற நிலைமைதான் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது. மீனவர்களும் தொழில் பொய்த்துப்போனதால் மாற்று வேலைகளைத் தேடி நகரங்களை நோக்கி இடம்பெற வேண்டிய சூழ்நிலை தொடங்கிவிட்டது. மீனவர்கள் வெளியேறுவது என்பது மீன்பிடித் தொழில் மற்றும் வணிகத்தை மட்டும் சார்ந்ததில்லை. மீனவர்கள் கடல் வாழ்க்கை சுழற்சியை நிலையாக வைத்துக்கொள்ள மிகப்பெரிய பங்காற்றுகின்றனர். அதுவும் பாதிப்படையும். அத்தகைய ஒரு இடப்பெயர்வை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

``நம் மீனவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது!" கடல் உயிரியல் விஞ்ஞானி செல்வம் #ClimateEmergency


"கடல்மட்ட உயர்வை எதிர்கொள்ள என்னென்ன செய்யலாம்?"

"கடல்மட்ட உயர்வால் தாழ்வான பகுதிகள்தான் முதலில் பாதிக்கப்படும். இதனால் நிலப்பகுதி இழப்பது மட்டுமல்லாது, அதைச் சார்ந்து இருக்கக்கூடிய பொருளாதாரத்தையும் இழக்க நேரிடும். எனவே, எந்த தாழ்வான பகுதிகள் கடல்மட்ட உயர்வால் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பது தொடர்பாக முறையான ஆய்வுகளை மேற்கொண்டு விவர அறிக்கை தயார்செய்து அதற்கேற்ப நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இதில் மிகவும் பின்தங்கியே உள்ளது."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு