Published:Updated:

மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!

மழை வந்தால் மட்டுமே, சென்னையின் மொத்த தண்ணீர்ப் பிரச்னையும் தீர்ந்துவிடும் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய தண்ணீர்ப் பஞ்சம் மழை பொய்த்துப்போனதால் மட்டுமே வந்ததல்ல; எனவே மழை மட்டுமே நமக்கு தீர்வுமல்ல.

மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!
மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!

நேற்று சென்னையில் நல்ல மழை. மக்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் மழைக்காதலர்கள் ஓவர்டைம் பார்த்திருக்கிறார்கள். மற்ற ஊர்களில் தொடர்ச்சியாக மழைபொழிவது போன்றும், சென்னையில் மட்டும் பெய்யவில்லை என்றும் ஒரு தோற்றம் இருந்தது. ஆனால், உண்மை என்ன? வழக்கமாக இந்தக் காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையைவிடக் குறைவாகத்தான் மழை பெய்திருக்கிறது. ஆனால், அந்த அளவு சென்னையில்தான் அதிகம். 

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையைவிடக் குறைவாகத்தான் பெய்திருக்கிறது. ஆனால் சென்னை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில்தான் அதிகம். மற்ற இடங்களிலெல்லாம் போதிய மழையில்லை. ஆனால், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது போல மகிழ்ச்சியில் இருக்கிறோம். காரணம், இந்த மழையையே என்ன செய்வதென நமக்குத் தெரியவில்லை. உண்மையில் இந்த அளவு மழையைப் பெறக்கூட நமக்குத் தகுதியில்லை என்பதுதான் முகத்தில் அறையும் யதார்த்தம்.

மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!

Source: http://www.imdchennai.gov.in

மழை பெய்யாததுதான் நம் தண்ணீர்ப் பிரச்னைக்குக் காரணம் என்ற மூட நம்பிக்கையே இவ்வளவு குறைந்த மழை பெய்தாலும் நம்மை சந்தோஷப்பட வைக்கிறது. உண்மையில் இப்போது பெய்திருக்கும் மழையை ஒழுங்காகச் சேமித்தாலே நமக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால், அதைச் செய்யாமல் இயற்கையைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் நாம் தண்ணீரை வீணடிக்கிறோம்? சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

அது ஒரு கேட்டட் கம்யூனிட்டி. 500 வீடுகளுக்கு மேல் அங்குண்டு. தண்ணீரை மிச்சப்படுத்த அங்கு, காலை 7-9 மணியும், மாலை 6-9 வரையும் மட்டுமே தண்ணீர் வரும். டேங்கர் வராவிட்டால் அதுவும் மிஸ் ஆகும் வாய்ப்புண்டு. இரவு தண்ணீர் வரும்போது அனைவரும் முடிந்தவரைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள். மறுநாள் காலை தண்ணீர் வந்தால், பிடித்து வைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடுவார்கள். காரணம், அது சுத்தமான தண்ணீர் இல்லையாம். ஒருவேளை தண்ணீர் லாரி வராமல் போனால் அந்த `அசுத்தமான’ தண்ணீரையே அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்துக் கொள்வார்கள். இப்படி எவ்வளவு தண்ணீர் வீணாகும் என யோசித்துப் பாருங்கள்.

அடுத்து, தண்ணீர் வரும்போது பக்கெட் நிரம்ப வேண்டுமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா குழாய்களையும் திறந்தே வைத்திருப்பார்கள். தண்ணீர் எப்போது வந்தாலும் கிடைத்துவிடுமாம். ஆனால், அப்படியே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போவதும் உண்டு. அப்போது தண்ணீர் வந்தால் பாத்திரங்கள் நிரம்பி தண்ணீர் வீணாகும். ஒரு மணி நேரம் இப்படி விட்டாலே எவ்வளவு தண்ணீர் வீணாகும்? 

வாஷிங் மிஷினில் துணி துவைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். அதனால் நிறைய துணி சேர்ந்ததும் மொத்தமாகத் துவைத்தால்தான் நல்லது. ஆனால், எங்கே தண்ணீர் வராமல் போய்விடுமோ என்றெண்ணி எப்போதெல்லாம் தண்ணீர் வருகிறதோ அப்போதெல்லாம் கொஞ்சம் துணியிருந்தாலும் துவைத்துவிடுகிறார்கள். இந்த சுயநலத்திற்கு கிடைக்கும் பரிசுதான் தண்ணீர்ப் பற்றாக்குறை.

மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!

ஏசியிலிருந்து வெளியாகும் தண்ணீர், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவியிலிருந்து வெளிவரும் தண்ணீர் ஆகியவற்றைப் பிடித்து பயன்படுத்தலாம். ஆனால், அதையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகத்தான் போகின்றன.

