Published:Updated:

ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

க.சுபகுணம்
ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்
ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22-ம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது ஆலி நகராட்சி நிர்வாகம்.

ஜூன் 18 முதல் 20-ம் தேதிவரை அஜய் குப்தாவின் மகன் சூர்யகாந்த் திருமண நிகழ்வும் ஜூன் 20 முதல் 22 வரை அதுல் குப்தாவின் மகன் ஷாஷாங்க்கின் திருமண நிகழ்வும் நடைபெற்றது. 200 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே, திருமண ஏற்பாடுகள் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாகப் பொதுநல வழக்கொன்று போடப்பட்டது. 

ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

மாநில முதல்வர் உட்பட பல பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர். கத்ரீனா கெய்ஃப், பாபா ராம்தேவ் போன்றோரும் அதில் அடக்கம். திருமணத்தை முன்னிட்டு ராம்தேவ் இரண்டு மணிநேர யோகா வகுப்பையும் நடத்திக்கொடுத்திருக்கிறார். 

திருமணத்துக்கு கிட்டத்தட்ட அந்தப் பகுதியிலிருந்த அனைத்து ஹோட்டல்களும் ரிசார்ட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அலங்காரங்களுக்குத் தேவையான மலர்கள் ஸ்விட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 200 கோடி செலவில் நடத்தப்பட்ட இரண்டு திருமணங்களும் இறுதியில் 4,000 கிலோ குப்பைகளை விட்டுச் சென்றுள்ளன. அதைச் சுத்தம் செய்யும் பணி 20 பேரைக் கொண்ட குழுவிடம் கொடுக்கப்பட்டது. இவ்வளவு செலவு செய்தவர்கள் அதில் உற்பத்தியான ஆயிரக்கணக்கான குப்பைகளைச் சுத்தம் செய்ய வெறும் 20 பேரை நியமித்தது ஆச்சர்யம்தான். 

ரூ.200 கோடியில் திருமணம்; 4,000 கிலோ குப்பைகள் - ஆலி நகராட்சியை விழிபிதுங்க வைத்த குப்தா குடும்பம்

திரும்பிய பக்கமெல்லாம், நெகிழிப் பாக்கெட்டுகளும் பாட்டில்களும் கிடக்கின்றன. அது எங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலம். அவை மேயச் செல்லும்போது நெகிழிகளைச் சாப்பிட்டுவிட்டால் என்ன ஆவது, அதற்கு யார் பொறுப்பேற்பது? சுத்தமான மலைப்பகுதியைக் குப்பை மேடாக்கிவிட்டார்களே!" என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் `தி வையர்' என்ற ஆங்கில இணையத்துக்குக் கொடுத்த பேட்டியில் வருந்தியுள்ளார். 

அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவது ஆலி நகராட்சி நிர்வாகத்தின் முன் தற்போது பெரும் சவாலாக நிற்கிறது. 

Vikatan