சில அபார்ட்மென்ட்களில் மட்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியே வாட்டர் மீட்டர் பொருத்தியிருக்கிறார்கள். இதனால், ஒவ்வொரு வீட்டுக்கும் தினம் இவ்வளவு தண்ணீர் எனக் கணக்கிட்டுத் தரமுடியும். அதிக அளவில் தண்ணீர் எடுத்தால் அந்த வீட்டுக்கு மட்டும் தண்ணீரையோ மின்சாரத்தையோ நிறுத்தி வைக்கும் வாய்ப்புண்டு. ஆனால்,  பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தனி மீட்டர் பொருத்துவதில்லை. அதற்கு ஆகும் செலவைக் காரணமாகச் சொல்லி தவிர்க்கிறார்கள்.

சில வீடுகளில் மட்டும் மழைநீரைச் சேமிப்பதை முறையாகச் செய்கிறார்கள். ஒரு மணி நேரம் மழை பெய்தால் 25,000 முதல் 1 லட்சம் தண்ணீரைச் சேமிக்கும் அடுக்குமாடி வீடுகள் சென்னையிலே உண்டு. தனி வீடென்றாலும் சில ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். பல லட்சம் வீடுகள் கொண்ட சென்னை முழுவதும்தான் மழை பெய்கிறது. ஆனால், அதை ஒரு சிலர் மட்டுமே சேமிக்கிறார்கள். அவர்களால் முடியுமென்றால் ஏன் மற்ற வீடுகளில் செய்ய முடியாது? அதைச் செய்தால் கேரளா நமக்குத் தருவதாகச் சொல்வது போல நாமே மற்றவர்களுக்கும் தண்ணீர் தரலாம்.

மற்றவர்களுக்குத் தண்ணீர் தரலாம் என்பது மிகைப்படுத்திச் சொல்வதில்லை. சென்னை ஓ.எம்.ஆரிலில் ஒரு கேட்டட் கம்யூனிட்டி. அங்கே கழிவுநீரை மறுசுழற்சியாக்கும் STP பிளான்ட் இருக்கிறது. ஆனால் அதில் சுழற்சி செய்யப்படும் நீரின் அளவு அதிகம். அவர்கள் தேவையைவிட அதிக அளவு மறுசுழற்சி நீர் கிடைக்கிறது. அதைச் சென்னை மாநகராட்சிக்குத் தந்துவிடுகிறார்களாம். மெட்ரோவும் லாரி அனுப்பி அந்தத் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. ஆனால், இது நடப்பது ஒரே ஒரு கம்யூனிட்டியில்தான். 

இவையெல்லாம் தனிமனிதன் சார்ந்தவை. போலவே, அரசாங்கமும் தன் பங்குக்கு நிறைய தவறுகள் செய்கிறது.

இப்போது வடநெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் ஓ.எம்.ஆர் சாலைக்குத் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், ஓ.எம்.ஆர் சாலையில் இன்னும் குழாய்களைப் பதிக்கும் பணியே நடக்கவில்லை. கடல்நீரைக் குடிநீராக்கினாலும் எப்படி அதை வீடுகளுக்குக் கொண்டு செல்வார்கள்? மீண்டும் லாரிதானா?

மழைநீரைச் சேமிக்க இந்த அரசாங்கங்கள் என்ன திட்டங்கள் செய்திருக்கின்றன? எத்தனை ஏரிகளை, கால்வாய்களை, ஆறுகளை மீட்டெடுத்திருக்கின்றன? ஒரு மாநிலத்துக்குள்ளிருக்கும் இவற்றை இணைக்க முடியாதபோது பல மாநிலங்கள் உரிமை கொண்டாடும் ஆறுகளை இணைப்பது எப்படி சாத்தியம்?

மழை வந்தால் மட்டும் நம் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? நம் மனசாட்சிக்குச் சில கேள்விகள்!

செயற்கை மழைக்குக்கூட நாம் தயாராகிவிட்டோம்,. அதுகூட ஒரே நேரத்தில்தான் கொட்டித்தீர்க்கப் போகிறது. 2015-ல் பெய்த சென்னை மழையைவிட அதிக அளவுகூட பெய்யப்போவதில்லை. அதையே சேமிக்க முடியாத நாம் செயற்கை மழை பெய்தால் மட்டும் சேமித்துவிடுவோமா? அதேபோலத்தான் யாகம். தண்ணீரைச் சேமிக்கும் முயற்சிகளுக்குச் செலவு செய்யாமல், யாகம் வளர்க்கப் பணத்தைச் செலவு செய்வதெல்லாம் எதில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.

தனிமனிதனோ, சமூகமோ, அரசாங்கமோ... நம் வேலையை நாம் ஒழுங்காகச் செய்யாதவரை எவ்வளவு மழை பெய்தாலும் அது நமக்கான மழை கிடையாது. எவ்வளவு குறைவாக மழைபெய்தாலும் அதைக் குறை சொல்லும் தகுதியும் நமக்குக் கிடையாது. நாம் பயன்படுத்தும் தண்ணீரில் அளவுக்கேற்றபடி அதைச் சேமிக்கும் பழக்கம் நம்மிடமிருக்கிறதா? ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது.

Vikatan